ரோஹித் சர்மா மிரட்டல் சதம் ..! இங்கிலாந்தை பந்தாடிய இந்திய வீரர்கள்..! கோப்பையை வென்றது இந்தியா..!

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது. பிரிஸ்டோலில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்யப் பணித்தார். இதையடுத்து களமிறங்குய இங்கிலாந்து வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். இதனால் பவர் ஃப்ளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து அணி 73 ரன்கள் குவித்ததது.
dhoni
முதல் விக்கெட்டுக்கு 7.5 ஓவர்களில் 94 ரன்கள் குவித்திருந்த நிலையில், இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டை இழந்தது. 34 ரன்கள் சேர்த்திருந்த ஜோஸ் பட்லர், சித்தார்த் கவுல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இங்கிலாந்து அணி 9.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டி மிரட்டியது. இதனால், அந்த அணியின் ஸ்கோர் 200 ரன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 23 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்திய ஜேசன் ராய், 67 ரன்களில் ஆட்டமிழந்தார். தீபக் சஹார் வீசிய பத்தாவது ஓவரில் அவர் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்களில் அலெக்ஸ் ஹேல்ஸ் (30), பேரிஸ்டோவ் (25) ஆகியோர் தவிர மற்ற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதேபோல், இந்த போட்டியில் 5 கேட்சுகள் பிடித்த தோனி, டி20 போட்டி ஒன்றில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர் என்ற சாதனையைத் தன்வசமாக்கினார். 199 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 3 வது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது.
pandiya
தவான், 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். அடுத்துவந்த கே.எல்.ராகுல், 19 ரன்களில் வெளியேற, ரோஹித் ஷர்மாவுடன் கேப்டன் விராட் கோலி கைகோத்தார். இந்த ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைச் சோதித்தது. இந்திய அணியின் ரன்ரேட்டை சீரான வேகத்தில் உயர்த்திய இந்த ஜோடி, 10.1 ஓவர்களின் அணியின் ஸ்கோர் 100 ரன்களைக் கடக்க உதவியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா 28 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், விராட் கோலி 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஜோர்டானின் அசத்தல் கேட்சில் வெளியேறினார்.

அதன்பின்னர் ஆட்டமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா, ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ரோஹித் ஷர்மா 56 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்திக் பாண்ட்யா, 14 பந்துகளில் 33 ரன்களையும் குவித்து ஆல்ரவுண்டராக ஜொலித்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.