சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது ஓய்வின் காரணமாக தற்போது இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி எவ்வாறு இந்த இங்கிலாந்து தொடரை எதிர்கொள்ளப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டிருந்தது.
இந்தியா இங்கிலாந்து போட்டியில் நடைபெற்ற அரிதான நிகழ்வு :
இவ்வேளையில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி துவங்கிய இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 471 ரன்களை குவித்து அசத்தியது. இந்திய அணியின் இந்த சிறப்பான செயல்பாடு ரசிகர்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் ஆகிய மூவரும் சதம் அடித்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். பந்துவீச்சை பொறுத்தவரை ஜஸ்ப்ரீத் பும்ரா இதுவரை மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
ஆனால் அவரை தவிர்த்து வேறு எந்த இந்திய பந்துவீச்சாளரும் விக்கெட்டை வீழ்த்தாதது ஒரு பின்னடைவு தான். இருந்தாலும் இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை நிச்சயம் இந்திய அணி இனிவரும் நாட்களில் கட்டுக்குள் வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது 148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நடக்காத ஒரு அரிதான நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அந்த வகையில் இந்த போட்டியில் நடந்த சம்பவம் யாதெனில் : முதல் இன்னிங்சில் இந்திய அணிக்காக விளையாடிய டாப் 6 வீரர்களில் மூன்று வீரர்கள் சதம் அடித்தனர். அதேபோன்று இந்த போட்டியில் அறிமுகமாகிய சாய் சுதர்சன் மற்றும் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பிய கருண் நாயர் என இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகினர். இதன்மூலம் ஒரு இன்னிங்ஸ் டாப் 6 வீரர்களில் மூன்று பேர் சதமும், இரண்டு பேர் டக் அவுட்டானதும் இதுவே முதல்முறை. இப்படி ஒரு அரிதான நிகழ்வு இந்த போட்டியில் அரங்கேறியுள்ளது.
இதையும் படிங்க : தப்பான மெசேஜ் போனா இப்படித்தான் ஆகும்.. பண்ட் ஆட்டமிழக்க கம்பீர் தான் காரணம் – சுட்டிக்காட்டிய தினேஷ் கார்த்திக்
இன்னும் 262 ரன்கள் பின் தங்கிய நிலையுடன் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை துவங்க இருக்கும் இங்கிலாந்து அணியை விரைவில் வீழ்த்தி இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



