சபாஸ் சரியான போட்டி ! இந்தியாவுக்கு எதிராக களமிறங்கிய பும்ரா உள்ளிட்ட 4 வீரர்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் விவரம் இதோ

IND vs LEI County Warm Up Match
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அங்கு 1 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. அதில் முதலாவதாக வரும் ஜூலை 1-ஆம் தேதி கடந்த வருடம் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட 5-வது போட்டியில் இந்தியா களமிறங்குகிறது. கடந்த முறை ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்துக்கு எதிராக விராட் கோலி தலைமையிலான இந்தியா அபாரமாக செயல்பட்டு 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* (5) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஆனால் இம்முறை புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் அதுவும் புதிய கேப்டனாக பொறுப்பேற்று அதிரடியான வெற்றிகளை குவிக்க துவங்கியுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான வலுவான இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

எனவே விராட் கோலி தலைமையில் முக்கால்வாசி பெற்ற வெற்றியை இந்த கடைசி போட்டியில் பினிஷிங் செய்து 15 வருடங்களுக்கு பின் இங்கிலாந்து மண்ணில் ரோஹித் தலைமையில் இந்தியா வெற்றிக்கொடி நாட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இதற்காக கடந்த வாரமே பர்மிங்காம் நகரை சென்றடைந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள ராகுல் டிராவிட் மேற்பார்வையில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

- Advertisement -

பயிற்சி போட்டி:
அந்த அனல் பறக்க போகும் டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்கும் 4 நாட்கள் பயிற்சி டெஸ்ட் போட்டி ஜூன் 23-ஆம் தேதியான இன்று இங்கிலாந்தில் உள்ள லீசெஸ்டர்ஷைர் நகரில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து மதியம் 3.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் களமிறங்கும் போது இந்திய பாரம்பரிய முறைப்படி இருபுறமும் பெண்கள் வரிசையாக நின்று நடனமாடி இந்தியக் கொடியை பறக்க விட்டு மைதானத்திற்குள் வரவேற்றனர்.

எதிரணியில் பும்ரா:
ஆனால் அந்த போட்டி துவங்கிய போது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. ஏனெனில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திரங்கள் ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்னா, ரிஷப் பண்ட் மற்றும் மூத்த வீரர் செடேஸ்வர் புஜாரா ஆகிய 4 இந்திய வீரர்கள் எதிரணியான லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாட பீல்டிங் செய்ய களமிறங்கினார்கள். லீசெஸ்டர்ஷைர் அணியில் இந்தியாவுடன் போட்டி போடும் அளவுக்கு ஒரு சில தரமான வீரர்கள் குறைவாக இருந்த காரணத்தாலும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களும் களமிறங்கி இங்கிலாந்து போட்டிக்கு முன்பாக தரமான பயிற்சி எடுக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

- Advertisement -

லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடிய போதிலும் இந்திய வீரர்கள் வழக்கம் போல இந்திய ஜெர்சியை அணிந்து விளையாடி வருகிறார்கள். இதையடுத்து துவங்கிய அப்போட்டியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதில் முதல் ஓவரை ரோகித் சர்மா எதிர்கொள்ள அவருக்கு எதிராக நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச அதை ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்ததை பார்த்த இந்திய ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.

இதைப் பார்த்த ரசிகர்கள் சபாஷ் இதுதான் சரியான போட்டி என்று சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார்கள். ஏனெனில் எதிரணி வீரர்களுடன் மோதுவது மட்டுமல்லாமல் இந்திய அணியில் இருக்கும் தரமான வீரர்களுடன் மோதுவது உண்மையாகவே மிகச் சிறந்த பயிற்சியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா ரோகித் சர்மா போன்றவர்கள் இந்திய அணிக்காகவும் ஐபிஎல் தொடரிலும் ஒரே அணியில் தான் விளையாடுகிறார்கள்.

அப்படிப்பட்ட அவர்கள் இந்த போட்டியின் வாயிலாக எதிரெதிர் அணியில் விளையாடி தங்களின் திறமையால் நேருக்கு நேர் மோதிக் கொள்வதை பார்ப்பது உண்மையாகவே ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ரசிகர்கள் இந்த போட்டியை லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணியின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கமான “பாக்ஸஸ் டிவி” சேனலில் இலவசமாக நேரடியாக பார்க்கலாம். இப்போட்டியில் சற்று முன் வரை 4 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்திருந்த போது கில் அவுட்டானதால் ரோகித் சர்மா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் பேட்டிங் செய்து வருகிறார்கள்.

Advertisement