லீக் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான், நியூஸிலாந்து.. 2026 டி20 உ.கோ தொடருக்கு தகுதியானது எப்படி? ரூல்ஸ் என்ன?

PAK and NZ
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் ஒன்றாம் தேதி துவங்கிய இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய கிரிக்கெட் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மறுபுறம் லீக் சுற்றில் சுமாராக விளையாடி போதிய வெற்றிகளை பதிவு செய்யத் தவறிய எஞ்சிய 14 அணிகள் பரிதாபமாக வெளியேறின.

குறிப்பாக 2009 சாம்பியன பாகிஸ்தான் முதல் போட்டியிலேயே கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் அவமான தோல்வியை பதிவு செய்தது. அத்துடன் இந்தியாவுக்கு எதிராக 120 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் பாகிஸ்தான் தோற்று வெளியேறியது. அதே போல இந்தியாவுக்கே காலம் காலமாக ஐசிசி தொடரில் சவாலை கொடுக்கக்கூடிய நியூஸிலாந்து இம்முறை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தானிடம் தோற்றது.

- Advertisement -

ஐசிசி விதிமுறை:
அதனால் அந்த அணியும் லீக் சுற்றுடன் வெளியேறியது நியூசிலாந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அப்படி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாததால் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்தியா, இலங்கையில் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பையில் நேரடியாக விளையாட முடியுமா? என்ற கேள்வி காணப்படுகிறது.

இருப்பினும் ஐசிசி விதிமுறைப்படி 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் நேரடியாக தகுதி பெறும். ஏனெனில் அந்த உலகக் கோப்பையில் மொத்தம் 20 அணிகள் விளையாட உள்ளன. அதில் முதலாவதாக தொடரை நடத்தும் நாடுகள் என்பதன் அடிப்படையில் இந்தியா மற்றும் இலங்கை முதல் 2 அணிகளாக தகுதி பெறும்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து தற்போது சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள மீதமுள்ள 7 அணிகள் (இந்தியாவை தவிர்த்து) நேரடியாக தகுதி பெறும். அதன் பின் 10, 11, 12வது அணிகளாக 2024 ஜூன் 30ஆம் தேதி ஐசிசி டி20 தரவரிசையில் டாப் 12 இடங்களில் இருக்கும் அணிகள் தேர்வாகும். அந்த விதிமுறை அடிப்படையில் தற்போது நியூசிலாந்து (6), பாகிஸ்தான் (7), அயர்லாந்து (11) டாப் 12 இடங்களில் உள்ளது.

இதையும் படிங்க: இப்படி செஞ்சா சும்மா விடமாட்டேன்.. ரசிகரை வெறியுடன் அடிக்க ஓடியது ஏன்? ஹரிஷ் ரவூப் விளக்கம்

எனவே அந்த 3 அணிகளும் 10, 11, 12வது அணிகளாக 2026 டி20 உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும். அதில் அயர்லாந்து தவறவிட்டாலும் இன்னும் ஒரு வருடம் கடந்தாலும் பாகிஸ்தான், நியூசிலாந்து டாப் 12க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் உலகக் கோப்பை தேர்வாக 99% வாய்ப்புள்ளது. கடைசியில் 13 – 20 வரையிலான எஞ்சிய 8 அணிகள் குவாலிஃபயர் சுற்றின் வாயிலாக தேர்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement