IND vs AUS : வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது டி20 நடக்கும் ஹைதராபாத் மைதானம் எப்படி, புள்ளிவிவரம் – பிட்ச், வெதர் ரிப்போர்ட்

Hyderabad Cricket Ground Stadium
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்தியா 2வது போட்டியில் கொதித்தெழுந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்துள்ளது. டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் மொகாலியில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் 209 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியுடன் விமர்சனங்களையும் சந்தித்த இந்தியா நாக்பூரில் மழையால் 8 ஓவர்களாக குறைக்கப்பட்ட 2வது போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 91 ரன்களை ரோகித் சர்மாவின் அதிரடியால் சேசிங் செய்து சொந்த மண்ணில் அவ்வளவு எளிதில் சாய்ந்து விட மாட்டோம் என்று நிரூபித்துள்ளது.

இதனால் 1 – 1* (3) என சமனில் நிற்கும் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3வது மற்றும் கடைசி போட்டி செப்டம்பர் 25ஆம் தேதியன்று இரவு 7 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடைபெறுகிறது. தற்சமயத்தில் உலக டி20 சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியாவும் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இருக்கும் இந்தியாவும் விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக தங்களது பலத்தை சோதித்து பார்க்கும் இந்த தொடரின் வெற்றிக் கோப்பையை தீர்மானிக்கப்போகும் இப்போட்டியை வெல்வதற்காக முழுமூச்சுடன் போராட தயாராகியுள்ளன.

- Advertisement -

ஹைதராபாத் மைதானம்:
அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அனல் பறக்கப் போகும் இந்த போட்டி ஹைதராபாத் நகரில் இருக்கும் புகழ்பெற்ற ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 2004இல் தோற்றுவிக்கப்பட்டு 2005 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வரும் இம்மைதானம் ஒரே நேரத்தில் 55000 ரசிகர்கள் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
1. கடந்த 2017இல் முதல் முறையாக இங்கு நடைபெற்ற சர்வதேச டி20 போட்டியில் இதே ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொண்ட போது மழை குறுக்கீட்டு மொத்தமாக ரத்து செய்ய வைத்தது.

2. அதன்பின் கடந்த 2019இல் 2வதாக இங்கு நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்ட இந்தியா 6 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. அதை தொடர்ந்து 3 வருடங்கள் கழித்து இப்போதுதான் இம்மைதானத்தில் 3வது சர்வதேச டி20 போட்டி நடைபெறுகிறது.

- Advertisement -

புள்ளிவிவரங்கள்:
1. இந்த மைதானத்தில் அதிக ரன்கள் (94) அதிகபட்ச ஸ்கோர் (94) அதிக சிக்ஸர்கள் (6) அடித்த பேட்ஸ்மேனாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.

2. இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகளையும் (2) சிறந்த பந்து வீச்சையும் பதிவு செய்த இந்திய பவுலராக யுஸ்வென்ற சஹால் (2/16) உள்ளார்.

- Advertisement -

3. இந்த மைதானத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிகபட்ச ஸ்கோர் : இந்தியா – 209/4, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2019

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் ஹைதராபாத் மைதானத்தில் போட்டி நாளன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழைக்கான வாய்ப்பு 10 – 25% இருக்கும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. அதனால் பெரும்பாலும் மழையின் தாக்கமின்றி இப்போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த போட்டியில் மழை குறுக்கிட்டாலும் நாக்பூர் போட்டியை போல ஓவர்கள் குறைக்கப்பட்டு நடைபெறும் என்பதால் இப்போட்டியில் முடிவு கிடைக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
இந்த மைதானத்தில் வரலாற்றில் ஒரு சர்வதேசப் போட்டி மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் நிறைய ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதன் அடிப்படையில் இங்கு புதிய பிட்சில் போட்டி துவங்கும் போது இருக்கும் வேகம் நேரம் செல்ல செல்ல குறைவதை பார்க்க முடிந்தது. அதாவது ஆரம்பத்திலேயே அதிரடியாக ரன்கள் எடுக்கும் அளவுக்கு நல்ல உதவி புரியும் இங்குள்ள பிட்ச் நேரம் செல்ல செல்ல குறிப்பாக 2வது இன்னிங்சில் பந்து வீச்சுக்கு சாதகமாக மாறக்கூடியதாக உள்ளது. அதிலும் குறிப்பாக இந்த மைதானத்தில் 158 ரன்களாக இருக்கும் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 2வது இன்னிங்சில் 135 ரன்களாக குறைகிறது.

அதனால் சமீப காலங்களாக நிறைய போட்டிகளில் இங்கு முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்படும் நல்ல இலக்குகள் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே இங்கு சேசிங் செய்வது கடினமாக பார்க்கப்படுவதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து 160 – 170 ரன்களை எடுத்தால் வெற்றிக்கு அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் இப்போட்டி இரவு நேரத்தில் நடைபெறுவதால் பனியின் தாக்கத்தை கருத்தில் கொண்டு டாஸ் வென்று முதலில் பந்து வீச தீர்மானித்தால் பெரிய ரன்களை சேசிங் செய்வதற்கு தைரியத்துடன் தயாராக இருக்க வேண்டும்.

Advertisement