IND vs AUS : இதுல உலகின் பணக்கார வாரியம்னு பெருமை வேற – நாக்பூர் போட்டியால் பிசிசிஐயை விளாசும் ரசிகர்கள், நடந்தது என்ன

Ganguly
- Advertisement -

உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே தலை குனிந்தது. அதனால் இத்தொடரின் கோப்பையை வெல்ல செப்டம்பர் 23ஆம் தேதியான நேற்று நாக்பூரில் நடைபெற்ற 2வது போட்டியில் வென்றே தீரவேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா களமிறங்கியது. இருப்பினும் மழையால் இரண்டரை மணி நேரம் தாமதமாக இரவு 9.30 மணிக்கு 8 ஓவர்களாக குறைக்கப்பட்டு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அதிரடியாக 90/5 ரன்களை குவித்தது.

அந்த அணிக்கு கேமரூன் கிரீன் 5, கிளன் மேக்ஸ்வெல் 0, டிம் டேவிட் 2 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தாலும் கேப்டன் ஆரோன் பின்ச் அதிரடியாக 4 பவுண்டரி 1 சிக்சருடன் 31 (15) ரன்கள் எடுத்தார். இறுதியில் மேத்யூ வேட் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 43* (20) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிக பட்சமாக அக்சர் படேல் சிறப்பாக செயல்பட்டு 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

இந்தியா பதிலடி:
அதை தொடர்ந்து 91 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஒருபுறம் ரோகித் சர்மா அதிரடி காட்ட மறுபுறம் கேஎல் ராகுல் 10 (6), விராட் கோலி 11 (6), சூர்யகுமார் யாதவ் 0 (1) என முக்கிய பேட்ஸ்மேன்களை ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா அடுத்தடுத்த ஓவர்களில் சொற்ப ரன்களில் அவுட் செய்து மிரட்டலை கொடுத்தார். அதனால் பின்னடைவை சந்தித்த இந்தியாவுக்கு ஹர்திக் பாண்டியாவும் 9 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஆனாலும் மறுபுறம் நான் இருக்கிறேன் என்ற வகையில் நங்கூரமாக நின்று அதிரடி காட்டிய ரோஹித் சர்மா 4 பவுண்டரி 4 சிக்சருடன் 46* (20) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார்.

இறுதியில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் சிக்சர் மற்றும் பவுண்டரியை பறக்க விட்டு 10* (2) ரன்களை விளாசி பினிஷிங் கொடுத்ததால் 7.2 ஓவரிலேயே 92/4 ரன்கள் எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் சொந்த மண்ணில் அவ்வளவு எளிதில் எங்களை சாய்க்க முடியாது என்ற வகையில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து தலை நிமிர்ந்துள்ளது. இந்த வெற்றிக்கு 46* ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ரோகித் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

மோசமான வசதிகள்:
முன்னதாக இப்போட்டி மழையால் தாமதமாக 9.30 மணிக்கு துவங்கியதாக பெரும்பாலான ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாக்பூரில் மாலை நேரத்தில் பெய்த மழை போட்டி முழுமையாக நடப்பதற்காக கருணை காட்டி சென்றதால் திட்டமிட்டபடி போட்டி 7 மணிக்கு துவங்குவதற்கான தடை விலகியது. இருப்பினும் மழையால் மைதானத்தில் நிரம்பிய தண்ணீரையும் ஈரப்பதத்தையும் வெளியேற்றுவதற்கு தேவையான நவீன வசதிகள் இல்லாத காரணத்தாலேயே 7 மணியிலிருந்து ஒரு துளி கூட மழை பெய்யாத போதிலும் போட்டி துவங்குவதற்கு இரண்டரை மணி நேரம் தாமதமானது.

மேலும் நவீன டெக்னாலஜி வளர்ந்த இந்த காலத்திலும் தண்ணீரை வெளியேற்றி ஈரப்பதத்தை நீக்குவதற்கு போதிய வசதிகளை பிசிசிஐ செய்து கொடுக்காத காரணத்தால் பின்னடைவை சந்தித்த நாக்பூர் மைதான பராமரிப்பாளர்கள் அயன் பாக்ஸ் மற்றும் ஹேர் ட்ரையர் போன்ற சாதனங்களை பயன்படுத்திய அவல நிலை நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியர்களிடம் இந்திய ரசிகர்களை தலை குனிய வைத்தது.

அதுபோக மைதானத்தில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றுவதற்கான நவீன மெஷின்கள் இல்லாத காரணத்தால் செம்மண்ணை மூட்டையில் பிடித்துக் கொண்டு தண்ணீர் தேங்கியிருந்த குண்டு குழிகளை செம்மண்ணால் நிரப்பிய அவலமும் நேற்று அரங்கேறியது. இதை பார்த்த ரசிகர்கள் ஐபிஎல் எனும் தொடரால் ஒரு வருடத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாதிக்கும் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம் என்ற பெயரை தயவு செய்து வெளியில் கூட சொல்லாதீர்கள் என்று பிசிசிஐயை சாடி வருகிறார்கள்.

ஏனெனில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில வாரியங்களையும் மைதானங்களையும் நிர்வகிக்கும் பிசிசிஐ அதற்கான போதிய வசதிகளை செய்து கொடுப்பது கடமையாகும். முன்னதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே கவுகாத்தியில் இதே போன்ற நிலைமை அரங்கேறியும் இன்னும் அந்த நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால் ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடரில் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய்கள் எங்கே செல்கிறது என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலியிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Advertisement