இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது வரும் நவம்பர் 14-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. அதற்கடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்திற்கு காத்திருக்கும் 3 வீரர்கள் :
இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக தவறவிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டத்தின் போது பீல்டிங் செய்கையில் காயமடைந்த அவர் தற்போது அதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்.
இதன் காரணமாக இன்னும் ஒரு மாத காலம் அவர் ஓய்வெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை அவர் தவறவிடும் பட்சத்தில் அவரது இடத்தினை நிரப்ப காத்திருக்கும் மூன்று வீரர்கள் குறித்த தகவலை இங்கு காணலாம்.
திலக் வர்மா : டி20 போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்காக அசத்தலான பார்மை வெளிப்படுத்தி வரும் திலக் வர்மா ஆஸ்திரேலிய தொடரின் போது சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் ஒருநாள் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை நிர்வாகத்திடம் உள்ளது. அதோடு உள்ளூர் போட்டிகளிலும் அவர் மிகச் சிறப்பாக விளையாடி உள்ளதால் சொந்த மண்ணில் இந்த வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவர் அதை சரியாக பயன்படுத்தி கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
ரிஷப் பண்ட் : இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனான ரிஷப் பண்ட் கடைசியாக இலங்கை அணிக்கு எதிராக 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார். அதன் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடி வரும் அவர் இங்கிலாந்து தொடரின் போது அற்புதமான பார்மை வெளிப்படுத்தியிருந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டியில் 31 ஆட்டங்களில் விளையாடி 871 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 30-க்கு மேலும், ஸ்ட்ரைக் ரேட் 100-க்கு மேலும் உள்ளதால் நிச்சயம் அவர் ஷ்ரேயாஸ் ஐயருக்கான மாற்று வீரர்களின் தேர்வில் இருப்பார் என்பது உறுதி.
இதையும் படிங்க : இதுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. தெ.ஆ அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் குறித்து – முகமது சிராஜ் பேச்சு
ரியான் பராக் : அசாம் சேர்ந்த ஆல் ரவுண்டரான ரியான் பராக் ஏற்கனவே இந்திய அணிக்காக விளையாடியுள்ள அனுபவம் உடையவர். அதோடு மிடில் ஓவர்களில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்யும் அவர் பந்து வீச்சிலும் கை கொடுப்பார் என்பதனால் அவரை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 187 ரன்கள் அடித்த அவர் மூன்று அரை சதங்களை விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



