முடிந்தது தல தோனியின் சகாப்தம் : வரலாறு கண்ட மகத்தான கேப்டன், 2008 – 2021 வரையிலான சாதனை பயணம் இதோ

Dhoni-1
Dhoni Captain
- Advertisement -

ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்குகிறது. வரும் மே 29-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடர் 2 மாதங்களுக்கு மேல் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் சந்திக்க உள்ளன. இந்த தொடரில் அபாரமாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்காக சென்னை உட்பட அனைத்து அணிகளும் தீவிரமான வலை பயிற்சிக்குப்பின் தயாராக உள்ளன.

dhoni 1

- Advertisement -

முடிந்தது தல தோனியின் சகாப்தம்:
இப்படி அனைவரும் ஐபிஎல் தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வேளையில் ஐபிஎல் 2022 தொடர் துவங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

தற்போது 40 வயதை கடந்துவிட்ட அவர் சென்னை அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து விலகியதுடன் அந்த பதவியை நட்சத்திர ஆல் – ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ஜடேஜாவின் தலைமையில் ஒரு சாதாரண வீரராக முதல் முறையாக தோனி விளையாட உள்ளார் என நினைக்கும்போதே பல சென்னை ரசிகர்களின் கண்கள் கலங்குகின்றன என்று கூறவேண்டும்.

Dhoni

ஏனெனில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்டது முதல் இப்போது வரை சென்னையின் கேப்டனாக செயல்பட்ட ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் எம்எஸ் தோனி அந்த அணிக்காக 4 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இந்தியாவிற்கு உலக கோப்பையை வென்று கொடுத்தது போலவே சென்னை அணிக்கும் தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து வெற்றிகளை தேடிக் கொடுத்து வந்த அவரை தமிழக மக்களும் ரசிகர்களும் “தல” என அழைத்து தங்களின் தலையில் வைத்துக் கொண்டாடி வருகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகி உள்ளதால் ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி எனும் சகாப்தம் முடிந்து விட்டது என்றே கூறலாம்.

- Advertisement -

“தோனி ஒரு சகாப்தம்” என இங்கே குறிப்பிடுவதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள ரோகித்சர்மா கூட தொடர்ச்சியாக தனது மும்பை அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் செல்வதில்லை. அதேபோல பஞ்சாப் போன்ற ஒரு சில அணிகளுக்கு பிளே ஆஃப் தகுதி பெறுவது என்பதே ஐபிஎல் கோப்பையை வென்றது போன்ற ஒரு சாதனையாகும். ஆனால் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் சென்னை அணியை தனது நுணுக்கம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக ஒவ்வொரு வருடமும் பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற எம்எஸ் தோனி 4 முத்தான சாம்பியன் பட்டங்களை பெற்று கொடுத்துள்ளார்.

அதிலும் குறிப்பாக அவர் கேப்டன்ஷிப் செய்த 12 வருடங்களில் 11 முறை சென்னையை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதில் 9 முறை பைனலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். 4 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ஆங்கிலத்தில் “கன்சிஸ்டென்ட்” ஒரு வார்த்தை உள்ளது. அதற்கு “சீராக” என்பது அழகு தமிழின் அற்புதமான பொருள். அந்த வார்த்தைக்கு இலக்கணம் என்றால் அது எம்எஸ் தோனி எனக் கூறலாம்.

- Advertisement -

ஏனெனில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை அணியா ! அவர்கள் கண்டிப்பாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்று விடுவார்கள் என 99% பேர் கணிக்கும் ஒரு நிலைமையை கொண்டு வந்தவர் தான் எம்எஸ் தோனி. சொல்லப்போனால் ஐபிஎல் தொடர் என்பது எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கோப்பையை வெல்ல எஞ்சிய அனைத்து அணிகளும் அந்த அணிக்கு எதிராக போட்டி போடும் ஒரு தொடர் என்ற ஒரு பொதுவான கருத்தும் ஐபிஎல் வட்டாரத்தில் உள்ளது. அந்தக் கருத்தை உருவாக்கியதால் தான் எம்எஸ் தோனி – ஒரு சகாப்தம் எனப் போற்றப்படுதலுக்கு தகுதியானவராக உள்ளார்.

Dhoni

மகத்தான தோனியின் சாதனை பயணம்:
இந்த தருணத்தில் கடந்த 2008 – 2021 வரை ஒரு கேப்டனாக அவரின் சாதனை பயணத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் எனும் தொடர் துவக்கப்பட்ட போது மும்பைக்கு சச்சின், கொல்கத்தாவுக்கு கங்குலி என அந்தந்த மாநிலங்களை சேர்ந்த நட்சத்திரங்கள் கேப்டனாக பொறுப்பை ஏற்றார்கள். அந்த சமயத்தில் சென்னையில் அப்படி யாரும் உச்சபட்ச நட்சத்திர அந்தஸ்தை பெறாத காரணத்தால் 2007-ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற எம்எஸ் தோனி வருங்கால நட்சத்திரமாக வருவார் என்ற நம்பிக்கையில் அப்போது நடந்த ஏலத்தில் போட்டி போட்டு 6 கோடி ரூபாய்களை செலவழித்து வாங்கிய சென்னை அணி நிர்வாகம் தங்களது கேப்டனாக அறிவித்தது.

