
வரலாற்றின் 8வது ஐசிசி டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் தற்போது முதன்மை சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும் கடைசி 4 அணிகளை தீர்மானிக்கும் முதல் சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் சூப்பர் 12 சுற்றில் பங்கேற்கும் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட முதன்மை அணிகள் பயிற்சி போட்டிகளில் மோதி வருகின்றன. அதில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்ல வேண்டுமென்ற முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் கடைசி ஓவரில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
அந்த நிலையில் அக்டோபர் 19ஆம் தேதியன்று பிரிஸ்பேன் நகரில் இருக்கும் புகழ் பெற்ற காபா மைதானத்தில் இந்தியா தன்னுடைய 2வது போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆனால் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு அதே மைதானத்தில் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி முதல் இன்னிங்ஸ்க்கு பின் ஜோராக வந்த மழையால் மொத்தமாக ரத்து செய்யப்பட்டது. அதனால் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடைபெற வேண்டிய இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதவிருந்த போட்டி முதலில் தாமதமாக துவங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கடைசியில் தொடர் மழை காரணமாக டாஸ் கூட முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
மழை ஆரம்பம்:
அதே மைதானத்தில் அதைத் தொடர்ந்து நடைபெற இருந்த வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவிருந்த பயிற்சிப் போட்டியும் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. மொத்தத்தில் ஒரே நாளில் 3 போட்டிகள் வரிசையாக மழையால் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதை விட கடந்த ஒரு வருடமாக எதிர்பார்த்து 2 மாதங்களுக்கு முன்பாகவே டிக்கெட்டுகளை வாங்கி ஆவலுடன் காத்திருக்கும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் இப்போதே வேலையை ஆரம்பித்துள்ள மழை இருநாட்டு ரசிகர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் அக்டோபர் 23ஆம் தேதியன்று 1 லட்சம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் மழை பெய்யவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. குறிப்பாக போட்டி நேரத்தில் 80 சதவீதம் மழைக்கான வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது ரசிகர்களை கவலையடைய வைத்தது. இருப்பினும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வானிலை அடிக்கடி மாறக்கூடியது என்பதால் இப்போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
இந்நிலையில் அக்டோபர் 23ஆம் தேதியன்று மெல்போர்ன் நகரில் நிலவக் கூடிய வானிலையை மீண்டும் ஒரு முறை பார்ப்போம். ஞாயிற்றுக் கிழமையான அன்று உள்ளூர் நேரப்படி போட்டி மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெற உள்ளது. அந்த சமயத்தில் இரவு 7 மணிக்கு மெல்போர்ன் நகரில் 75% என்ற அளவில் இருக்கும் மழைக்கான வாய்ப்பு 8, 9, 10, 11, 12, 1, 2 மணி வரை முறையே 76%, 81%, 83%, 92%, 92%, 90% என மேலும் அதிகமாகும் என்று அந்நாட்டு வானிலை மையம் தெரிவிக்கிறது.
அதிலும் குறிப்பாக 9 மணிக்கு மேல் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் குறைந்தபட்சம் முடிவு காணும் வகையில் இப்போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்டு நடைபெறுமா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. இதை அறியும் ரசிகர்கள் இதற்காகவா இவ்வளவு நாள் காத்திருந்தோம் என்பது போல் இப்போதே சோகத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக தங்களுக்கு வரலாற்று தோல்வியை பரிசளித்து தலைகுனிய வைத்த பாகிஸ்தானை இம்முறை இந்தியா பழி தீர்க்குமா என்பதை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருந்த இந்திய ரசிகர்கள் இந்த செய்தியால் மிகவும் ஏமாற்றம் அடைகின்றனர்.
இருப்பினும் இயற்கை அன்னை எப்போதுமே புரியாத புதிர்களை கொண்ட அழகிய மனம் கொண்டவள் என்பதால் இந்த போட்டியை குறைந்தபட்சம் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்துவதற்கு வழி விடுமாறு ரசிகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். அதற்கு இயற்கை அன்னை செவி சாய்ப்பார்களா என்று நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.