- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஷேன் வார்னே எனக்கு செய்ததை வேறு யாரும் அப்போ செய்யல – மனம் திறக்கும் ரவீந்திர ஜடேஜா

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மொஹாலியில் நடைபெற்று முடிந்துள்ளது. மார்ச் 4ஆம் தேதியன்று துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து தனது முதல் இன்னிங்சை 574/8 ரன்களில் டிக்ளேர் செய்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக இலங்கை பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கிய ரவீந்திர ஜடேஜா 175* ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 96 ரன்களும் ரவிச்சந்திரன் அஸ்வின் 61 ரன்களும் எடுத்தனர்.

ஆட்டநாயகன் ரவீந்திர ஜடேஜா:
இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியை இந்திய பவுலர்கள் ஆரம்பம் முதலே அபாரமாக பந்து வீசி தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் கருணரத்னே, அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளிட்ட அனைவரும் இந்தியாவின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் அந்த அணி முதல் இன்னிங்சில் வெறும் 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 400 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இலங்கையை மீண்டும் பேட்டிங் செய்யுமாறு பாலோ ஆன் கொடுத்தது.

- Advertisement -

ஆனால் அப்போதும் கூட அந்த அணி வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தாமல் அடுத்தடுத்து இந்திய பந்து வீச்சாளர்களின் அபார பந்து வீச்சுக்கு சரண்டராகி தங்களது விக்கெட்டை பறிகொடுத்தார்கள். இதனால் 2-வது இன்னிங்சில் 178 ரன்களுக்கு மீண்டும் அந்த அணி ஆல் அவுட்டானதால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் 175 ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகள் எடுத்து ஆல்-ரவுண்டராக இந்தியாவின் சூப்பர் வெற்றிக்கு வித்திட்ட ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ஷேன் வார்னேவுக்கு சமர்ப்பணம்:
இப்போட்டியில் சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்ற ரவீந்திர ஜடேஜா அந்த பெருமையை சமீபத்தில் மாரடைப்பால் திடீரென இயற்கை எய்திய ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு சமர்ப்பணம் செய்தார். அத்துடன் கிரிக்கெட்டில் இந்த அளவுக்கு தாம் வளர்வதற்கு அவர் தான் மிக முக்கிய காரணம் என அவருக்கு ரவிந்திர ஜடேஜா புகழாரம் சூட்டினார். இதுபற்றி மொஹாலி போட்டியில் சதம் அடித்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் இறந்த செய்தியை கேட்ட போது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

- Advertisement -

அந்த தருணத்தில் மிகவும் சோகமடைந்த நான் எனது உணர்ச்சிகளால் நிலைகுலைந்தேன். அந்த செய்தி உண்மை என்று என்னால் நம்பவே முடியவில்லை. அவரை முதல் முறையாக கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பார்த்தபோது அவர் ஜாம்பவனாக இருந்தார். அவரைப் போன்ற ஒரு மகத்தான ஜாம்பவானுடன் விளையாடுவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்” என கூறினார்.

அவர் கூறுவது போல கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் முறையாக தோற்றுவிக்கப்பட்டு போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஷேன் வார்னே அந்த முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துக் காட்டினார். குறிப்பாக அந்த தொடரில் மற்ற அணிகளை போல பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் சிறப்பாக தலைமை ஏற்று நடத்திய அவர் வரலாற்றின் முதல் ஐபிஎல் கோப்பையை வென்றார். அந்த ஐபிஎல் தொடரில் அப்போது இளம் வீரராக இருந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு அதிகப்படியான ஆதரவும் வாய்ப்புகளையும் கொடுத்த ஷேன் வார்னே அவர் தடுமாறிய ஆரம்ப காலகட்டங்களில் நிறைய ஊக்கமளித்தார்.

வளர்ச்சிக்கு ஷேன் வார்னே காரணம்:
“அந்த சமயத்தில் நடந்த அண்டர்-19 உலக கோப்பையை வென்ற பின் ஷேன் வார்னே போன்ற ஒரு மிகப் பெரிய ஜாம்பவானுடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது எங்களை போன்ற இளம் வீரர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டமாகும். அந்த சமயத்தில் அவர் எனக்கு மிகப்பெரிய ஆதரவை கொடுத்து ஐபிஎல் தொடரில் நேரடியாக விளையாடும் வாய்ப்பைப் கொடுத்தார்” என இது பற்றி ரவிந்திர ஜடேஜா மேலும் கூறினார். அவர் கூறுவது போல கடந்த 2008ஆம் ஆண்டு மலேசியாவில் நடந்த ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா முக்கிய பங்காற்றினார்.

அப்போது ஐபிஎல் தொடரில் விளையாட வந்த தம்மை பார்த்த ஷேன் வார்னே எதைப்பற்றியும் யோசிக்காமல் நேரடியாக ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை கொடுத்ததாக ரவீந்திர ஜடேஜா உணர்ச்சியுடன் தெரிவித்தார். அந்த ஆதரவு மற்றும் ஊகத்தின் காரணத்தாலேயே இன்று இந்த அளவுக்கு வளர்ந்துள்ளதாக ரவீந்திர ஜடேஜா மனதார அவரை பாராட்டினார். அவர் தற்போது இயற்கை எய்தியுள்ளதை நினைத்தால் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை, எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது நமக்கு மீண்டும் உணர்த்துவதாக தெரிவித்த ரவீந்திர ஜடேஜா ஷேன் வார்னேவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என கூறினார்.

- Advertisement -
Published by