2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் கடைசி முறையாக விளையாடுவார்கள் என கருதப்படும் 3 இந்திய வீரர்கள்

Bhuvneshwar-Kumar-1
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாடும் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று மிகப்பெரிய லட்சியத்துடன் கடினமாக உழைக்கும் வீரர்கள் சாதாரண போட்டிகளில் விளையாடுவதை விட உலக கோப்பையில் விளையாடுவதை மிகப்பெரிய பெருமையாகவும் கவுரவமாகவும் கருதுவார்கள். அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்துள்ள அத்தனை பேரும் ஏதோ ஒரு வகையில் தங்களது கடினமான உழைப்பின் பரிசாக நாட்டுக்காக விளையாட உள்ளனர்.

IND

இதில் இடம் பிடித்துள்ள பெரும்பாலான வீரர்கள் 30+ வயதில் இருப்பதால் ஒருவேளை இந்த தொடரில் சுமாராக செயல்பட்டால் கூட வரும் காலங்களில் ஐபிஎல் போன்ற தொடர்களில் கடினமாக உழைத்து சிறப்பாக செயல்பட்டால் அடுத்ததாக 2024இல் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெறலாம். ஆனால் சில வீரர்களுக்கு அதிக வயது மற்றும் தற்போதைய பார்ம் காரணமாக இந்த உலகக் கோப்பையே கடைசியாக இருக்கலாம். அது போன்ற வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

3. புவனேஸ்வர் குமார்: கடந்த 10 வருடங்களாக இந்திய வேகப்பந்து வீச்சு துறையில் முதன்மை வீரராக இடம் பிடித்து வரும் இவர் புதிய பந்தை ஸ்விங் செய்து துல்லியமாக பந்துவீசி குறைவான ரன்களை கொடுப்பவர் என்ற பெயரைப் பெற்றவர். இருப்பினும் 2018இல் சந்தித்த காயத்திற்கு பின் பார்மை இழந்து இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியிலிருந்து வெளியேறிய இவர் ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டதால் டி20 அணியிலும் கழற்றிவிடப்பட்டார்.

Bhuvneshwar Kumar

ஆனாலும் கடினமாக உழைத்த அவர் 2022 ஐபிஎல் தொடரில் மீண்டும் துல்லியமாக பந்துவீசி பார்முக்கு திரும்பி சமீபத்திய தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் அசத்தலாக செயல்பட்டார். அதனால் ஆசிய கோப்பையில் தேர்வு செய்யப்பட்ட இவர் சூப்பர் 4 சுற்றில் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

இருப்பினும் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யப்பட்டுள்ள இவர் தற்போது 32 வயது மட்டுமே நிறைந்திருந்தாலும் பும்ரா, ஹர்ஷல் படேல், அர்ஷிதீப் சிங் போன்ற அடுத்த தலைமுறை டெத் பவுலர்கள் வந்து விட்டதால் அடுத்த உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகம் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த உலகக்கோப்பையில் தடுமாறி டெத் ஓவர்களில் ரன்களை கொடுக்கும் பலவீனத்தை சரி செய்யாவிடில் நிச்சயம் இவரை அடுத்த முறை பார்க்க முடியாது.

Ravichandran Ashwin

2. ரவிச்சந்திரன் அஷ்வின்: 2017 வரை இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னராக இருந்த இவர் கேப்டன் விராட் கோலியின் வருகையால் ஒருசில போட்டிகளில் சொதப்பியதால் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் கடினமாக உழைத்துக் கொண்டிருந்த அவருக்கு பரிசாக 2021 உலக கோப்பையில் 4 வருடங்கள் கழித்து நேரடியாக தேர்வாகும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் அதன்பின் நடைபெற்ற டி20 தொடர்களிலும் முழுமையான வாய்ப்பு பெறாத அவர் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதாலேயே மீண்டும் இம்முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

கடந்த டி20 உலக கோப்பைக்கு பின் இதர இந்திய ஸ்பின்னர்களைக் காட்டிலும் 10 போட்டிகளில் 14 விக்கெட்களை 6.10 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்ததால் பிஷ்னோய் போன்ற இளம் வீரரை தாண்டி இவருடைய அனுபவத்திற்கு மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது 35 வயதை கடந்துள்ள இவருக்கு இந்த உலகக் கோப்பையிலேயே சஹால், அக்சர் போன்றவர்கள்கள் இருப்பதால் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினமாக பார்க்கப்படுகிறது. எனவே அடுத்த உலகக் கோப்பையில் இவரை பார்ப்பது கடினமாகும்.

Dinesh-Karthik

1. தினேஷ் கார்த்திக்: இந்த உலகக் கோப்பையில் இவர் விளையாடுவார் என்று கடந்த வருடம் இந்நேரம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனெனில் 2019இல் கடைசியாக விளையாடி ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக அவதரித்த இவரது கேரியர் முடிந்ததாக அனைவரும் நினைத்த வேளையில் தம்மால் சாதிக்க முடியும் என்று நம்பினார். அதற்காக கடினமாக உழைத்த இவர் ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக மிகச் சிறந்த ஃபினிஷராக செயல்பட்டதால் 3 வருடங்கள் கழித்து இந்திய அணிக்கு தேர்வானார்.

அதில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு அசத்திய இவருக்கு நிறைய முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அணி நிர்வாகம் ஆதரவளிக்கிறது. ஏனெனில் 37 வயதுக்கு பின் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள், 2 ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரராக சாதனை படைத்துள்ள இவர் தற்போது வாழ்நாளின் உச்சக்கட்ட பார்மில் இருக்கிறார். அடுத்த உலகக்கோப்பையில் இவர் 41 வயதை தொட்டு விடுவார் என்பதால் இதுவே அவருடைய கடைசி தொடராக இருக்கும்.

Advertisement