10 ஆண்டுகள் கழித்து ஐ.பி.எல்-லின் மெகா ஏலம் இன்று நடக்க உள்ளது. இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவை மீண்டும் களத்தில் இறங்க உள்ளதால், ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றும் நாளையும் பெங்களூரூவில் இந்த ஏலம் நடக்கிறது. 1,122 வீரர்களிலிருந்து 578 வீரர்கள் இந்தக் கடைசி இரண்டு நாள் ஏலத்துக்கு வைக்கப்பட்டுள்ளார்கள். இதில், 244 வீரர்கள் முன்னரே விளையாடிவர்கள். இந்தியர்கள் 62 பேர். 332 வீரர்கள் முதன்முறையாக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட உள்ளனர். இதில், 34 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும், ஏலத்தில் இருக்கும் வீரர்கள் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவுக்கும் தனித் தனியாக எலம் நடைபெறும். முன்னணி வீரர்கள் 16 பேர் `மார்க்கி’ லிஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.
முதல் வீரராகத் தவான் ஏலத்துக்கு வந்தார். அவரை பஞ்சாப் அணி, 5.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ஆனால், ஆர்.டி.எம் மூலம் ஹைதராபாத் அவரை மீட்டது.
இதையடுத்து, அஷ்வின் ஏலத்துக்கு விடப்பட்டார். சி.எஸ்.கே ஏலத்தைத் தொடங்கிவைக்க, பல அணிகள் அஷ்வினை எடுக்க மும்முரம் காட்டின. குறிப்பாக, பஞ்சாப் அணி அவரை எடுக்க ஆர்வம் காட்டியது. இதையடுத்து அவரை 7.60 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது பஞ்சாப்.
பொல்லார்டு ஏலத்துக்கு வர, டெல்லி அணி அவரை 5.40 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி, ஆர்.டி.எம் மூலம் அவரை மீட்டது.
அடுத்ததாகக் கெய்ல் 2 கோடி ரூபாய் பேஸ் விலையில் ஏலத்துக்கு விடப்பட்டார். ஆனால், எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால், அவர் ஏலத்தில் விற்கப்படாமலேயே சென்றார்.
Source: Vikatan