ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா அணி வென்று சாதனை படைத்துள்ளது. மே 26ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹைதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா 3வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்து வெறும் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஆரம்பத்திலேயே வெற்றியை தாரை வார்த்தது.
அந்த அணிக்கு முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக பட் கமின்ஸ் 24 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ரசல் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 114 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு வெங்கடேஷ் 51*, குர்பாஸ் 39 ரன்கள் அடித்து 10.3 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 2016க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் வாய்ப்பை ஹைதராபாத் கோட்டை விட்டது.
24.75 கோடி ஆட்டநாயகன்:
மறுபுறம் 2012, 2014குப்பின் 3வது கோப்பையை வென்ற கொல்கத்தா அணி சென்னை மற்றும் மும்பைக்கு அடுத்தபடியாக 2வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு 3 ஓவரில் வெறும் 14 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய மிட்சேல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
24.75 என்ற வரலாறு காணாத தொகைக்கு வாங்கப்பட்ட அவர் லீக் சுற்றில் அசத்தினாலும் நாக் அவுட் போட்டிகளில் அடுத்தடுத்து ஆட்டநாயகன் விருதுகளை வென்று தன்னை சாம்பியன் பிளேயர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். இந்நிலையில் 24.75 கோடிக்கு வாங்கப்பட்ட போது பலரும் தம்மை கிண்டலடித்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவத்தை வைத்து ஐபிஎல் தொடரிலும் அசத்தியதாக ஸ்டார்க் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“கொல்கத்தா அணிக்கு அற்புதமான இரவு. என்ன ஒரு அற்புதமான போட்டி. அற்புதமான சீசன். 2 சுவாரசியமான அணிகள் மோதிய ஃபைனல் நன்றாக இருந்தது. எங்களிடம் நல்ல பேட்ஸ்மேன்கள் பவுலர்கள் கொண்ட அணி இருந்தது. எங்களுடைய பயிற்சியாளர் குழுவினர் அனைத்து வீரர்களின் உச்சகட்ட செயல்பாடுகளை கொண்டு வந்தனர். அதனால் தொடர்ந்து அசத்திய எங்கள் அணியில் ஒவ்வொருவரும் பங்காற்றினர். டாஸ் தோல்வியை சந்தித்ததால் முதலில் பவுலிங் செய்யும் வாய்ப்பை பெற்றோம். கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடந்த போட்டியை பார்த்த போது பிட்ச் என்ன செய்யும் என்பது தெரியாமல் இருந்தது”
இதையும் படிங்க: 10.3 ஓவரில் ஹைதராபாத்தை முடித்த கொல்கத்தா வரலாற்று சாதனை.. தோனியின் இமாலய சாதனையை தவறவிட்ட கமின்ஸ்
“எனவே அது சூழ்நிலைக்கு உட்படுத்திக் கொள்வதை பற்றியதாகும். ஸ்ரேயாஸ் ஐயர் தனது பவுலர்களை சிறப்பாக பயன்படுத்தி ஃபீல்டிங் செய்தார். அவருக்கு வெற்றிக்கான பாராட்டுக்கள். என்னுடைய சம்பளம் பற்றி நகைச்சுவைகள் காணப்பட்டது. ஐபிஎல் தொடரில் நான் விளையாடி நீண்ட காலமாகி விட்டது. இருப்பினும் என்னுடைய அனுபவம் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய உதவியது. எனவே நான் வயதுடன் அனுபவத்தை கொண்டிருப்பதற்காக மகிழ்ச்சியடைகிறேன். எங்களின் அனைத்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பாராட்டுக்கள்” என்று கூறினார்.