IND vs AUS : 2 பந்தில் முடித்தது போன்ற உங்களுடைய ஃபினிஷிங் ரகசியம் என்ன – செய்தியார் கேள்விக்கு ஓப்பனாக டிகே பேசியது இதோ

Dinesh-Karthik-1
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 209 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை சந்தித்த இந்தியா நாக்பூரில் நடைபெற்ற 2வது போட்டியில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. அதனால் சொந்த மண்ணில் அவ்வளவு எளிதில் தோற்கடிக்க முடியாது என்பதையும் நம்பர் ஒன் டி20 அணி என்பதையும் நிரூபித்து ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி செப்டம்பர் 25ஆம் தேதியன்று ஹைதராபாத் நகரில் நடைபெறுகிறது.

Dinesh Karthik

- Advertisement -

முன்னதாக மழையால் தாமதமாக துவங்கி 8 ஓவர்களாக நடைபெற்ற 2வது போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 91 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஒருபுறம் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் என முக்கிய வீரர்கள் ஆடம் ஜாம்பாவிடம் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட கேப்டன் ரோகித் சர்மா 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 46* (20) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் டேனியல் சாம்ஸ் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட போது களமிறங்கிய தினேஷ் கார்த்திக் கொஞ்சமும் பதற்றமடையாமல் முதல் பந்திலேயே பைன் லெக் திசையில் சிக்சர் அடித்து அடுத்த பந்தில் மிட் விகெட் திசையில் பவுண்டரி பறக்க விட்டு சூப்பர் பினிஷிங் கொடுத்தது அனைவரின் பாராட்டுகளைப் பெற்றது.

ரசிகர்கள் என்ன:
குறிப்பாக ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக முன்கூட்டியே கொடுத்த வாய்ப்பில் அசத்தலாக செயல்பட்டதால் மகிழ்ச்சியடைந்த கேப்டன் ரோகித் சர்மா அவரை கட்டியணைத்து பாராட்டினார். ஒரு கட்டத்தில் கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் தம்மால் உலகக் கோப்பையில் விளையாட முடியும் என்ற நம்பிக்கையுடன் ஐபிஎல் 2022 தொடரில் இதே போல் கடைசி நேரத்தில் களமிறங்கி மிகச்சிறந்த பினிஷராக செயல்பட்டு 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக் இந்தியாவுக்காகவும் அதே போல் முடிந்தளவு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

Rohit-and-Karthik

இருப்பினும் எதிர்ப்பு தெரிவிக்கும் கௌதம் கம்பீர், ஸ்ரீகாந்த் போன்ற முன்னாள் வீரர்களுக்கு பேட்டால் பதிலடி கொடுத்து வரும் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்தது 1 பந்துக்கும் மேல் எதிர்கொண்ட இந்திய பேட்ஸ்மேன்களிடையே அதிக ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை குவித்த வீரர் என்ற தோனியின் சாதனையை முந்தி புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. தினேஷ் கார்த்திக் : 500, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2022*
2. எம்எஸ் தோனி : 400, வங்கதேசத்துக்கு எதிராக, 2016
3. ரவி பிஷ்னோய் : 400, பாகிஸ்தானுக்கு எதிராக, 2022

- Advertisement -

இப்படி அசத்தலான பினிஷிங் செய்வதற்கு ஸ்பெஷல் பயிற்சிகளை எடுப்பீர்களா என்று போட்டி முடிந்த பின் அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு அதிகம் மெனக்கெடாமல் அதிகப்படியான பயிற்சிகளை எடுக்காமல் எளிமையாக விளையாட முயற்சிப்பதே காரணம் என்று தெரிவித்த தினேஷ் கார்த்திக் பேசியது பின்வருமாறு. “ஒரு காலகட்டமாக நான் இதற்காக பயிற்சி செய்து வருகிறேன். குறிப்பாக பெங்களூரு அணிக்காக நான் செய்ததை இங்கே செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனவே இது தொடர்ச்சியாக சில காலத்திற்கு வாடிக்கையாக செய்யக் கூடியதாகும்”

Dinesh-Karthik-1

“மேலும் பயிற்சியாளர்கள் ராகுல் டிராவிட் மற்றும் விக்ரம் ரத்தோர் ஆகியோரது உதவியுடன் இது போன்ற போட்டி சூழ்நிலைகளை பயிற்சியின் போது செயற்கையாக உருவாக்கி பயிற்சி எடுப்பேன். அந்த சமயத்தில் அந்த சூழ்நிலையை சமாளிக்க எந்த மாதிரியான ஷாட்டுகளை நான் விளையாட வேண்டும் என்பதில் அவர்களும் எனக்கு உதவி செய்வார்கள். இருப்பினும் அந்தப் பயிற்சிகளை நான் குறைவாகவே செய்கிறேன் அதிகமாக செய்வதில்லை. ஆனால் முடிந்த வரை அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக செயல்பட விரும்புகிறேன்” என்று கூறினார்.

அதாவது இது போன்ற சூழ்நிலையை சமாளிப்பதற்காக முன்கூட்டியே வலை பயிற்சியின்போது இத்தனை பந்துகளுக்கு இத்தனை ரன்கள் தேவை என்ற செயற்கையான சூழ்நிலையை தமக்குத் தாமே உருவாக்கி அதில் எந்த வகையான ஷாட்களை அடித்தால் வெற்றிபெற முடியும் என்ற பயிற்சிகளை செய்வதாக தினேஷ் கார்த்திக் வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும் அதற்கு ராகுல் டிராவிட் போன்ற பயிற்சியாளர்களும் தமக்கு உதவிகரமாக இருப்பதாக தெரிவிக்கும் அவர் பெங்களூரு அணிக்காக செய்ததை இந்தியாவுக்காக செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.

Advertisement