ஐசிசி 2023 உலககோப்பைக்கு பின் ஓய்வு பெறக்கூடிய 4 ஸ்டார் இந்திய வீரர்களின் பட்டியல் – லிஸ்ட் இதோ

Rohith
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் நாட்டுக்காக விளையாடும் வீரர்கள் தங்களது மிகச் சிறப்பான செயல்பாடுகளால் தொடர்ச்சியாக நிறைய சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து விடுவார்கள். ஒரு கட்டத்தில் அந்த அணியின் அங்கமாகவும் தூண்களாகவும் உருவெடுப்பதால் அந்த நட்சத்திர வீரர்கள் இல்லாத அணியை ரசிகர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்தளவுக்கு அணியின் முதுகெலும்பாக மாறி ரசிகர்களின் மனதோடு கலக்கும் வீரர்களும் மனிதர்கள் தானே என்ற வகையில் ஏதோ ஒரு கட்டத்தில் வயது காரணமாகவோ அல்லது ஏதேனும் ஒரு காரணத்தால் ஓய்வுபெற வேண்டிய நிலைமை ஏற்படும்.

Dhoni

- Advertisement -

காலம் காலமாக விளையாடி விட்டு ஓய்வு பெறுவது அந்த வீரருக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவும் அமையும். அந்த வகையில் இந்தியாவுக்காக 3 வகையான உலக கோப்பைகளையும் ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த எம்எஸ் தோனி கடந்த 2019 உலக கோப்பையுடன் ஓய்வு அறிவித்தது நிறைய இந்திய ரசிகர்களால் ஜீரணிக்க முடியாததாக அமைந்தது.

2023 உலககோப்பையுடன்:
மேலும் இந்த நவீன கிரிக்கெட்டில் 3 வகையான போட்டிகளுடன் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களையும் சேர்த்து விளையாட வேண்டியுள்ளதால் சில வீரர்கள் பணிச்சுமை காரணமாக யூகிக்கப்படும் வயதுக்கு முன்பாகவே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஓய்வு பெறுகிறார்கள். எடுத்துக்காட்டாக சமீபத்தில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் சுமாரான பார்ம் காரணமாக மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்ட நிலையில் பென் ஸ்டோக்ஸ் இளம் வயதிலேயே ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அதிர்ச்சியாக அமைந்தது.

Ben Stokes ODI

மேலும் எப்போதுமே பெரும்பாலான வீரர்கள் ஐசிசி உலகக் கோப்பையை மையமாக வைத்துதான் தங்களது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார்கள். அந்த வகையில் வரும் 2023 பிப்ரவரியில் இந்திய மண்ணில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பையுடன் ரசிகர்கள் அதிர்ச்சியடையும் வகையில் ஓய்வு பெறக்கூடிய 4 இந்திய வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

4. ஷிகர் தவான்: கடந்த 2010இல் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறிய இவர் கடந்த 2013இல் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனியால் தொடக்க வீரராக களமிறக்கும் வாய்ப்பை பெற்றது முதல் மிகச் சிறப்பாக செயல்பட்டு நிரந்தரமாக இந்திய அணியில் இடம் பிடித்தார். இந்தியா வென்ற 2013 சாம்பியன்ஸ் டிராபியிலும் 2017 சாம்பியன்ஸ் ட்ராபியிலும் தங்க பேட் விருதை வென்ற அவர் ரோகித் சர்மாவின் மானசீக பார்ட்னராக செயல்பட்டு வந்தார்.

Dhawan

இருப்பினும் கடந்த 2019 உலக கோப்பையில் காயமடைந்து வெளியேறிய அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற கேஎல் ராகுல் அவரைவிட மிகச்சிறப்பாக செயல்பட்டு அந்த இடத்தை தனதாக்கியுள்ளார். அப்படி அவரை விட இளம் வீரர் கிடைத்து விட்டதாலும் 36 வயதை கடந்து விட்டதாலும் முன்பைப் போல் அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் ரன்கள் குவிக்க தடுமாறுகிறார் என்பதாலும் ஏற்கனவே இவருக்கு டி20 வாய்ப்பு கிடைப்பதில்லை.

