ஐதராபாத்தை சமாளிக்க தோனியின் 7 வியூகங்கள்..?

csk
Advertisement

1. தோனியின் ஆயுதமே வேகப்பந்து வீச்சாளர்கள்தான். ஐதராபாத் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எக்கனாமிக்கலாகவும், விக்கெட்டுகளை வீழ்த்தியும் சிறப்பாகப் பந்துவீசியவர்கள் வேகப்பந்துவீச்சாளர்களே. அதனால் பவர் ப்ளே, டெத் ஓவர்களில் மட்டுமல்லாமல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்தவும் தோனி வேகப்பந்து வீச்சாளர்களையே பயன்படுத்துவார். அதனால் இன்றைய போட்டியிலும் ஹர்பஜனுக்கு வேலை இருக்கும் என்று சொல்லமுடியாது.
srh

2. தவானும், கேன் வில்லியம்சனும்தான் ஐதராபாத்தின் பேட்டிங் பலம். தவான் சென்னைக்கு எதிராக இரண்டு போட்டிகளில்தான் விளையாடியிருக்கிறார். அதில் ஒரு மேட்சில் டக் அவுட். ஒரு மேட்சில் 79 ரன்கள். இதை 49 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்ஸருடன் அடித்தார் தவான். பிராவோ, ஜடேஜா, ஹர்பஜன் என மூன்று ஸ்லோ பெளலர்களையுமே வெளுத்திருக்கிறார் தவான். அதனால் சாஹர், தாக்கூர், எங்கிடி என மூவரையும் பயன்படுத்தி பவர் ப்ளே ஓவர்களுக்குள் தவானை அவுட் ஆக்கினால்தான் ஐதராபாத்தை குறைந்த ரன்களுக்குள் சுருட்ட முடியும். மிடில் ஓவர்கள் வரை தவானை ஆட விட்டால் அது சென்னைக்கு ஆபத்து.

3. சென்னைக்கு எதிரான மூன்று போட்டிகளில் இரண்டு அரை சதங்கள் அடித்திருக்கிறார் கேன் வில்லியம்சன். அவசரப்படாமல் ஆடுவதுதான் வில்லியம்சன் ஸ்டைல். இவருமே ஸ்பின் பெளலிங்கை சமாளிக்கக்கூடியவர். அடித்து ஆடுபவர். வேகப்பந்து வீச்சுதான் இவரை வீழ்த்தவும் கைகொடுக்கும். வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்துவதற்கு பெளலிங் ரொட்டேஷன் கைகொடுக்கும். பெளலர்களை மாற்றிக்கொண்டே இருக்கும்போது வில்லியம்சன் ஒரு ஃபார்மேட்டுக்குள் வரமுடியாமல் திணறுவார்.
rashid-khan

- Advertisement -

4. சென்னைக்கு பயமே ரஷித் கானின் பெளலிங்தான். சென்னைக்கு எதிராக கடைசி மேட்சில்தான் ரஷீத் கான் சிறப்பாகப் பந்துவீசினார். தோனி, பிராவோ என அவர் அடுத்தடுத்து எடுத்த இரண்டு விக்கெட்டுகளுமே மிக முக்கியமானவை. கொல்கத்தாவுக்கு எதிரானப் போட்டியில் பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே சூப்பர் மேனாக சீறியிருக்கிறார் ரஷீத். அதனால் ரஷீத் கானை சமாளிப்பதுதான் சென்னை சூப்பர் கிங்ஸின் பெரிய பிளானாக இருக்கும். ரஷீத் கானின் பந்துவீச்சை சிறப்பாக ஆடியிருப்பவர் அம்பதி ராயுடு. அதேப்போல் ரஷித் கானின் கூக்ளிகளை சரியாக கணித்து விளையாடியிருக்கிறார். ரஷித் கானின் பெளலிங்கில் மட்டும் 4 பவுண்டரி 2 சிக்சர்கள் அடித்திருக்கிறார் ராயுடு. அதனால் 2 டவுன் பேட்ஸ்மேனாக ராயுடுவை களம் இறக்கி, ரஷீத் கானை சமாளிப்பதுதான் தோனியின் வியூகமாக இருக்கும்.

5. புவனேஷ்வர் குமார்தான் சென்னையின் டாப் ஆர்டரை கலைக்கும் வல்லமை கொண்டவர். அதனால் இவரது பெளலிங்கை வாட்ஸன், டுப்பெளஸ்ஸி, ரெய்னா மூவருமே தாக்குப்பிடித்து ஆட வேண்டும். 10 ஓவர்களுக்குள் புவனேஷ்குமாரை மூன்று ஓவர்கள் வீச வைப்பார் கேன் வில்லியம்சன். இந்த மூன்று ஓவர்கள்தான் சென்னையின் டாப் ஆர்டருக்கு சோதனையாக இருக்கும். புவனேஷ்வர் குமார் ஓவரில் விக்கெட் விழுகிறதோ இல்லையோ, ரன் எடுக்க முடியாது. இவர் ஓவரில் ரன் எடுக்கமுடியவில்லை என்பதால் அடுத்த பெளலரின் ஓவரில் ரன் எடுக்க அடித்து ஆடும்போதுதான் விக்கெட் விழுகிறது. இதை சென்னையின் டாப் ஆர்டர்கள் கவனமாக சமாளிக்க வேண்டும்.

6. சென்னையின் பேட்டிங் ஆர்டரில் இன்று ஒரு சிறிய மாற்றத்தை தோனி செய்யக்கூடும். ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ஓப்பனிங் விக்கெட் விழுந்துவிட்டால் தோனி, 1 டவுன் பேட்ஸ்மேனாக ரெய்னாவை இறக்காமல் பின்ச் ஹிட்டர்களை இறக்குவார். அது சாஹர் அல்லது ஹர்பஜன் சிங்காக இருக்கும்.

7. சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடியிருக்கும் 6 ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் இரண்டில் வெற்றிபெற்றிருக்கிறது. ஆனால் நான்கில் தோல்வியடைந்திருக்கிறது. இரண்டு முறை சேஸ் செய்யமுடியாமலும், இரண்டு முறை டிஃபென்ட் செய்யமுடியாமலும் தோல்வியடைந்திருக்கிறது. தோனி கூலாக இருந்தாலும் ஃபைனல்களில் அணியின் வீரர்கள் கூலாக விளையாடாததே அணியின் தோல்விக்குக் காரணம். 2013 ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பையின் 149 ரன்கள் டார்கெட்டை அடிக்கமுடியாமல் 125 ரன்களுக்குள் சுருண்டிருக்கிறது சென்னை. அதனால் இன்று தோனி அணியினருக்கு சொல்லப்போவது இறுதிப்போட்டி என்பதை மறந்துவிட்டு ஆடுவோம் என்பதே.

இதுவரை விளையாடிய ஐபிஎல்-களைவிட இந்தமுறை சென்னை அணி மிகப்பெரிய நம்பிக்கையுடன் இருக்கிறது. காரணம் அணியின் வீரர்கள் எல்லோருமே கிட்டத்தட்ட மேட்ச் வின்னர்களாக இருப்பதுதான். அதனால் இறுதிபோட்டியில் தோற்கும் சென்னையின் வழக்கத்தில் இருந்து இன்று மாற்றம் இருக்கும் என்றே நம்பலாம்.

Advertisement
SOURCEvikatan