தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற கடந்த ஐபிஎல் தொடரின்போது டேவிட் வார்னரின் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணிக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாடி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். மேலும் உலகின் பல முன்னணி வீரர்களை தனது யார்க்கர் பந்துவீச்சினால் ஆட்டமிழக்க செய்த நடராஜன் தனது திறமையை வெளிக்காட்டினார்.
அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி இந்திய அணியின் தேர்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் நெட் பவுலராக அவர் ஆஸ்திரேலியா சென்றார். ஆனால் அதிர்ஷ்டம் அப்போது அவர் வழியில் திரும்பி டி10 தொடரில் வருண் சக்கரவர்த்திக்கும், ஒருநாள் தொடரில் சைனிக்கும் காயம் ஏற்பட இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடினார்.
பின்னர் டெஸ்ட் தொடரில் உமேஷ் யாதவ், ஷமிக்கும் ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலும் அறிமுகமாகி மூன்று விதமான அணிகளிலும் விளையாடி சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி தான் விளையாடிய அந்த தொடர் முழுவதுமே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி நடராஜன் இனி இந்திய அணியில் நிரந்தர வேகப்பந்து வீச்சாளராக மாறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மீண்டும் எப்போது இந்திய அணிக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் தற்போது நடராஜன் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் விளையாட இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது விஜய் ஹசாரே கோப்பைக்கான தேதிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 20ஆம் தேதி துவங்கும் தொடரானது மார்ச் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் அனைத்து அணிகளையும் சேர்த்து ஆறு குழுக்களாக பிரித்து இந்த தொடரை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரின் தமிழ்நாடு அணிகள் நடராஜன் இடம் பெற்றுள்ளார். இதனால் இந்தத் தொடரில் அவர் எவ்வாறு விளையாடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.