20 ஆவது ஓவரில் நடந்த தோனி மேஜிக். சி.எஸ்.கே அபார வெற்றி, முதல் அணியாக வெளியேறும் மும்பை – எப்படி இது சாத்தியமானது?

MS Dhoni Finisher
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெற்ற 33-ஆவது லீக் போட்டியில் வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்து தொடர் தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களைப் பிடித்த நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நவிமும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததையடுத்து களமிறங்கிய மும்பைக்கு முதல் ஓவரிலேயே மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அந்த ஓவரை வீசிய சென்னை பவுலர் முக்கியத் சவுத்ரி 2-வது பந்தில் மும்பை கேப்டன் ரோகித் சர்மாவை டக் அவுட் செய்து 5-வது பந்தில் இஷான் கிசனையும் டக் அவுட் செய்து மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

- Advertisement -

இதனால் 2/2 என படு மோசமான தொடக்கத்தை பெற்ற மும்பைக்கு அடுத்து களமிறங்கிய இளம் வீரர் தேவால்ட் ப்ரேவிஸ் 4 (7) ரன்களில் அவுட்டாகி மீண்டும் அதிர்ச்சியளிக்க மறுபுறம் அதிரடியாக விளையாடிய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவும் 3 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 32 (21) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

காப்பாற்றிய திலக் வர்மா:
அதனால் 47/4 என தடுமாறிய மும்பை 100 ரன்களை தாண்டுமா என எதிர்பார்த்த நிலையில் ஜோடி சேர்ந்த இளம் வீரர்கள் திலக் வர்மா மற்றும் ரித்திக் ஷாக்கேன் பொறுப்புடன் பேட்டிங் செய்து சரிந்த மும்பையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த ஜோடியில் 3 பவுண்டரிகள் உட்பட 25 (25) ரன்கள் எடுத்திருந்தபோது ரித்திக் ஷாக்கேன் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் கைரன் பொல்லார்ட் 1 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 14 (9) அதிரடியாக எடுத்த போதிலும் அவுட்டானார்.

ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக நின்ற திலக் வர்மா 43 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 51* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து மும்பையில் மானத்தைக் காப்பாற்றினார். இறுதியில் ஜெயதேவ் உனட்கட் 1 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 19* ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் 155/7 ரன்களை மும்பை போராடி எடுத்தது. சென்னை சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டுகளையும் ட்வயன் ப்ராவோ 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

- Advertisement -

போராடிய சென்னை:
அதை தொடர்ந்து 156 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு முதல் பந்திலேயே இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க அடுத்ததாக வந்த மிட்செல் சான்ட்னர் 2 பவுண்டரி உட்பட 11 (9) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் 16/2 என மோசமான தொடக்கத்தை சென்னையும் பெற்ற நிலையில் களமிறங்கிய அம்பத்தி ராயுடு மற்றொரு தொடக்க வீரர் ராபின் உத்தப்பாவுடன் இணைந்து சரிந்த தனது அணியை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 3-வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் செயல்பட்ட இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய போது 2 பவுண்டரி 2 சிக்சர் உட்பட 30 (25) ரன்கள் எடுத்திருந்த ராபின் உத்தப்பா ஆட்டமிழந்தார். அடுத்த ஒரு சில ஓவர்களில் சிவம் துபே 13 (14) ரன்களில் பொறுப்பின்றி அவுட்டாகி ஏமாற்றினார்.

Mi Mumbai

அந்த வேளையில் 35 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சருடன் வெற்றிக்காகப் போராடி அம்பத்தி ராயுடுவும் 40 ரன்களில் அவுட்டானார். அந்த நிலையில் களமிறங்கிய கேப்டன் ரவீந்திர ஜடேஜாவும் 2 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்ததால் சென்னையின் வெற்றி கேள்விக்குறியானது. அந்த பரபரப்பான நேரத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் ட்வைன் பிரெடோரியஸ் அதிரடியாக 2 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 14 ரன்கள் எடுத்து போராடி கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட போது கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.

தோனி மாஸ்டர் பினிசிங்:
ஆனால் மறுபுறம் நின்ற எம்எஸ் தோனிக்கு 2-வது பந்தில் களமிறங்கிய பிராவோ சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக் கொடுக்க ஜெயதேவ் உனட்கட் வீசிய அந்த ஓவரின் 3-வது பந்தில் மெகா சிக்சரை பறக்க விட்ட தோனி 4-வது பந்தில் பவுண்டரியையும் 5-வது பந்தில் 2 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது மின்னல் வேக பவுண்டரியை பறக்கவிட்டு 13 பந்துகளில் 28* ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அபார பினிஷிங் கொடுத்தார். இதனால் 20 ஓவர்களில் 156/7 ரன்களை எடுத்த சென்னை வெறும் 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று இந்த வருடம் பங்கேற்ற 7-வது போட்டியில் 2-வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

MS Dhoni 28

மறுபுறம் பேட்டிங்கில் ஆரம்பத்தில் சொதப்பினாலும் அதன்பின் போராடி ரன்களை எடுத்த மும்பை பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு கடைசி பந்து வரை வெற்றிக்காக போராடிய போதிலும் வெற்றி பெற முடியவில்லை. இதன் காரணமாக இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளிலும் தோல்வி அடைந்த அந்த அணி வரலாற்றிலேயே முதல் முறையாக 7 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்த அணி என்ற படு மோசமான சாதனையை படைத்து ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுடன் முதல் அணியாக வெளியேறியவது 99.9% உறுதியானது.

Advertisement