- Advertisement -

அதனால் பெயருக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே, இலங்கை அணிகளுக்கு எதிராக கேப்டன்ஷிப் பொறுப்பை ஆசையாக கொடுத்து அடுத்த தொடரில் தேர்வுக்குழு கழற்றிவிட்டு வருகிறது. தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வரும் இவர் 2027 உலகக்கோப்பையில் 40 வயதை கடந்து விடுவார் என்பதால் அடுத்த வருடம் ஓய்வு பெறுவதற்கு 99% வாய்ப்புள்ளது.

Hardik Pandya 1

3. ஹர்டிக் பாண்டியா: 2016இல் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2018இல் 3 வகையான இந்திய அணியிலும் அபாரமாக செயல்பட்ட இவர் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் தரமான வேகப்பந்து வீச்சாளர் ஆல்-ரவுண்டர் கிடைத்துவிட்டார் என்று நம்பிக்கை கொடுத்தார். ஆனால் 2019 உலக கோப்பைக்கு பின் சந்தித்த காயத்தால் பந்து வீச முடியாமல் பேட்டிங்கிலும் தடுமாறிய அவர் ஐபிஎல் 2022 கோப்பையை வென்று இந்திய அணியில் மீண்டும் விளையாடி வருகிறார்.

- Advertisement -

இருப்பினும் இப்போதும் முழுமையாக பந்துவீச முடியாமல் தவிப்பதால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான வாய்ப்பு 99% குறைந்து போயுள்ளது. மேலும் டி20 கிரிக்கெட்டை அதிகப்படியாக விரும்பக் கூடிய இவர் 2023 உலகக் கோப்பையுடன் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என்று ஏற்கனவே முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சமீபத்தில் மறைமுகமாக கூறியுள்ளார்.

Rohith

2. ரோஹித் சர்மா: ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறினாலும் 2013இல் கேப்டன் தோனியால் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற இவர் அந்நியனாக விஸ்வரூபம் எடுத்து 3 இரட்டை சதங்கள், ஒரே உலக கோப்பையில் 5 சதங்கள் உட்பட ஏராளமான சாதனைகளையும் சரித்திர வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்து இன்று இந்தியாவின் கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ளார். 2019க்குப்பின் டெஸ்ட் போட்டிகளிலும் முத்திரை பதித்துள்ள அவர் அடுத்த வருடம் 36 வயதை நெருங்குவதால் பழைய பார்மின்றி ரன்கள் எடுக்க தடுமாறுகிறார் என்பதுடன் பிட்னெஸ் காரணமாக காயம் மற்றும் ஓய்வெடுப்பதால் நிறைய போட்டிகளை தவற விடுகிறார்.

அதனால் ஏதேனும் ஒரு கிரிக்கெட்டில் ஓய்வுபெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள அவர் 2027 உலக கோப்பையில் 40 வயதை கடந்து விடுவார் என்பதால் அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பையுடன் விடை பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக அவர் தலைமையில் இந்தியா கோப்பையை வெல்லும் பட்சத்தில் நிச்சயமாக ரசிகர்கள் அதிர்ச்சியடையும் வகையில் நல்ல பார்மில் இருக்கும்போதே ஓய்வு முடிவை அறிவிக்கலாம்.

Kohli

1. விராட் கோலி: 2008இல் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் ரன் மெஷினாக 23000க்கும் மேற்பட்ட ரன்களையும் 70 சதங்களையும் விளாசி நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்து ஏற்கனவே தன்னை ஜாம்பவானாக நிரூபித்துள்ள இவர் கடந்த 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறார். மேலும் பணிச்சுமையால் கேப்டன்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்த போதிலும் எந்த மாற்றத்தையும் காண முடியாமல் தவிக்கும் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் என்றும் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் ஏதேனும் ஒருவகையான கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவேன் என்றும் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் 33 வயதை கடந்துவிட்ட இவரால் 2027 உலக கோப்பையில் விளையாட முடியும் என்றாலும் ஏதோ ஒரு வகையான கிரிக்கெட்டில் ஓய்வுபெற வேண்டிய நிலைமை இப்போதே ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஏற்கனவே 11000+ ரன்கள் விளாசி திருப்தியடையும் வகையில் சாதித்துள்ள அவர் தமக்கு மிகவும் பிடித்த டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் 10000 ரன்களைக் கூட தாண்டவில்லை. எனவே பென் ஸ்டோக்ஸ் போல டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடரும் முடிவையும் 2023 உலகக் கோப்பைக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் முடிவையும் எடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

Advertisement