புது ஈடன் கார்டன்… புது ஏலம்… புது நைட்ரைடர்ஸ்…! ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்?

kuldeep
Advertisement

முந்தைய ஐ.பி.எல் ஏலங்களில் புத்திசாலித்தனமாகச் செயல்பட்ட அணி எதுவென்றால், கொல்கத்தா நைட்ரைடர்ஸைச் சொல்லலாம். தங்கள் சொந்த மைதானத்துக்கு ஏற்றதுபோல் வீரர்களை வாங்கிய ஒரே அணி கே.கே.ஆர்தான். சுழலுக்குச் சாதகமான ஈடன் கார்டன் ஆடுகளத்துக்குத் தகுந்ததுபோல் வீரர்களை வாங்கியது அந்த அணி. கடந்த சில ஆண்டுகளாக அந்தத் திட்டம் அவர்களுக்குக் கைகொடுத்தது. ஆனால், இந்தமுறை… அந்தத் திட்டம் அவர்களுக்குக் கைகொடுக்கப் போவதில்லை. ஸ்பின்னர்களை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு களமிறங்க முடியாது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் இம்முறை வேறு ஃபார்முலாவுடன் களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
kuldeep

ஐ.பி.எல் தொடரில் இந்திய வீரர்கள் மட்டுமில்லாது, திறமையான சில வெளிநாட்டு வீரர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில், வெகுசிலர் தேசிய அணியில் தங்களுக்கென தனி இடம் பிடித்தனர். அந்த வெகுசிலரில் ஒருவர் சுனில் நரீன். 2012-ல் கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட நரீன், முதல் சீசனிலேயே தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார். அன்று முதல், அந்த அணியின் மிகமுக்கிய அங்கமாக விளங்குகிறார். அவரது வெற்றிக்கு முக்கியக் காரணம் – ஈடன் கார்டன் மைதானம். ஸ்பின்னர்களின் சொர்க்க பூமியாக விளங்கிய அந்த மைதானத்தில் விக்கெட் வேட்டை நடத்தி, பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாய் விளங்கினார்.

நரீன் மட்டுமல்ல, பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ் என அங்கு பந்துவீசிய ஸ்பின்னர்கள் அனைவருமே சிறப்பாகப் பந்துவீசினர். கே.சி. கரியப்பா, பிராட் ஹாக், ஜோஹன் போதா என ஸ்பின்னர்களால் அணியை நிரப்பியது கொல்கத்தா. போதாக்குறைக்கு யூசுப் பதான், ஷகிப் அல் ஹசன் என ஆல்ரவுண்டர்களிலும் நல்ல ஸ்பின்னிங் ஆப்ஷன் கொண்டிருந்தது. ஒரு போட்டியில் 18 ஓவர்களை ஸ்பின்னர்களை வைத்தே முடித்தார் கம்பீர். அந்த அளவுக்கு ஸ்பின்னுக்கு ஒத்துழைத்தது ஈடன் கார்டன். அதனால்தான், ஒவ்வொரு ஏலத்தின் போதும் கொல்கத்தா அணியின் குறி ஸ்பின்னர்கள் மீது அதிகம் இருந்தது.

- Advertisement -

kuldeep

அந்த ஒரு போட்டியில் மட்டுமல்ல, எல்லா போட்டிகளிலும், வேகப்பந்துவீச்சாளர்களுக்குச் சமமாக ஸ்பின்னர்களைப் பயன்படுத்தினார் கம்பீர். 2017 சீசனில், ஸ்பின்னர்களுக்கு அதிக ஓவர்கள் கொடுத்த அணி (127 ஓவர்கள்) நைட்ரைடர்ஸ்தான். அந்த அணி பௌலர்கள் பந்துவீசியதில், ஸ்பின்னர்களின் பங்கு மட்டுமே 42.10 சதவிகிதம். கொல்கத்தாவைவிட ராயல் சேலஞ்சர்ஸ் மட்டுமே ஸ்பின்னர்களை அதிக அளவு (47.63 சதவிகித ஓவர்கள்) பயன்படுத்தியது. ஏனெனில், அந்த அணியின் பல போட்டிகள் விரைவிலேயே முடிந்துவிட்டன. இல்லையேல், இந்த சதவிகிதம் குறைந்திருக்கும்.

