7 மாசத்துக்கு முன்னாடி செஞ்சதை மறக்காதீங்க.. சச்சின் மாதிரியான கோலி இதை செய்வாரு.. கங்குலி ஆதரவு

- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. அப்போட்டி ஜூன் 27ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. அப்போட்டியில் இதுவரை தோல்வியை சந்திக்காத தென்னாப்பிரிக்காவை வெற்றி நடை போட்டு வரும் இந்தியா வீழ்த்தி கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இருப்பினும் இந்தப் போட்டிக்கு முன்பாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சுமாரான ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் அம்சமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த காலங்களில் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் இந்த முறை 7 போட்டிகளில் வெறும் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

- Advertisement -

கங்குலி ஆதரவு:
குறிப்பாக இம்முறை வழக்கத்துக்கு மாறாக துவக்க வீரராக விளையாடும் அவர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அதனால் அவர் 3வது இடத்தில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கைகள் காணப்பட்டாலும் இந்திய அணி எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இந்நிலையில் சச்சின், விராட் கோலி, டிராவிட் போன்ற வீரர்களை எப்போதும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2023 உலகக் கோப்பையில் 765 ரன்கள் அடித்த விராட் கோலி துவக்க வீரராகவே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஃபைனலில் விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைப்பார் என்று கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி தொடர்ந்து துவக்க வீரராகவே தொடர வேண்டும். 7 மாதத்திற்கு முன்பாக அவர் உலகக் கோப்பையில் 700 ரன்கள் அடித்தார். அவரும் மனிதர்”

- Advertisement -

“எனவே அவரும் சில நேரங்களில் தடுமாறுவார் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். விராட் கோலி, டெண்டுல்கர், டிராவிட் போன்றவர்கள் இந்திய கிரிக்கெட்டின் பல்கலைக்கழகங்கள். 3 – 4 சுமாரான போட்டிகள் அவர்களை பலவீனமானவர்களாக மாற்றாது. எனவே ஃபைனலில் அவரை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விட்டு விடாதீர்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்தியா – தென்னாப்பிரிக்கா ஃபைனல் நடைபெறும் பார்படாஸ் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

முன்னதாக விராட் கோலி தரமான க்ளாஸ் வீரர் என்பதால் ஃபார்ம் பற்றி கவலையில்லை என்று ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். அத்துடன் அனைத்து ரன்களையும் ஃபைனலுக்கு விராட் கோலி சேமித்து வைத்திருப்பதாகவும் ரோகித் சர்மா தெரிவித்தார். எனவே ஃபைனலிலும் விராட் கோலி துவக்க வீரராகவே விளையாடுவார் என்று ரோஹித் சர்மா மறைமுகமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement