புதிய வரலாறு படைத்த ஜெகதீசன் – சுதர்சன் ஜோடி, தமிழ்நாடு படைத்த ப்ரம்மாண்ட உலக சாதனை இதோ

jagadeesan sai sudharsan
- Advertisement -

வரலாற்று சிறப்புமிக்க இந்திய உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 2022 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்ற வரும் லீக் சுற்றில் எலைட் சி பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழகம் முதல் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து நாக் சுற்று வாய்ப்பை உறுதி செய்த நிலையில் நவம்பர் 21ஆம் தேதியன்று நடைபெற்ற 100வது லீக் போட்டியில் அருணாச்சல பிரதேசத்தை எதிர்கொண்டது. புகழ்பெற்ற பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சலப் பிரதேசம் முரட்டுத்தனமான அடி வாங்க போகிறோம் என்பது தெரியாமலேயே முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

ஏனெனில் பேட்டிங்க்கு சாதகமாக அமைந்த பிட்சில் தொடக்க வீரர்களாக களமிறங்கி தங்களது திறமையை வெளிப்படுத்திய நாராயன் ஜெகதீசன் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் தமிழகத்திற்கு முதல் ஓவரிலிருந்தே அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டனர். பவர்பிளே முடியும் போதே 100 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவான தொடக்கத்தை கொடுத்த இந்த ஜோடி எதிரணி பவுலர்களுக்கு கருணை காட்டாமல் தொடர்ந்து ஓவருக்கு 10க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி மிரட்டியது. இதில் ஏற்கனவே முந்தைய 4 போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்களை அடித்து நல்ல பார்மில் இருக்கும் ஜெகதீசன் சுமாராக பந்து வீசிய அருணாச்சலப் பிரதேச பவுலர்களை பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறக்க விட்டு முதல் ஆளாக சதமடித்தார்.

- Advertisement -

தமிழகத்தின் உலக சாதனை:
அதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ந்து 5 போட்டிகளில் 5 சதங்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையையும் படைத்த அவருக்கு நிகராக மற்றொருபுறம் எதிரணி பவுலர்களை புரட்டி எடுத்த சாய் சுதர்சன் தனது பங்கிற்கு சதமடித்து தமிழகத்தை வலுப்படுத்தினார். நேரம் செல்ல செல்ல 200, 300 பார்ட்னர்ஷிப் ரன்களை குவித்தும் திருப்தியடையாமல் அருணாச்சல பிரதேச பவுலர்களை 38.3 ஓவர்கள் வரை அடித்து நொறுக்கிய இவர்கள் 416 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த போது ஒரு வழியாக பிரிந்தனர்.

அதில் முதலாவதாக சாய் சுதர்சன் 19 பவுண்டரி 2 சிக்ஸருடன் 154 (102) ரன்கள் எடுத்து அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் நாராயண ஜெகதீசன் 25 பவுண்டரி 15 சிக்ஸர்களுடன் 272 (141) ரன்கள் விளாசி லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து மற்றுமொரு உலக சாதனை படைத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இரட்டைக் கதிர்களைப் போல் பாபா அபாரஜித் 31* (32) ரன்களும் பாபா இந்திரஜித் 31* (26) ரன்களும் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்த தமிழகம் 506 ரன்களை குவித்து அசத்தியது.

- Advertisement -

1. இதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 500 ரன்களை தொட்ட முதல் அணி என்ற வரலாற்றை எழுதியுள்ள தமிழ்நாடு புதிய உலக சாதனை படைத்துள்ளது. அத்துடன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற இங்கிலாந்தின் உலக சாதனையை தகர்த்த தமிழகம் புதிய உலக சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. தமிழ்நாடு : 506/2, அருணாச்சல பிரதேசத்துக்கு எதிராக, பெங்களூரு, 2022*
2. இங்கிலாந்து : 498/6, நெதர்லாந்துக்கு எதிராக, அம்ஸ்ட்டல்வீண், 2022
3. சர்ரே : 496/4, க்ளூசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக, 2007
4. இங்கிலாந்து : 481/6, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, நாட்டிங்காம், 2018
5. இந்தியா ஏ : 458/4, லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக, 2018

2. அத்துடன் விஜய் ஹசாரே கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற வரலாற்றையும் தமிழ்நாடு படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. தமிழ்நாடு : 506/2, அருணாச்சல பிரதேசத்துக்கு எதிராக, 2022*
2. மும்பை : 457/4, பாண்டிச்சேரிக்கு எதிராக, 2021

3. அது போக இப்போட்டியில் 416 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நாராயண் ஜெகதீசன் – சாய் சுதர்சன் ஆகியோர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் 400 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஜோடி என்ற உலக சாதனையும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த ஜோடி என்ற உலக சாதனையும் படைத்தனர். அந்த பட்டியல்:
1. நாராயண் ஜெகதீசன் – சாய் சுதர்சன் : 416, அருணாச்சல பிரதேசத்துக்கு எதிராக, 2022*
2. கிறிஸ் கெயில் – மர்லான் சாமுவேல்ஸ : 372, ஜிம்பாப்வேவுக்கு எதிராக, 2015

Advertisement