ஊசி, மாத்திரை எதாச்சும் கொடுத்து என்னை ரெடி பண்ணுங்க – இந்தியாவுக்காக விளையாட ஸ்டார் வீரர் செய்த அர்ப்பணிப்பு

Virat Kohli Suryakumar Yadav
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் தோற்றாலும் அதற்கடுத்த போட்டிகளில் வென்று 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்ற இந்தியா அடுத்ததாக தென்னாபிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்குகிறது. முன்னதாக உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் போட்டியில் 209 ரன்கள் கட்டுப்படுத்த முடியாமல் தோற்ற இந்தியா 8 ஓவர்களாக நடைபெற்ற 2வது போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது. அதனால் வெற்றியாளரை தீர்மானிக்க ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 3வது போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 187 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ராகுல், ரோஹித் ஆகிய தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

அதனால் 30/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்று இந்தியா தடுமாறியபோது களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் விராட் கோலியுடன் 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிபெற வைத்தார். அதில் நிதானமாக விளையாடிய விராட் கோலி 63 (48) ரன்கள் எடுத்ததை விட அதிரடியாக விளையாடி 69 (36) ரன்கள் எடுத்த சூர்யகுமாரின் ஆட்டம் தான் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. அதனாலேயே ஆட்டநாயகன் விருதையும் வென்ற அவர் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராகவும் தற்சமயத்தில் பேட்டிங் துறையில் 100% முழுமையான அட்டகாச பார்மில் இருக்கும் ஒரே பேட்ஸ்மேனாகவும் ஜொலிக்கிறார்.

- Advertisement -

சூரியவின் அர்ப்பணிப்பு:
போட்டியின் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடியை துவக்கும் அவர் பெரும்பாலான போட்டிகளில் எதிரணி பவுலர்களை செட்டிலாக விடாமல் ரன்களைக் குவித்து வெற்றியை பெற்று கொடுக்கிறார். அந்த வகையில் “இந்தியாவின் ஏபிடி” என ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு மைதானத்தின் நாலா புறங்களிலும் சுழன்றடிக்கும் திறமை கொண்டுள்ள அவர் இந்தியாவுக்காக விளையாட ஐபிஎல் தொடரில் கடினமாக உழைத்து வெகு நேரம் காத்திருந்தார்.

தன்னுடைய போராட்டத்தின் பயனாக 30வது வயதில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் கடந்த ஒன்றரை வருடங்களில் இதர இந்திய வீரர்களைக் காட்டிலும் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 6 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று தரவரிசையில் கிடுகிடுவென உலகின் நம்பர் 2 இடத்திற்கு முன்னேறியுள்ளார். அந்த வகையில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் லட்சியத்தை கடினமாக உழைத்து எட்டியுள்ள சூர்யகுமார் யாதவ் காயம் தவிர்த்து எந்த காரணத்திற்காகவும் எந்த போட்டியையும் தவிர்க்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக ஒவ்வொரு போட்டியும் வெவ்வேறு நகரங்களில் நடைபெறுவதால் அதற்காக பயணிக்கும் போது ஏற்படும் உடல் அசதியுடன் வெவ்வேறு கால சூழ்நிலைகளில் வெவ்வேறு உணவுகளை உட்கொண்டதால் ஹைதராபாத் போட்டிக்கு முன்பாக வயிற்று வலியை சந்தித்ததாக தெரிவிக்கும் அவர் அதற்காக போட்டியை தவற விடக்கூடாது என்பதற்காக மாத்திரை, ஊசி என எதையாவது போட்டு தம்மைத் தயார்ப்படுத்துமாறு இந்திய அணியின் மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளார். இதுபற்றி ஹைதராபாத் போட்டிக்குப் பின் அக்சர் பட்டேலுடன் அவர் பேசியது பின்வருமாறு.

“நாம் வெவ்வேறு ஊர்களுக்கு பயணிக்கும்போது வானிலையும் மாறுகிறது. அதனால் காலையில் எனக்கு வயிற்று வலியும் லேசான காய்ச்சலும் இருந்தது. ஆனால் இது வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டி என்பதால் உலகக் கோப்பை பைனலாக இருந்தால் நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய விரும்புகிறேன் என்று நம்முடைய உடற்பயிற்சியாளர் மற்றும் மருத்துவரிடம் கூறினேன். எனக்கு உடம்பு சரியில்லை என்று கூறி நான் பெஞ்சில் உட்கார விரும்பவில்லை”

“எனவே மாத்திரை அல்லது ஊசி என எதுவாக இருந்தாலும் எனக்கு கொடுங்கள் ஆனால் மாலை நடைபெறும் போட்டிக்குள் நான் தயாராக வேண்டும் என்று அவர்களிடம் நான் கூறினேன். ஏனெனில் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடும் போது கிடைக்கும் தேசப்பற்று உங்களை முற்றிலும் குணப்படுத்தி உடல்நிலையை மாற்றிவிடும்”

“இதே போலதான் ஒவ்வொரு போட்டிக்கும் நான் பயிற்சி எடுக்கிறேன். எதைப்பற்றியும் கவலைப்படாமல் விளையாடும் போது என்னுடைய வெற்றி விகிதம் 75% என்ற சிறப்பான அளவில் இருப்பதால் அதையே தொடர்ச்சியாக கடைபிடித்து போட்டியை வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்ய விரும்புகிறேன்” என்று கூறினார். இவருடைய இந்த அர்ப்பணிப்பை பார்க்கும் ரசிகர்கள் அவருக்கு தலைவணங்கி இன்னும் பெரிய அளவில் நீங்கள் வெற்றிகளைப் பெற்று கொடுப்பீர்கள் என்று வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள்.

Advertisement