IND vs RSA : 2வது போட்டியிலும் மண்ணை கவ்விய இந்தியா. தெ.ஆ அபார வெற்றி – தவறு எங்கு நடந்தது தெரியுமா?

IND vs SA Henrich Klaasen
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஜூன் 12-ஆம் தேதி ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெற்ற 2-வது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து தனது பேட்டிங்கை துவக்கிய இந்தியாவுக்கு முதல் ஓவரிலேயே ருத்ராஜ் கைக்வாட் 1 (4) ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிசான் 2 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்கவிட்டு 34 (21) ரன்களை அதிரடியாக எடுத்து ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் 5 (7) ஹர்திக் பாண்டியா 9 (12) என அடுத்தடுத்து தென்னாபிரிக்காவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர். அந்த சமயத்தில் மறுபுறம் போராடிக்கொண்டிருந்த ஸ்ரேயாஸ் அய்யர் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 40 (35) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியைக் கொடுத்தார். அதனால் 14 ஓவரில் 98/5 என இந்தியா திணறிய நிலையில் அடுத்து வந்த அக்சர் படேலும் 10 (11) ரன்களில் நடையை கட்டினார்.

- Advertisement -

இலக்கு 149:
அதனால் 130 ரன்களைக் கூட தாண்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவிற்கு நல்லவேளையாக கடைசி நேரத்தில் களமிறங்கி பொறுப்புடனும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 30* (21) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுக்க அவருடன் ஹர்ஷல் படேல் 12* (9) ரன்கள் எடுத்தார். ஆனாலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா 148/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜெ 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து 149 என்ற சுலபமான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு சீனியர் பவுலர் புவனேஸ்வர் குமார் ஹென்றிக்ஸ் 4 (3) ட்வயன் பிரிடோரியஸ் 4 (5) வேன் டெர் டுஷன் 1 (7) என பவர்பிளே ஓவர்களில் அபாரமாக பந்துவீசி டாப் ஆர்டரை காலி செய்தார். அதனால் 29/3 என தென் ஆப்பிரிக்கா திணறியதால் இந்தியா இம்முறை நிச்சயம் வெற்றி பெற்றுவிடும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் அப்போது களமிறங்கிய ஹென்றிச் க்ளாசென் மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் தெம்பா பவுமாவுடன் இணைந்து நிதானமாகவும் அதிரடியாக ரன்களை சேர்த்தார். 4-வது விக்கெட்டுக்கு முக்கியமான 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த இந்த ஜோடியில் பவுமா 35 (30) ரன்கள் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் மறுபுறம் இந்த தொடரில் முதல் முறையாக களமிறங்கி இந்தியாவிற்கு பெரிய சவாலை கொடுத்த க்ளாசென் மிடில் ஓவரில் இந்திய பவுலர்களை சரமாரியாக அடித்து 7 பவுண்டரி 5 சிக்சருடன் அரைசதம் கடந்து 81 (46) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். இறுதியில் வழக்கம் போல 1 பவுண்டரி 1 சிக்ஸர் பறக்க விட்ட டேவிட் மில்லர் மிரட்டலான பினிஷிங் கொடுத்ததால் 18.2 ஓவரிலேயே 149/6 ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

சொதப்பிய இந்தியா:
முன்னதாக ஏற்கனவே டெல்லியில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அந்த அணி இந்த வெற்றியால் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இப்படி சொந்த மண்ணில் அடுத்தடுத்து தோல்விகளை பரிசளித்துள்ள தென் ஆப்பிரிக்கா உங்கள் ஊராக இருந்தாலும் எங்களை குறைத்து மதிப்பிடாமல் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் முழு மூச்சுடன் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியை நினைத்து பார்க்க முடியும் என்று மீண்டும் நிரூபித்துள்ளது.

அந்த அளவுக்கு கேப்டன் ரோகித் சர்மா இல்லாமல் இந்த தொடரில் திணறும் இந்தியா முதல் போட்டியில் பந்து வீச்சில் சொதப்பி தோல்வியை பெற்றது. ஆனால் இந்த போட்டியில் பேட்டிங்கில் கோட்டை விட்டது. ஆம் கடந்த போட்டியில் டாஸ் வெல்லாத போதிலும் 212 ரன்கள் குவித்த இந்தியா இம்முறை பேடிங்க்கு சவாலான பிட்சில் ருதுராஜ் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றிய போதிலும் இஷான் கிஷன் அதிரடியால் ஓரளவு நல்ல தொடக்கம் பெற்றது. ஆனால் அவர் தனது வேலையை முடித்து விட்டு சென்ற பின் மிடில் ஓவரில் வந்த கேப்டன் ரிஷப் பண்ட் வழக்கம்போல குருட்டுத்தனமான சாட் அடித்து 7 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பரிசளித்தார்.

அதேபோல் அதிரடி காட்ட வேண்டிய பாண்டியாவும் 12 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 9 ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார். ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு சேசிங் செய்யும் போது டாப் ஆர்டர் சொதப்பினாலும் அதே மிடில் ஆர்டரில் பவுமா – க்ளாசென் ஜோடி அதிரடியாக ரன்களை சேர்த்தது. குறிப்பாக 4 விக்கெட்டுக்கள் எடுத்து அற்புதமாக பந்து வீசிய புவனேஸ்வர் குமாரை தவிர எஞ்சிய பவுலர்களை குறிவைத்து வெளுத்து வாங்கிய க்ளாசென் இந்தியாவிற்கு மீண்டும் தோல்வியை பரிசளித்தார். அத்துடன் சஹால், அக்சர் பட்டேல், ஹர்டிக் பாண்டியா ஆகிய முக்கிய பவுலர்கள் விக்கெட் எடுக்காமல் ரன்களை வாரி வழங்கியது இந்த தோல்விக்கு முக்கிய பங்காற்றியது.

Advertisement