ராகுல் அதிரடி சதம்..! குல்தீப் சுழலில் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து..! – இந்தியா அபார வெற்றி..!

yadhav

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டி20 போட்டி ஓல்ட் ட்ராஃபோர்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சு தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய 3 தொடக்க வீரர்களுடன் இந்திய அணி களம்புகுந்தது. பின்னர் முதலில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ராய், பட்லர் இணை நல்ல துவக்கம் தந்தது.
india
முதல் 5 ஓவர்களிலேயே 50 ரன்கள் எடுத்தபோது இந்த ஜோடியை உமேஷ் யாதவ் பிரித்தார். பின்னர் வந்த வீரர்களை சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி வெளியேற்றினார். அவரின் அபார பந்துவீச்சால் 20 ஓவர்களுக்கு இங்கிலாந்து அணியால் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். டி20 போட்டியில் இது அவரின் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.

160 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக தவான் 4 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் ஷர்மா நிதானமாக விளையாட அடுத்துக் களமிறங்கிய கே.எல்.ராகுல் இங்கிலாந்தின் பந்துவீச்சை அனைத்துத் திசைகளிலும் சிதறடித்தார். ரோஹித் ஷர்மா 30 பந்துகளில் 32 ரன்கள் குவித்து அதில் ரஷீத் பந்துவீச்சில் வெளியேறினார். தொடர்ந்து அடித்து ஆடிய ராகுல் 53 மூன்று பந்துகளில் தனது இரண்டாவது டி20 சத்தத்தைப் பதிவு செய்தார். இதில் 5 சிக்ஸர்களும், 10 பவுண்டரிகளும் அடக்கம்.
kohli
இறுதியில் விராட் கோலி சிக்ஸர் அடித்து வெற்றி இலக்கான 160 ரன்களை எட்ட இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டத்தின் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ராகுல் 54 பந்துகளில் 101 ரன்களும், விராட் 22 பந்துகளில் 20 ரன்களும் எடுத்திருந்தனர். இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லியும், ப்ளங்கட்டும் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா 1 -0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.