ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும் 2022 ஆசிய கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியுள்ளது. இத்தனைக்கும் எதிரணிகளை காட்டிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இருந்தும் தவறான அணித் தேர்வு, சுமாரான கேப்டன்ஷிப் போன்ற அம்சங்கள் இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இதனால் இங்கேயே கோப்பையை வெல்ல முடியாத இந்தியா ஆஸ்திரேலியாவுக்குச் சென்று எப்படி உலக கோப்பையை வெல்லப்போகிறது என்ற கவலை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. மேலும் உலகக்கோப்பையை வெல்வதற்கு இந்த தொடரில் சுமாராக செயல்பட்ட முக்கிய வீரர்களை நீக்குமாறு நிறைய ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் அணி நிர்வாகத்தின் ஆதரவு இருப்பதால் இந்த ஆசிய கோப்பையில் சுமாராக செயல்பட்டும் டி20 உலக கோப்பையில் தேர்வாவதற்கு அதிக வாய்ப்புள்ள வீரர்களை பற்றி பார்ப்போம்:
4. யுஸ்வென்ற சஹால்: சுமாரான பார்ம் காரணமாக கடந்த டி20 உலகக்கோப்பையில் கழற்றிவிடப்பட்ட இவர் அதன்பின் கடினமாக உழைத்து சமீபத்திய ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் உட்பட அதிக விக்கெட்டுகளை எடுத்து ஊதா தொப்பியைக் என்று கம்பேக் கொடுத்தார். அதன்பின் பங்கேற்ற இருதரப்பு தொடர்களில் அசத்திய இவர் இந்த முக்கியமான ஆசிய கோப்பையில் பங்கேற்ற 4 போட்டிகளில் 16 ஓவர்களை வீசி 127 ரன்களை கொடுத்து வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து 7.94 என்ற எக்கனாமியில் சுமாராகவே பந்து வீசினார்.
அதில் 3 விக்கெட்டுகளை ஒரே போட்டியில் எடுத்த இவர் அனைத்து போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பந்துவீசியிருந்தால் நிச்சயமாக இந்தியா இறுதிப் போட்டியில் விளையாடியிருக்கும். இருப்பினும் முதன்மை சுழல்பந்து வீச்சாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள இவர் அஷ்வின், ஜடேஜா ஆகியோரை விட டி20 உலகக்கோப்பையில் முதல் சுழற்பந்து வீச்சாளராக தேர்வு செய்யபட அதிக வாய்ப்புள்ளது.
3. புவனேஸ்வர் குமார்: துல்லியத்துக்கு பெயர்போன இவர் இந்த ஆசிய கோப்பையில் ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்டாலும் முக்கியமான சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் முக்கியமான 19வது ஓவரில் முறையே 25, 21 ரன்கள் தேவைப்பட்டபோது அனுபவத்தை காட்டாமல் முறையே 19, 14 ரன்களை வாரி வழங்கி வெற்றியை தாரை வார்த்தார்.
இப்படி பெரும்பாலான போட்டிகளில் கடைசி கட்ட ஓவர்களில் அடிவாங்கும் இவர் பவர்ப்ளே ஓவர்களில் புதிய பந்தை ஸ்விங் செய்து விக்கெட்டுகளை எடுக்கும் ஒரே காரணத்துக்காகவும் சீனியர் பவுலர் என்பதற்காகவும் டி20 உலகக்கோப்பையில் பும்ராவுடன் களமிறங்க தேர்வு செய்யப்படுவார் என்று உறுதியாக நம்பப்படுகிறது.
2. ரிஷப் பண்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுகிறார் என்ற ஒரே காரணத்துக்காக சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களின் வாய்ப்பையும் சேர்த்து விளையாடும் இவர் இதுவரை 58 டி20 போட்டிகளில் விளையாடியும் ஒருமுறை கூட மனதில் நிற்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கவில்லை. இருப்பினும் இவர் மீது குருட்டுத்தனமாக தொடர்ந்து நம்பிக்கை வைத்து வரும் அணி நிர்வாகம் இந்த தொடரில் நல்ல பார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக்கை கழற்றிவிட்டு வாய்ப்பளித்ததில் அவரும் வழக்கம்போல சொதப்பலாக செயல்பட்டார்.
இந்த தொடரில் 4 போட்டிகளில் வெறும் 51 ரன்களை மட்டுமே எடுத்திருந்தாலும் இளம் விக்கெட் கீப்பர், வருங்காலம், முன்னாள் வீரர்களின் ஆதரவு, அணி நிர்வாகத்தின் ஆதரவு போன்ற அம்சங்களால் டி20 உலகக்கோப்பையில் முதல் விக்கெட் கீப்பராக இவர் தேர்வு செய்யப்பட நிறைய வாய்ப்புள்ளது.
1. கேஎல் ராகுல்: 2019க்குப்பின் நிரந்தர தொடக்க வீரராக விளையாடி வரும் இவர் தனது மார்க்கெட்டையும் இடத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக சமீப காலங்களில் அணியின் வெற்றியை பற்றி கவலைப்படாமல் பெரிய ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் விளையாடி தோல்விக்கு காரணமாக அமைவது அப்பட்டமாக அனைவருக்கும் தெரிந்து விட்டது. ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் காயத்திலிருந்து குணமடைந்து திரும்பிய இவர் பலவீனமான ஜிம்பாப்வேவுக்கு எதிராகவும் இந்த ஆசிய கோப்பையில் ஹாங்காங்க்கு எதிராகவும் திண்டாடியது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.
அதனால் பெரிய பெயரை வைத்துக்கொண்டு முக்கிய போட்டிகளில் சொதப்பும் இவரை அணியிலிருந்து நீக்குமாறு ஏராளமான ரசிகர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ஆனாலும் தற்போதைய துணை கேப்டன், ரோகித் சர்மாவுக்கு அடுத்த வருங்கால கேப்டன், க்ளாஸ் பேட்ஸ்மேன், முன்னாள் வீரர்களின் ஆதரவு, அணி நிர்வாகத்தின் அதிகப்படியான ஆதரவு போன்ற அம்சங்களால் டி20 உலகக்கோப்பையில் இவர் தேர்வாவதை யாராலும் தடுக்க முடியாது என்றே கூறலாம்.