Dhoni

2. அந்த முதல் வருடத்திலேயே சென்னையை சிறப்பாக வழிநடத்தி பைனல் வரை அழைத்துச் சென்ற அவரால் கோப்பையை வாங்கி தர முடியவில்லை. அதன்பின் 2009-ஆம் ஆண்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னையை அழைத்துச் சென்ற அவரால் கோப்பையை மீண்டும் பெற்று தர முடியவில்லை.

3. அதன்பின் நடந்த 2010-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மீண்டும் சிறப்பாக சென்னையை வழிநடத்திய அவர் லீக் மற்றும் பிளே ஆஃப் சுற்றில் அசத்திய பின் இறுதி போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான மும்பையை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதே வருடத்தில் சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் முதல் முறையாக சென்னைக்கு பரிசளித்தார்.

dhoni

அதற்கு அடுத்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் அபாரமாக செயல்பட்ட அவர் சென்னை அணி இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று சென்னை மண்ணில் சென்னை ரசிகர்களுக்கு முன்னிலையில் பெங்களூர் அணியை தோற்கடித்து 2-வது முறையாக கோப்பையை வென்று காட்டினார். அதன் வாயிலாக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த முதல் அணி என்ற அபார சாதனையையும் சென்னை சூப்பர் கிங்ஸ் படைத்தது.

4. அதன்பின் 2014-ஆம் ஆண்டு ஃபைனல் வரை சென்று தோல்வியடைந்த சென்னை அதே வருடம் நடந்த சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையை 2-வது முறையாக வென்று சாதனை படைத்தது. அதன்பின் 2015-இல் பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற அவரால் 3-வது கோப்பையை வாங்கி தர முடியவில்லை. அப்படிப்பட்ட நேரத்தில் சென்னை அணி நிர்வாகத்தில் ஒரு சிலர் செய்த தவறுகள் காரணமாக 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி தடைபெற்றபோது புனே அணிக்காக விளையாடிய தோனி 2018-ஆம் ஆண்டு மீண்டும் சென்னை திரும்பிய போது கேப்டனாக செயல்பட்டார்.

Dhoni-3

5. அந்த வருடம் நடந்த ஏலத்தில் பெரும்பாலும் வயதான அனுபவ வீரர்களை வாங்கிய சென்னை அணியை “அங்கிள்ஸ் ஆர்மி” என கிண்டல் அடித்த எதிரணி ரசிகர்கள் இந்த அணியா கோப்பையை வாங்கப்போகிறது என கேலி பேசினார்கள். ஆனால் அதற்கெல்லாம் அசராத தோனி மீண்டும் அபாரமாக செயல்பட்டு கேலி செய்தவர்களின் முகத்தில் கரியைப் பூசி 3-வது முறையாக கோப்பையை வென்று காட்டியதுடன் சாதிப்பதற்கு வயது ஒரு தடை அல்ல என நிரூபித்தார்.

7. அதன்பின் 2019-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் இறுதிப் போட்டி வரை அவர் தலைமையில் வெற்றி நடைபோட்ட சென்னை தோல்வியடைந்தது. அதைவிட 2020-ஆம் ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் தோனியின் மஞ்சள் படை பரிதாபமாக வெளியேறியது.

Dhoni-3

8. இருப்பினும் அதற்கு அடுத்த வருடமே அவர் தலைமையில் மீண்டும் கொதித்தெழுந்த சென்னை அவமானப்பட்ட அதே துபாய் மண்ணில் மீண்டும் கோப்பையை வென்று 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

தமிழகத்தின் தல: இப்படி அடுத்தடுத்த வெற்றிகளால் தமிழக மக்களில் ஒருவராக உருமாறியுள்ள தோனிக்கு ரஞ்சியை தொடர்ந்து சென்னை தான் 2-வது வீடு என அவரே பலமுறை கூறியுள்ளார். சென்னை மீது இருக்கும் பாசத்தால் தனது வாழ்நாளின் கடைசி போட்டி சென்னை மண்ணில்தான் நடைபெறும் என அவர் ஏற்கன்வே தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த வருடம் எந்த ஒரு ஐபிஎல் போட்டியும் சென்னை மண்ணில் நடைபெறாது என்பதால் அடுத்த வருடம் வரை சென்னைக்காக ஒரு சாதாரண வீரராக விளையாடி சொன்னது போலவே சென்னை மண்ணில்தான் ஓய்வு பெறுவார் என சென்னை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

Advertisement