10ஆம் வகுப்பு பாஸ் பண்ண மாட்டேன்னு என் அப்பா நெனச்சாரு – ஸ்வாரஸ்ய பள்ளி வாழ்க்கையை பகிர்ந்த தோனி

dhoni
- Advertisement -

முன்னாள் இந்திய நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி இந்தியாவுக்காக 3 விதமான ஐசிசி உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாகவும் 2010இல் வரலாற்றில் முதல் முறையாக நம்பர் ஒன் அணியாகவும் தரம் உயர்த்திய மகத்தான கேப்டன் ஆவார். கிரிக்கெட் மிகவும் பிரபலம் இல்லாத ராஞ்சியில் பிறந்து கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் ரயில்வே வேலையையும் உதறிய அவர் 2004இல் கங்குலி தலைமையில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே டக் அவுட்டானார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்த அவர் மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்வதில் புகழ் பெற்றதுடன் இந்திய கீப்பர்கள் என்றால் பந்து பிடிப்பவர்களாக மட்டுமல்லாமல் அதிரடியாக பேட்டிங் செய்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற புதிய இலக்கணத்தை உருவாக்கினார்.

மேலும் இந்தியா தோற்க வேண்டிய நிறைய போட்டிகளில் நங்கூரமாக நின்று கடைசியில் அதிரடியாக விளையாடி வெற்றிகரமாக பினிசிங் செய்து மிகச்சிறந்த பினிஷராக செயல்பட்ட அவர் இன்றைய இந்திய அணியில் விளையாடும் விராட் கோலி முதல் ரோகித் சர்மா வரை 70% வீரர்களுக்கு அப்போதே வாய்ப்பளித்து வளர்த்து வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்த பெருமைக்குரியவர். அதே போல் ஐபிஎல் தொடரிலும் பெரும்பாலான சீசன்களில் தன்னுடைய சென்னை அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற அவர் 4 கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார்.

- Advertisement -

பள்ளி வாழ்க்கை:
அதனால் தமிழக ரசிகர்கள் அவரை தல என்று தலையில் வைத்து கொண்டாடுவதால் தமிழ்நாட்டை தன்னுடைய 2வது வீடாக பாவிக்கும் அவர் தன்னுடைய கேரியரின் கடைசி போட்டி சேப்பாக்கத்தில் தான் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அப்படி தமிழகத்தின் மீது தனித்துவமான பாசம் வைத்துள்ள அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் “எம்எஸ் தோனி குளோபல் ஸ்கூல்” என்றே கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி பள்ளியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துடன் இணைந்து துவக்கியுள்ளார். 8 பிட்ச்களுடன் இந்தியாவிலேயே 3வது பெரிய கிரிக்கெட் பயிற்சி பள்ளியாக அமைக்கப்பட்டுள்ள அந்தப் பள்ளியை அக்டோபர் 10ஆம் தேதியன்று திறந்து வைத்த அவர் தாம் பள்ளியில் பயிலும் போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தியதால் படிப்பில் சுமாரான மாணவனாக செயல்பட்டதாக இளம் மாணவர்களிடையே பேசினார்.

அதனால் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற மாட்டேன் என்று தமது தந்தை நினைத்ததாக தெரிவித்த அவர் இறுதியில் 66% மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றதற்கால் மிகவும் மகிழ்ச்சியடைந்தார் என்று கூறினார். அதனால் 100க்கு 100% எடுத்தால் தான் வெற்றி என்பதில்லை என்றும் அடிப்படையில் தேர்ச்சி பெற்று நாளடைவில் எந்த துறையாக இருந்தாலும் அதில் உங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு வெற்றி காண முயற்சிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசினார்.

- Advertisement -

அந்த நிகழ்ச்சியில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடம் எது என்று ஒரு சின்னக்குழந்தை கேட்டதற்கு அவர் பதிலளித்து பேசியது பின்வருமாறு. “விளையாட்டு என்பது ஒரு பாடமாகுமா? அப்படியாகும் பட்சத்தில் அது தான் எனக்கு மிகவும் பிடித்த பாடம். ஏனெனில் 7வது படிக்கும்போது முதல் முறையாக கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்பாகவே நான் சுமாரான மாணவனாக இருந்தேன். அதன் பின் என்னுடைய பள்ளி வருகை பதிவேட்டில் எனது வருகையும் குறைந்தது. அதை தவிர்த்து நான் நல்ல மாணவனாக இருந்தேன். மேலும் 10ஆம் வகுப்பில் நான் 66% என்ற சராசரியில் தேர்ச்சி பெற்றேன். 12ஆம் வகுப்பில் 56% – 58% என்று நினைக்கிறேன்”

“அந்த மதிப்பெண்களுக்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஏனெனில் என்னுடைய தந்தை நான் பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைய மாட்டேன் என்று நினைத்தார். அந்த வகையில் பள்ளி அளவில் சாதாரணமாக தேர்ச்சி பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இது போன்ற பள்ளி குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்குச் செல்லும் போதெல்லாம் என்னுடைய பள்ளி வாழ்க்கைக்கு நான் திரும்பிச் செல்வதாக உணர்கிறேன். ஏனெனில் நன்கு படித்து நல்ல நண்பர்களை பெறும் இந்த நேரங்கள் உங்களது வாழ்வில் எப்போதும் திரும்ப வராது. இங்கு கிடைக்கும் நினைவுகள் உங்களது வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியை கொடுக்கும் நினைவுகளாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement