- Advertisement -
உலக கிரிக்கெட்

வெறும் 7 ரன்ஸ்.. கடைசி 3 ஓவரில் இங்கிலாந்தின் வெற்றியை பறித்த தெ.ஆ.. நோர்ட்ஜெ தனித்துவ உலக சாதனை

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஜூன் 21ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு 45வது போட்டி நடைபெற்றது. செயின்ட் லூசியா நகரில் நடைபெற்ற அந்த சூப்பர் 8 போட்டியில் வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் கிரிக்கெட் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு குயிண்டன் டீ காக் அதிரடியாக விளையாடினார். ஆனால் அவருடன் சேர்ந்து 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து திணறலாக விளையாடிய ரீசா ஹென்றிக்ஸ் 19 (25) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவரில் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய டீ காக் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 65 (37) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

த்ரில்லர் வெற்றி:
ஆனால் 3வது இடத்தில் களமிறங்கி தடுமாறிய கிளாஸின் 8 (13) ரன்களில் ரன் அவுட்டானார். அடுத்ததாக வந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் 1 (2) ரன்னில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார். அதானல் 113/4 என மிடில் ஓவர்களில் தடுமாறிய அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி 43 (28) ரன்கள் குவித்தார். இறுதியில் திரிஷன் ஸ்டப்ஸ் 12* (11), மார்கோ யான்சென் 0, கேசவ் மகாராஜ் 5* (2) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் தென்னாப்பிரிக்கா 163/6 ரன்கள் எடுத்தது.

சொல்லப்போனால் 9.4 ஓவரில் 86/0 ரன்கள் எடுத்த தென்னாபிரிக்காவை கடைசி 10.2 ஓவரில் 77/6 ரன்களுக்கு மடக்கி பிடித்து அற்புதமாக பந்து வீசிய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 164 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு பில் சால்ட் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த ஜானி பேர்ஸ்டோவும் தடுமாறி 16 (20) ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

போதாக்குறைக்கு மறுபுறம் தடுமாறிய ஜோஸ் பட்லர் 17 (20) ரன்னில் அவுட்டான நிலையில் அதற்கடுத்ததாக வந்த மொயின் அலி 9 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதனால் 61/4 என இங்கிலாந்து தடுமாறிய போது லியான் லிவிங்ஸ்டன் – ஹரி ப்ரூக் ஆகியோர் சேர்ந்து அதிரடியாக விளையாடினர். அந்த வகையில் 5வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி இங்கிலாந்தை வெற்றி பாதைக்கு அழைத்து வந்த போது லிவிங்ஸ்டனை 33 (17) ரன்களில் அவுட்டாக்கிய ரபாடா திருப்புமுனையை உண்டாக்கினார்.

இருப்பினும் எதிர்ப்புறம் ஹரி ப்ரூக் அரை சதமடித்ததால் கடைசி ஓவரில் இங்கிலாந்துக்கு 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரின் முதல் பந்திலேயே ப்ரூக்கை 53 (37) ரன்களில் அவுட்டாக்கிய ஆன்றிச் நோர்ட்ஜெ மேற்கொண்டு 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதனால் இங்கிலாந்தை 156/6 ரன்களுக்கு கட்டுப்படுத்திய தென்னாப்பிரிக்கா 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

- Advertisement -

குறிப்பாக கடைசி 18 பந்தில் 24 ரன்கள் தேவைப்பட்ட போது 17 ரன்கள் மட்டுமே கொடுத்து இங்கிலாந்தின் வெற்றியை பறித்த அந்த அணிக்கு அதிகபட்சமாக கேசவ் மகாராஜ், ரபாடா தலா 2 விக்கெட் எடுத்தனர். அதனால் சூப்பர் 8 சுற்றில் 2வது வெற்றியைப் பெற்ற தென்னாபிரிக்கா செமி ஃபைனல் வாய்ப்பை 70% உறுதி செய்துள்ளது. மேலும் இப்போட்டியையும் சேர்த்து அன்றிச் நோர்ட்ஜெ கடைசி 16 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் குறைந்தபட்சம் 1 விக்கெட் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இதை செஞ்சு பாருங்க.. விராட் கோலி வெறியாகி தன்னை யார்ன்னு காட்டுவாரு.. அஸ்வின் பேட்டி

இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து அதிக போட்டிகளில் குறைந்தது 1 விக்கெட் எடுத்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் இங்கிலாந்தின் கிராம் ஸ்வான், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா தலா 15 தொடர்ச்சியான போட்டிகளில் குறைந்தது 1 விக்கெட் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -