யாரையோ எடுங்க ஆனால் அவரை நான் அடுத்த உலக கோப்பையில் பார்க்கணும் – இளம் அதிரடி வீரருக்கு சேவாக் ஆதரவு

Sehwag
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா லீக் சுற்றில் அசத்தினாலும் வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் சொதப்பி படுதோல்வி சந்தித்து வெறும் கையுடன் வெளியேறியது. இத்தனைக்கும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் தரவரிசையில் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக இருந்தும் ஒரு நாக் அவுட் போட்டியை சமாளித்து வெல்ல முடியாத காரணத்தால் இந்திய அணியினரை ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மேலும் இந்த தொடரில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டியா போன்ற ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலான வீரர்கள் சொதப்பலாக செயல்பட்டதே தோல்வியை பரிசளித்தது.

IND-Team

- Advertisement -

குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார் என முக்கிய வீரர்கள் மோசமாக செயல்பட்டது ரசிகர்களை கடுப்பாக வைத்தது. அதனால் இந்த காலம் கடந்த வீரர்களை கழற்றி விட்டு 2007இல் தோனி தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கி யாருமே எதிர்பாராத வகையில் கோப்பையை வென்றது போல் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது. குறிப்பாக அதிரடி செயல்பட்டு நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டிய ஓப்பனிங் ஜோடி இந்த தொடரில் மெதுவாக விளையாடியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

சேவாக் கோரிக்கை:

அதிலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வழக்கம் போல இந்திய ஜோடி சொதப்பிய நிலையில் ஜோஸ் பட்லர் – அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் உலக சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை அடித்து நொறுக்கினார்கள். அதனால் அம்பலமான ரோகித் சர்மா – கேஎல் ராகுல் ஆகியோருக்கு பதில் டி20 கிரிக்கெட்டில் புதிய ஓப்பனிங் ஜோடியை உருவாக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஓப்ப்னிங் ஜோடியில் இளம் வீரர் பிரிதிவி ஷா அடுத்த உலக கோப்பையில் விளையாடுவதை பார்க்க விரும்புவதாக முன்னாள் அதிரடி நாயகன் வீரேந்திர சேவாக் கோரிக்கை வைத்துள்ளார்.

shaw

கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் சேவாக், லாரா, சச்சின் ஆகியோர் கலந்த கலவை என அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டும் அளவுக்கு அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அற்புதமான செயல்பாட்டுகளை வெளிப்படுத்தினார். ஆனால் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறியதால் இடத்தை இழந்த அவர் சமீபத்திய சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் அதிரடியான சதமடித்து பார்முக்கு திரும்பி உடல் எடையையும் குறைத்துள்ளார்.

- Advertisement -

இருப்பினும் அடுத்து நடைபெறும் நியூசிலாந்து டி20 தொடரில் அவர் சேர்க்கப்படாதது ஏமாற்றத்தை அளிப்பதாக கூறும் சேவாக் அடுத்த உலகக்கோப்பையில் பிரிதிவி ஷா போன்ற 150 ஸ்ட்ரைக் ரேட்டில் எதிரணி பவுலர்களை தெறிக்க விடும் வீரரை பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பிரிதிவி ஷா எனும் ஒரு பெயரை நான் பார்க்க விரும்புகிறேன். அவர் டி20 அல்லது ஒருநாள் இந்திய அணியில் இடம் பெறவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் நீண்ட காலமாக விளையாடவில்லை. ஆனால் 2023 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் நிச்சயம் இடம் பிடிப்பார் என்று நான் நம்புகிறேன்”

Prithivi Shaw Sehwag

“150 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் தெறிக்க விடும் பிரிதிவி ஷா போன்ற ஒருவர் டி20 கிரிக்கெட்டில் டாப் ஆர்டரில் விளையாடுவதற்கு எந்த சூழ்நிலையாக இருந்தாலும் கச்சிதமாக பொருந்துவார். அதன் காரணமாக நியூசிலாந்து தொடரில் குறைந்தபட்சம் அவரை நீங்கள் ரிசர்வ் வீரராக அழைத்துச் சென்றிருக்க வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டி20 கிரிக்கெட்டில் அதிகப்படியான ஸ்ட்ரைக் ரேட்டில் 30 – 40 ரன்களை எடுப்பதே வெற்றியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே நியூசிலாந்து தொடரில் கழற்றி விடப்பட்ட பிரிதிவி ஷா அடுத்து வரும் தொடர்களில் தேர்வாகி உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.

Advertisement