4 விக்கெட்ஸ்.. நியூஸிலாந்தை தெறிக்க விட்ட ரசித் கான்.. 17 வருட சாதனையை தூளாக்கி புதிய உலக சாதனை

Rashid Khan
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் வலுவான நியூசிலாந்தை 84 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்துள்ளது. கயானா நகரில் ஜூன் 8ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5:00 மணிக்கு நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 159/6 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ரஹனுதுல்லா குர்பாஸ் 80, இப்ராஹிம் ஜாட்ரான் 44 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 2, ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 160 ரன்களை துரத்திய நியூசிலாந்து ஆரம்பம் முதலில் ஆப்கானிஸ்தானின் தரமான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் திணறியது.

- Advertisement -

ரசீத் கான் உலக சாதனை:
குறிப்பாக ஃபின் ஆலன் 0, டேவோன் கான்வே 8, கேப்டன் கேன் வில்லியம்சன் 9, மிட்சேல் 5, கிளன் பிலிப்ஸ் 18 என முக்கிய வீரர்கள் யாருமே 20 ரன்கள் தாண்டாமல் அவுட்டானார்கள். அதனால் 15.2 ஓவரிலேயே நியூசிலாந்தை 75 ரன்களுக்கு சுருட்டிய ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் 5 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக நியூசிலாந்துக்கு எதிராக ஒரு வெற்றியை பதிவு செய்து ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது.

அத்துடன் டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய அணி என்ற உலக சாதனையும் ஆப்கானிஸ்தான் நிகழ்த்தியது. அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய அந்த அணிக்கு ரசீத் கான் 4, முகமது நபி 2, ஃபருக்கி 4 விக்கெட்டுகள் எடுத்து இந்த வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். குறிப்பாக கேப்டன் ரசீத் கான் 4 ஓவரில் 17 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

- Advertisement -

இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சிறந்த பந்து வீச்சை (4/17) பதிவு செய்த கேப்டன் என்ற 17 வருட சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2007 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி 20 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: என்னா மனுஷன்யா.. படுதோல்வியை பரிசளித்த ஆப்கானிஸ்தானுக்காக வில்லியம்சன் சொன்ன வார்த்தை.. தோல்வி பற்றி பேட்டி

டி20 கிரிக்கெட்டில் உலகில் நம்பர் ஒன் பவுலராக பார்க்கப்படும் ரசீத் கான் இப்போட்டியில் கேப்டனாக தன்னுடைய நாட்டுக்கு மிரட்டினார் என்றே சொல்லலாம். இந்த வெற்றியால் குரூப் சி பிரிவில் 2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ள ஆப்கானிஸ்தான் தங்கள் பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளது. 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான், இங்கிலாந்து வீழ்த்திய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது வலுவான நியூசிலாந்தையும் வீழ்த்தி அனைவரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

Advertisement