அதிரடியான அரைசதம், ரோஹித் சர்மாவின் ஆல்-டைம் சாதனையை உடைத்த சாதனை மங்கை மந்தனா – படைத்த 3 சாதனைகள்

ROhit Sharma Smriti Mandhana
Advertisement

உலகப் புகழ்பெற்ற காமன்வெல்த்தில் 2022 போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப் பட்டுள்ளது. அதில் இந்தியா, இங்கிலாந்து உட்பட உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்ற லீக் போட்டிகள் கடந்த ஜூலை 29இல் துவங்கி நடைபெற்ற நிலையில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு எட்ஜ்பஸ்டன் நகரில் துவங்கிய முதல் அரையிறுதிப் போட்டியில் வலுவான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்தியா எதிர்கொண்டது.

IND vs Pak Common Wealth Games Womens

அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட அவருடன் கம்பெனி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்த ஷபாலி வர்மா 76 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் 15 (17) ரன்களில் அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே 8 பவுண்டரி 3 சிக்சருடன் 61 (32) ரன்களை வெளுத்து வாங்கி ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அசத்திய இந்தியா:
அப்போது களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீட் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 20 (20) ரன்களிலும் தீப்தி சர்மா 22 (20) ரன்களிலும் போராடி ஆட்டமிழந்தனர். இருப்பினும் 3வது இடத்தில் களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய ஜெமிமா ரோட்ரிக்கஸ் 7 பவுண்டரியுடன் 44* (31) ரன்கள் குவித்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் இந்தியா 20 ஓவர்களில் 164/5 ரன்கள் எடுத்தது.

அதைத்தொடர்ந்து 165 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு டுங்க்லி 4 பவுண்டரியுடன் 19 (10) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த காப்சி 13 (8) ரன்களில் ரன் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் அதிரடி காட்டிய டேனியல் வைட் 35 (27) ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் 81/3 என தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் கேப்டன் நட் ஸ்கீவர் 41 (43) ரன்களும் எமி ஜோன்ஸ் 31 (24) ரன்களும் எடுத்து போராடி கடைசி கட்ட ஓவர்களில் ரன் அவுட்டானார்கள்.

- Advertisement -

அதன் காரணமாக போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வீசிய இந்திய வீராங்கனை ஸ்னே ராணா முதல் 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே கொடுத்து 3-வது பந்தில் விக்கெட் எடுத்தார். மேலும் கடைசி 3 பந்துகளிலும் 1, 1, 6 என 8 ரன்களை மட்டுமே கொடுத்ததால் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று இந்த காமன்வெல்த் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

சாதனை மங்கை:
இதை தொடர்ந்து ஆகஸ்ட் 7-ஆம் தேதியான நாளை இரவு 9.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வெல்ல இந்தியா விளையாடுகிறது. அதில் தோற்றாலும் வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது. முன்னதாக இப்போட்டியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஸ்மிருதி மந்தனா முதல் ஓவரிலிருந்தே அதிரடியான பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு வெறும் 32 பந்துகளில் 61 ரன்களை 190.63 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் தெறிக்கவிட்டார்.

- Advertisement -

மேலும் வெறும் 23 பந்துகளில் அரை சதத்தை கடந்த அவர் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதமடித்த இந்திய வீராங்கனை என்ற தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. ஸ்மிரிதி மந்தனா : 23, இங்கிலாந்துக்கு எதிராக, 2022*
2. ஸ்மிரிதி மந்தனா : 24, நியூஸிலாந்துக்கு எதிராக, 2019
3. ஸ்மிரிதி மந்தனா : 25, இங்கிலாந்துக்கு எதிராக, 2018

அத்துடன் இப்போட்டியில் பவர்ப்ளே ஓவர்களிலேயே பட்டாசாக 51 ரன்களை விளாசிய அவர் மகளிர் கிரிக்கெட்டில் பவர் பிளே ஓவர்களில் அரை சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார். அதைவிட ஆடவர் அல்லது மகளிர் என ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர் என்ற ரோகித் சர்மாவின் ஆல்-டைம் சாதனை உடைத்து புதிய சாதனை படைத்தார். அந்தப் பட்டியல்:
1. ஸ்மிருதி மந்தனா : 51* ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக
2. ரோகித் சர்மா : 50, நியூஸிலாந்துக்கு எதிராக
3. கேஎல் ராகுல் : 50, ஸ்காட்லாந்துக்கு எதிராக
4. ஷபாலி வர்மா : 49, தென்னாபிரிக்காவுக்கு எதிராக

- Advertisement -

அதுபோக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவுக்கு பின் 2000 ரன்களை குவித்த இந்திய ஓப்பனர் என்ற சாதனையும் படைத்தார். அத்துடன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து எனப்படும் சேனா நாடுகளில் டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதங்கள் அடித்த இந்தியர் என்ற ரோகித் ஷர்மாவின் சாதனையையும் சமன் செய்தார். அந்தப் பட்டியல்:
1. ஸ்மிரிதி மந்தனா/ரோஹித் சர்மா : 9*
2. விராட் கோலி : 6
3. கெளதம் கம்பீர் : 5

அத்துடன் இந்த காமன்வெல்த் தொடரில் அதிக ரன்கள், அதிக அரை சதங்கள், அதிக பவுண்டரிகள், அதிக சிக்ஸர்கள் அடித்த வீராங்கனையாகவும் அவர் முதலிடத்தில் உள்ளார்.

Advertisement