2014-ல் இருந்து பார்த்தால் கொல்கத்தா அணி கடந்த சீசனில்தான் ஸ்பின்னர்களைக் குறைவாகப் பயன்படுத்தியிருக்கிறது. அவர்கள் சாம்பியன் ஆன 2014-ம் ஆண்டு ஸ்பின்னர்கள் மட்டுமே 154.3 ஓவர்கள் வீசியிருந்தனர். அது அந்த அணி வீசிய மொத்த ஓவர்களில் 48.82 சதவிகிதம். அதில் நரீன் மட்டுமே 64 ஓவர்கள் வீசியிருந்தார். அவர் விளையாடிய 16 போட்டிகளிலும் 4 ஓவர்களை முழுமையாக வீசியிருந்தார். கொல்கத்தா முதன்முதலில் சாம்பியன் பட்டம் வென்ற 2012-ம் ஆண்டிலும் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அந்த ஆண்டும் 133.1 ஓவர்களை (40.31 சதவிகிதம்) ஸ்பின்னர்கள் வீசினர்.

- Advertisement -

இடைப்பட்ட 2015, 2016 ஆண்டுகளிலும் அதிக அளவில் ஸ்பின்னர்களைப் பயன்படுத்தினார் கம்பீர். அந்த ஆண்டுகளில் முறையே 49.87, 48.86 சதவிகித ஓவர்களை வீசியது நரீன் அண்ட் கோ. இந்த எண்களெல்லாம் ‘ஹோம்’ மற்றும் ‘அவே’ மேட்ச்கள் இரண்டும் சேர்த்ததுதான். ஈடன் மைதானத்தை மட்டும் கணக்கில் கொண்டால் ஸ்பின்னர்களின் பங்களிப்பு மலைக்கவைக்கும். உதாரணமாக 2015 ஐ.பி.எல் – ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடிய 6 போட்டிகளில் (ஓரு போட்டி மழையால் கைவிடப்பட்டது) 119 ஓவர்களைக் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் வீசினர். அதில், 70 ஓவர்களை (58.82 சதவிகிதம்) ஸ்பின்னர்கள்தான் வீசியிருந்தனர். அதில் பெரும்பாலான போட்டிகளில் 1 வேகப்பந்துவீச்சாளர், 1 வேகப்பந்து ஆல்ரவுண்டரை மட்டுமே வைத்து களம்கண்டார் கம்பீர். அந்த அளவுக்கு கொல்கத்தா பிட்சுக்கு சுழல் மீது காதல். ஆனால்…

எல்லாம் கடந்த சீசன் வரைதான். எல்லாம் மாறிவிட்டது. எல்லாவற்றையும் மாற்றிவிட்டார் பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் சௌரவ் கங்குலி. ‘2019 உலகக்கோப்பை நடக்கும் இங்கிலாந்தில் உள்ளதுபோல் ஆடுகளம் மாற்றப்படும்’ என்றார் அவர். அதுபோலவே ஆடுகளம் மாற்றப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் அது கண்கூடாகத் தெரிந்தது. ஸ்விங் மற்றும் Seam-க்கு ஒத்துழைத்த அந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்யத் திணறினர் இந்திய வீரர்கள். அவர்கள் மட்டுமல்ல, இலங்கை வீரர்களும்தான். அந்தப் போட்டியில் வீழ்த்தப்பட்ட 35 விக்கெட்டுகளில் 32 விக்கெட்டுகள் வேகப்பந்துவீச்சாளர்கள் எடுத்தது. அந்த அளவுக்கு ஈடன் ஆடுகளத்தின் தன்மை மாறியிருந்தது.

அது அந்தப் போட்டிக்காக மட்டும் அமைக்கப்பட்ட ஆடுகளம் அல்ல. உள்ளூர் வீரர்கள் முதல் சரர்வதேச வீரர்கள்வரை அனைவருமே அதுபோன்ற ஆடுகளத்தில் ஆடவேண்டும் என்ற நோக்கத்தில் நிரந்தரமாகவே அதன் தன்மை மாற்றப்பட்டது. அந்தப் போட்டிக்கு 2 வாரம் முன்பு நடந்த ஹிமாச்சல் பிரதேசம் – மேற்கு வங்கம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சிப் போட்டியில் 34 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது. அதில், ஸ்பின்னர்களுக்குக் கிடைத்தது இரண்டே இரண்டு! மற்ற 32 விக்கெட்டுகளும் வேகப்பந்துவீச்சாளர்கள் வீழ்த்தியது. அடுத்தடுத்து நடந்த போட்டிகளிலும் ஸ்பின்னர்களால் ஜொலிக்க முடியவில்லை. மேற்கு வங்கம், கோவா அணிகள் மோதிய லீக் போட்டி, விதர்பா, கர்நாடகா அணிகள் மோதிய அரையிறுதி என இந்த இரண்டு போட்டிகளில் 67 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. அதில் ஸ்பின்னர்கள் வீழ்த்தியது வெறும் 5 விக்கெட்டுகள்தான்!

Source: Vikatan

Advertisement