அன்றைய நாளில் சீட்டிங் பண்ணது தப்புதான் – 17 வருடங்கள் கழித்து தவறை ஓப்பனாக ஒப்புகொண்ட அப்ரிடி, முழுவிவரம்

Afridi
- Advertisement -

மனிதர்கள் தங்களது வாழ்வில் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் நேர்மையை கடைப்பிடிப்பது அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் கிரிக்கெட் உட்பட எந்த வகையான விளையாட்டாக இருந்தாலும் அதில் எதிரணி கொடுக்கும் சவாலை கடந்து முழு திறமையை வெளிப்படுத்தி போராடினால் நிச்சயம் வெற்றி தாமாக தேடி வரும். அதுதான் உண்மையான வெற்றியும் கூட. ஆனால் வெற்றிக்காக எந்த எல்லையையும் தொடுவதற்கு தயங்காத சில வீரர்கள் சில சமயங்களில் நேர்மைக்கு புறம்பாக நடந்து கொள்வது விளையாட்டில் காலம் காலமாக நடந்து வருகிறது. அதிலும் பாகிஸ்தானை சேர்ந்த சில வீரர்கள் வெற்றியையும் கடந்து பணத்துக்காக சூதாட்டத்தில் ஈடுபட்ட கதைகள் ஏராளமாக உள்ளன.

Afridi-1

- Advertisement -

அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 395 விக்கெட்டுகள், டி20 கிரிக்கெட்டில் 98 விக்கெட்டுகள், 17 வருடங்கள் முறியடிக்கப்படாமல் இருந்த ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமான சதமடித்த பேட்ஸ்மேன் போன்ற ஏராளமான சாதனைகளை படைத்து நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த பாகிஸ்தானின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷாகித் அப்ரிடி தனது கேரியரில் நிறைய சர்ச்சைகளையும் சந்தித்தவர். அதிலும் குறிப்பாக வெற்றி பெறுவதற்காக பந்தை தனது வாயால் கடித்து அவர் சேதப்படுத்திய நிகழ்வு யாராலும் எப்போதும் மறக்க முடியாத ஒன்றாகும். அதைவிட ஒருமுறை போட்டி நடைபெறும் பிட்ச்சை சேதப்படுத்தி அவர் பாகிஸ்தானின் வெற்றிக்கு பங்காற்றியதை நிறைய ரசிகர்கள் மறந்திருக்கக்கூடும்.

சேதமான பிட்ச்:
ஆம் 2005ஆம் ஆண்டு பைசலாபாத் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் பந்து சுழல வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே பிட்ச்சை சேதப்படுத்திய அவர் பாகிஸ்தான் குறுக்கு வழியில் வெற்றி பெற உதவி செய்தார். அப்போட்டி நடந்து 17 வருடங்கள் கழித்து தற்போது அது பற்றி பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியில் மனம் திறந்து பேசிய அவர் அன்றைய நாளில் மைதானத்தில் ஒரு சிலிண்டர் விபத்து ஏற்பட்டதை பயன்படுத்தி சோயப் மாலிக் ஆதரவுடன் பிட்ச்சை சேதப்படுத்தியதாக வெளிப்படையாக பேசினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

Afridi

“அது நல்ல கிரிக்கெட் தொடர். என்னை நம்புங்கள் பைசலாபாத் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் சுழல், வேகம், ஸ்விங் என எதற்குமே பிட்ச் கை கொடுக்காமல் இருந்தது. அதனால் நான் சோர்வடைந்தேன். அதில் விக்கெட்டை எடுப்பதற்காக முழு வீச்சில் பந்து வீசியும் எனக்கு பயன் கிடைக்கவில்லை. அப்போது திடீரென ஒரு சிலிண்டர் வெடித்ததால் அனைவரின் கவனமும் அதன் பக்கம் திரும்பியது. அப்போது சோயப் மாலிக்கிடம் நான் “இந்த பிட்ச்சை சேதப்படுத்த மிகவும் விரும்புகிறேன். இந்த பிட்ச்சில் நான் பந்து சுழல்வதை விரும்புகிறேன்” என்று கூறினேன்”

- Advertisement -

“அதற்கு “செய்யுங்கள் யாரும் பார்க்கவில்லை” என அவர் எனக்கு பதிலளித்தார். எனவே அதை நானும் செய்தேன். இருப்பினும் அதன் பின் நடந்தது வரலாறு. ஆனால் தற்போது அதை திரும்பிப் பார்க்கும்போது அது தவறு என்பதை உணர்கிறேன்” என்று கூறினார். அப்போட்டியில் யாரும் பார்க்காத வேளையில் பிட்சை சேதப்படுத்தினாலும் தொலைக்காட்சியில் அவர் செய்த வேலை சிக்கியது. அதனால் அதிருப்தியடைந்த நடுவர் அளித்த புகாரின் பேரில் அதை தொடர்ந்து நடைபெற்ற ஒரு டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாட சாகித் அப்ரிடிக்கு அதிரடியான தடையும் விதிக்கப்பட்டது.

Afridi

அந்த வகையில் தன்னுடைய கேரியரில் ஒரு கருப்பு புள்ளியாக பார்க்கப்படும் அந்த நிகழ்வை செய்ததற்கு மனம் வருந்துவதாக தெரிவிக்கும் அப்ரிடி வெளிப்படையாக அந்த தவறை ஒப்புக் கொண்டுள்ளார். முன்னதாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த உலக சாதனையை படைத்த சாகித் அப்ரிடி மிகவும் இளம் வயதில் சதம் விளாசிய பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையும் படைத்திருந்தார்.

ஆனால் நாளடைவில் பாகிஸ்தான் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தன்னுடைய பிறந்த தேதி உண்மையானதல்ல என்று இதே போல் மற்றுமொரு உண்மையை கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அவர் வெளிப்படையாகப் பேசியிருந்தார். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இளம் வயதில் சதமடித்த பேட்ஸ்மேன் என்ற அவருடைய உலக சாதனையும் பொய்யானது. அந்த வகையில் தன்னுடைய கேரியரில் இது போன்ற நிறைய உண்மைக்குப் புறம்பான வேலைகளில் ஈடுபட்ட காரணத்தாலேயே நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை கிண்டலடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

Advertisement