இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை ஆஸ்திரேலியாவில் சதமடிக்க விட மாட்டோம் என அந்நாட்டு அணியின் பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் சவால் விடுத்திருக்கிறார்.இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 2 டி20 போட்டி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
இந்தநிலையில், சிட்னி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், என்னுடைய துணிச்சலான மற்றும் தைரியமான கணிப்பு என்னவென்றால், ஆஸ்திரேலியத் தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலியால் சதமடிக்க முடியாது. அவரை விரைவில் நாங்கள் ஆட்டமிழக்கச் செய்வோம்’’ என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத், ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் விராட் கோலியைச் சோதிக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார். மேலும், ஆஸ்திரேலிய அணி, தங்களது வெற்றி வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக்கொள்ள, விராட் கோலியின் விக்கெட்டை விரைவில் வீழ்த்த வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 4 சதங்கள் உட்பட 692 ரன்கள் குவித்திருக்கிறார். இதில், அவரது சராசரி 86.50 ஆகும். டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 53.40 என்பது குறிப்பிடத்தக்கது.