இந்த குணம் உங்கள விட்டு போகாதா? இந்தியாவை கிண்டலடித்த பாகிஸ்தான் பிரதமருக்கு இர்பான் பதான் கொடுத்த பதிலடி என்ன

Irfan-pathan
- Advertisement -

உலகப் புகழ் பெற்ற ஐசிசி டி20 உலக கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் முதல் முறையாக நடைபெற்ற இந்த தொடரில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத எம்எஸ் தோனி தலைமையில் இளம் வீரர்களுடன் சொல்லி அடித்த இந்தியா ஃபைனலில் மிஸ்பாவின் போராட்டத்தையும் தாண்டி வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் பரம எதரி பாகிஸ்தானை தோற்கடித்து த்ரில் வெற்றி பெற்றது. ஆனால் அதன் பின் 15 வருடங்களாக 2வது கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில் அவரது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற பெரும்பாலான தொடர்களில் வென்ற இந்தியா தரவரிசையில் 2016க்குப்பின் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியது. ஆனால் லீக் சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா வழக்கம் போல இங்கிலாந்துக்கு எதிரான அழுத்தமான நாக் அவுட் கிரிக்கெட் போட்டியில் சொதப்பி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. மறுபுறம் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளிடம் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்ததால் பாகிஸ்தானின் கதை முடிந்ததாக கருதப்பட்டது.

- Advertisement -

பிரதமருக்கு பதிலடி:
ஆனால் கடைசி நேரத்தில் கத்துக்குட்டி நெதர்லாந்திடம் தோற்று தென்னாப்பிரிக்கா வெளியேறிய அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அரையிறுதிக்குள் நுழைந்து நியூசிலாந்தை தோற்கடித்த அந்த அணி நவம்பர் 13ஆம் தேதியன்று நடைபெறும் மாபெரும் ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அப்போது முதலே இந்தத் தொடரில் முதல் போட்டியில் சந்தித்த தோல்வி உட்பட காலம் காலமாக சந்தித்த வரலாற்று தோல்விகளுக்கு பழி தீர்ப்பதற்காக 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்து இந்தியா வெல்ல வேண்டுமென்று அந்நாட்டவர்கள் வெளிப்படையாக வம்பிழுத்தார்கள்.

இருப்பினும் துரதிஷ்டவசமாக இந்தியா தோற்ற பின் எங்களுடன் மோதுவதற்கு தகுதியற்ற அணி என்று தற்போது தம்பட்டம் அடித்து வருகிறார்கள். ஆனால் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அப்படி பேசுவது கூட வழக்கம் என்ற நிலைமையில் பாகிஸ்தானின் பிரதமரே நேரடியாக இந்தியாவை தாழ்த்தும் வகையில் பேசியுள்ளது இந்தியர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. ஆம் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் 169 ரன்களைத் துரத்திய இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 170/0 ரன்களைக் குவித்து இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் அடித்து நொறுக்கியது.

- Advertisement -

முன்னதாக கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் நிர்ணயிக்கப்பட்ட 152 ரன்களை விக்கெட் இழப்பின்றி 152/0 ரன்கள் குவித்து வெற்றிகரமாக சேசிங் செய்த பாகிஸ்தான் 30 வருடங்கள் இந்தியாவை முதன்முறையாக தோற்கடித்தது. அந்த வகையில் இந்தியாவை ஓட ஓட விரட்டிய அவ்விரு அணிகளும் ஞாயிற்றுக்கிழமை பைனலில் மோதவிருப்பதாக 152/0 VS 170/0 என்று பாகிஸ்தான் பிரதமர் “செபாஸ் ஷரீப்” தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதற்கு உங்களது அணியின் வெற்றியை மட்டும் கொண்டாடாமல் எப்போதும் இந்தியாவை வம்பிழுப்பதே வேலையா என்ற வகையில் இந்திய ரசிகர்கள் கடுமையாக பதிலடி கொடுத்தார்கள்.

அந்த வரிசையில் இணைந்த முன்னாள் இந்திய வீரர் அடுத்தவர்களின் தோல்வியை கொண்டாடும் உங்களது குணம் எப்போதும் மாறாது என்ற வகையில் கொடுத்த பதிலடி பின்வருமாறு. “இது தான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம். நாங்கள் எங்களது நிலையில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால் மற்றவர்கள் கஷ்டத்தில் இருக்கும் போது நீங்கள் மகிழ்ச்சியை தேடுகிறீர்கள். அதனால் தான் நீங்கள் உங்கள் நாட்டில் நலனில் கவனம் செலுத்துவதில்லை” என்று காட்டமாக பதிலடி கொடுத்தார்.

அதே போல் மற்றொரு முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கொடுத்த பதிலடி பின்வருமாறு. “வயதாகி வருவது கட்டாயம். வளர்வது விருப்பமானது” என்று மோசமான எண்ணங்களில் இருந்து பாகிஸ்தான் எப்போதும் வெளிவந்து வளரவில்லை என மறைமுகமாக விமர்சித்தார். முன்னதாக 1992 போல இம்முறையும் ஃபைனலில் இங்கிலாந்தை பாகிஸ்தான் வீழ்த்தி கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டவர்கள் உறுதியான கனவு கண்டு கொண்டிருப்பது குறிப்பிடப்பட்டது.

Advertisement