சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய சஹால் ! தோல்வி முகத்துடன் படைத்த புதிய ஆல் டைம் ஐபிஎல் சாதனை

Yuzvendra Chahal Purple Cap
- Advertisement -

ரசிகர்களை கடந்த 2 மாதங்களாக மகிழ்வித்து வந்த ஐபிஎல் 2022 தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நேற்று மே 29-ஆம் தேதி இரவு 8 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்றது. அதில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஏஆர் ரகுமான் போன்ற நட்சத்திரங்களின் நிறைவு விழாவுடன் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் 20 ஓவர்களில் குஜராத்தின் தரமான பந்துவீச்சுக்கு ஈடுகட்ட முடியாமல் 130/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு ஜெய்ஸ்வால் அதிரடியாக 22 (16) ரன்கள் எடுத்தாலும் அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 14 (11) தேவதூத் படிக்கல் 2 (10) என முக்கிய பேட்ஸ்மேன் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

அந்த சமயத்தில் காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் 5 பவுண்டரி உட்பட 39 (35) ரன்களில் அவுட்டானதால் 79/4 என தடுமாறிய அந்த அணியை சிம்ரோன் ஹெட்மையர் 11 (12) ரியான் பராக் 15 (15) போன்ற வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்டனர். அந்த அளவுக்கு ராஜஸ்தானை பந்துவீச்சில் மடக்கிப் பிடித்த குஜராத் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

குஜராத் வெற்றி:
அதை தொடர்ந்து 131 என்ற சுலபமான இலக்கை துரத்திய குஜராத் வெறும் 18.1 ஓவரிலேயே 133/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு தொடக்க வீரர் ரித்திமான் சாஹா 5 (7) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த மேத்யூ வேட் 8 (10) ரன்களில் நடையை கட்டினார். அதனால் 23/2 என சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணியை அடுத்ததாக களமிறங்கி தூக்கி நிறுத்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 பவுண்டரி 1 சிக்சருடன் 34 (30) ரன்கள் எடுத்து வெற்றி உறுதி செய்து ஆட்டமிழந்தார். மறுபுறம் நங்கூரமாக நின்ற சுப்மன் கில் 45* (43) ரன்களும் கடைசி நேரத்தில் டேவிட் மில்லர் அதிரடியாக 3 பவுண்டரி 1 சிக்சருடன் 32* (19) ரன்களும் எடுத்து மிரட்டல் பினிஷிங் கொடுத்தனர்.

இந்த வெற்றியால் கேப்டன்ஷிப் அனுபவம் இல்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் சொல்லி அடித்த குஜராத் டைட்டன்ஸ் இறுதிப் போட்டியிலும் வென்று ஐபிஎல் 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை அதுவும் தனது சொந்த மண்ணில் ஒரு லட்சம் ரசிகர்களுக்கு முன்னிலையில் முத்தமிட்டு சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு 34 ரன்கள் மற்றும் 3 விக்கெட் எடுத்து முக்கிய பங்காற்றிய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

ராஜஸ்தான் பரிதாபம்:
மறுபுறம் 2008க்கு பின் 13 வருடங்கள் கழித்து இறுதிப்போட்டிக்கு வந்த ராஜஸ்தான் பேட்டிங்கில் சொதப்பியதால் 2-வது கோப்பையை வெல்வதற்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது. இருப்பினும் அந்த அணிக்காக 863 ரன்களைக் குவித்து பேட்டிங்கில் ரன் மழை பொழிந்த ஜோஸ் பட்லர் தொடர் நாயகன் மற்றும் ஆரஞ்சு தொப்பியை வென்றார். அதேபோல் பந்துவீச்சில் பங்கேற்ற 17 போட்டிகளில் 27 விக்கெட்டுககளை 7.75 என்ற எக்கனாமியில் எடுத்த இந்திய வீரர் யுஸ்வென்ற சஹால் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து ஊதா தொப்பியை வென்று சாதனை படைத்தார்.

கடந்த 2013 – 2021 வரை பெங்களூரு அணியில் மிகச் சிறப்பாக பந்து வீசி அந்த அணியின் வெற்றிகளுக்கு பங்காற்றிய அவர் கடந்த 2021இல் சுமாராக பந்து வீசியதால் அந்த அணி நிர்வாகம் கழற்றி விட்டது. அதே காரணமாக கடந்த வருடம் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் அவர் சேர்க்கப்படவில்லை. ஆனாலும் இந்த வருடம் தன்னை நம்பி வாங்கிய ராஜஸ்தானுக்கு ஆரம்பம் முதலே சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய அவர் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்கள் எடுத்து ஊதா தொப்பியை தன்வசம் வைத்திருந்தார்.

- Advertisement -

ஆல் டைம் சாதனை:
இருப்பினும் அவருக்கு போட்டியாக பெங்களூரு அணிக்காக விளையாடிய இலங்கையின் ஹசரங்கா 26 விக்கெட்டுகளை எடுத்து கடைசி நேரத்தில் முதலிடம் பிடித்தார். அதனால் ஊதா தொப்பையை பறிகொடுத்த அவர் நேற்றைய பைனலில் கடைசி நேரத்தில் தனது 4-வது ஓவரில் 34 ரன்கள் எடுத்து மிரட்டிய பாண்டியாவை அவுட் செய்ததால் மீண்டும் முதலிடம் பிடித்து ஊதா தொப்பியை வென்றார். இதனால் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தனது இடத்தை தற்போது அவர் உறுதி செய்துள்ளார்.

1. மேலும் இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஊதா தொப்பியை வென்ற 3-வது சுழல்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. பிரக்கியன் ஓஜா : 2010
2. இம்ரான் தாஹிர் : 2019
3. யுஸ்வென்ற சஹால் : 2022*

2. அதைவிட ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த சுழல்பந்து வீச்சாளர் என்ற புதிய வரலாற்று ஆல்ட டைம் சாதனையையும் அவர் படைத்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. யுஸ்வென்ற சஹால் : 27 விக்கெட்கள் (2022)*
2. இம்ரான் தாஹிர் : 26 விக்கெட்கள் (2019)

Advertisement