வீடியோ : ஒரே ஓவரில் பறந்த 7 சிக்ஸர்கள் 43 ரன்கள் – புதிய உலக சாதனை படைத்து ஸ்பார்க்கை தெறிக்க விட்ட ருதுராஜ் கைக்வாட்

Ruturaj gaikwad
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை விறுவிறுப்பான லீக் சுற்றை கடந்து முக்கியமான நாக் அவுட் சுற்றை சுற்றுள்ளது. இந்த தொடரில் லீக் சுற்றில் அசத்திய தமிழ்நாடு உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. அந்த நிலைமையில் நவம்பர் 28ஆம் தேதியன்று நடைபெற்ற காலிறுதி சுற்றின் முதல் போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச அணிகள் மோதின. அகமதாபாத் நகரில் இருக்கும் சர்தார் பட்டேல் மைதானத்தில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற உத்தர பிரதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய மகாராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் ராகுல் திரிபாதி 9 (23) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த பச்சவ் 11 (16) அன்கிட் பாவ்னே 37 (54) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து சென்றனர். இருப்பினும் அடுத்து வந்த அஜிம் காஸியுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ருதுராஜ் கைக்வாட் ஆரம்பத்தில் நங்கூரமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் ரன்களை குவித்தார். அதில் ஒருபுறம் பெயருக்காக கம்பெனி கொடுக்கும் வகையில் காஸி பேட்டிங் செய்ய மறுபுறம் நங்கூரத்தை போட்ட ருதுராஜ் ஒரு கட்டத்தில் அரை சதம் கடந்து அதிரடியாக ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

மாஸ் உலக சாதனை:
நேரம் செல்ல ஜோடி போட்டு எதிரணி பவுலர்களை விளாசிய இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 146 ரன்கள் பர்னர்ஷிப் அமைத்து தங்களது அணியை மீட்டெடுத்த போது அஜிம் காஸி 37 (42) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுபுறம் நன்கு செட்டிலான பின் தெறிக்க விடும் பேட்டிங்கை துவக்கிய ருத்ராஜ் சதமடித்து உத்திரபிரதேச பவுலர்களை வெளுத்து வாங்கி 150 ரன்களை கடந்தார். அப்போதும் திருப்தியடையாமல் 40 ஓவர்களுக்கு மேல் இரு மடங்கு அதிரடியாக விளையாடிய அவர் இரட்டை சதத்தை நெருங்கினார்.

அந்த சமயத்தில் உத்திரபிரதேச ஸ்பின்னர் சிவா சிங் வீசிய 49ஆவது ஓவரில் முதல் பந்திலேயே சிக்சர் பறக்க விட்டு சரவெடியை துவங்கிய அவர் அடுத்தடுத்த 4 பந்துகளில் 4 சிக்சரை விளாசி அனலை தெறிக்க விட்டார். அதனால் தட்டு தடுமாறிய பவுலர் 5வது பந்தை நோ பாலாக வீசிய நிலையில் அதையும் சிக்ஸராக பறக்க விட்ட ருதுராஜ் கடைசி 2 பந்துகளிலும் கருணை காட்டாமல் அடுத்தடுத்த சிக்ஸர்களை அடித்து நொறுக்கி ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை பறக்க விட்டு இரட்டை சதத்தை தொட்டார். இதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் 7 சிக்ஸர்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற புதிய உலக சாதனையையும் ருதுராஜ் கைக்வாட் படைத்தார்.

- Advertisement -

அத்துடன் மொத்தமாக ஒரே ஓவரில் 42 ரன்கள் அடித்த அவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை சமன் கொண்டார். அப்படி ருத்ர தாண்டவம் ஆடிய அவர் கடைசி வரை அவுட்டாகாமல் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை அடித்து 10 பவுண்டரி 16 சிக்சருடன் 220* (159) ரன்கள் குவித்ததால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் மகாராஷ்டிரா 330/5 ரன்கள் குவித்தது. அந்த 16 சிக்ஸர்களால் விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற தமிழகத்தின் நாராயன் ஜெகதீசன் சாதனையும் முறியடித்த அவர் புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த வாரம் அருணாச்சல பிரதேஷ் அணிக்கு ஜெகதீசன் 15 சிக்ஸர்களை அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இது போக 136, 154, 124, 21, 168, 124, 40, 220* என கடைசி 8 விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளில் தெறிக்க விடும் பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ள ருதுராஜ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஸ்பார்க் இல்லை என்று ஒருமுறை தோனி சொன்னதை தவறாக்கி ஏற்கனவே நிரூபித்ததை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். இதனால் அடுத்து வரும் தொடர்களில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை இவர் பெறுவாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement