ஒன்னுக்கு ரெண்டு ராகுல் வெச்சிருந்தா எப்படி ஜெயிக்க முடியும் – பாகிஸ்தானை கலாய்க்கும் இந்திய ரசிகர்கள், காரணம் இதோ

Rizwan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் சாம்பியன் பட்டத்தை ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து வென்று சாதனை படைத்துள்ளது. இத்தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் தேவையான வெற்றிகள் மற்றும் அதிர்ஷ்டத்துடன் ஃபைனலுக்கு வந்த பாகிஸ்தானை நவம்பர் 13ஆம் தேதியன்று எதிர்கொண்ட இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2010க்குப்பின் 2வது கோப்பையை வென்று சாதனை படைத்தது. புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் சுமாராக செயல்பட்டு 137/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக ஷான் மசூத் 38 (28) ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஷாம் கரன் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 138 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு எதிராக உயிரைக் கொடுத்து தரமாக பந்து வீசிய பாகிஸ்தான் பவுலர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் 1, பிலிப் சால்ட் 10, கேப்டன் ஜோஸ் பட்லர் 26, ஹரி ப்ரூக் 20, மொய்ன் அலி 19 என முக்கிய வீரர்களை பெரிய ரன்களை எடுக்க விடாமல் அவுட்டாக்கி வெற்றிக்காக போராடினார்கள்.

- Advertisement -

ரெண்டு ராகுல்:

ஆனால் இலக்கு குறைவாக இருந்ததை பயன்படுத்திய இங்கிலாந்தின் நம்பிக்கை நாயகன் பென் ஸ்டோக்ஸ் கடைசி வரை அவுட்டாகாமல் 52* (49) ரன்களை விளாசி வெற்றி பெற வைத்தார். அதனால் தென்னாபிரிக்காவை தேற்கடித்து நெதர்லாந்து கொடுத்த அதிர்ஷ்டத்தால் ஃபைனலுக்குள் நுழைந்த பாகிஸ்தான் 1992 உலக கோப்பை மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துவோம் என்று வாயில் பேசினாலும் செயலில் காட்டாததால் பரிதாப தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பேட்டிங்கில் 20 ரன்கள் குறைவாக எடுத்ததே முக்கிய காரணமென்று போட்டி முடிந்ததும் கேப்டன் பாபர் அசாம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

அதற்கு அவரும் அவருடைய பார்ட்னர் முகமது ரிஸ்வானுமே முக்கிய காரணமாவார்கள் என்பது அவர் ஒப்புக் கொள்ளாத உண்மையாகும். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் அதிலும் உலகக் கோப்பை போன்ற அழுத்தமான ஃபைனலில் முதலில் பேட்டிங் செய்தால் பெரிய இலக்கை நிர்ணயிப்பதே எதிரணி மீது அழுத்தத்தை போடும் முதல் அஸ்திரமாகும். அதற்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடி சரவெடியாக செயல்பட்டு குறைந்தது 50 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளத்தை கொடுக்க வேண்டியது ஒப்பனிங் ஜோடியின் வேலையாகும்.

- Advertisement -

அந்த இடத்தில் பாபர் அசாம் – முகமத் ரிஸ்வான் என்ற 2 உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தும் அவுட்டாகி விடுவோமோ என்ற பயத்தில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தியதே தோல்வியை கொடுத்தது. ஏனெனில் ரிஸ்வான் 15 (14) ரன்கள் எடுத்த நிலையில் அணியை முன்னின்று வழி நடத்த வேண்டிய கேப்டன் பாபர் அசாம் வெறும் 32 (28) ரன்கள் மட்டுமே எடுத்தார். இப்போட்டி மட்டுமல்லாமல் இந்த தொடர் முழுவதிலும் முகமது ரிஸ்வான் 7 போட்டிகளில் வெறும் 175 ரன்களை 25.00 என்ற சராசரியில் 109.38 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தார். ஆனால் அதே 7 போட்டிகளில் 124 ரன்களை 17.71 என்ற மோசமான சராசரியில் 93.23 என்ற படுமோசமான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்த பாபர் அசாம் அவரை மிஞ்சி மோசமாக செயல்பட்டார்.

இத்தனைக்கும் ஒரு காலத்தில் அதிரடியாக செயல்பட்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ரன்கள் மற்றும் அதிக 100+ ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் குவித்த ஜோடியாக இரட்டை உலக சாதனை படைத்துள்ள இவர்கள் திறமை இருந்தும் சமீப காலங்களில் அவுட்டாகி விடுவோமோ என்ற பயத்திலேயே தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்துகிறார்கள். மேலும் மிடில் ஆர்டர் பிரச்சனையை தீர்க்க தங்களது இடத்தை தியாகம் செய்யவும் விரும்பாத அவர்கள் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சுயநல எண்ணத்துடன் விளையாடுவதே இந்த சொதப்பலுக்கு காரணமாகும்.

இதே அணுகு முறையில் இந்திய அணியில் ஓப்பனிங்கில் களமிறங்கிய கேஎல் ராகுல் இதே போல் செயல்பட்டதே இந்தியாவின் உலகக் கோப்பை கனவை தகர்த்தது. அதனால் இவர்களது செயல்பாட்டை பார்க்கும் இந்திய ரசிகர்கள் “நாங்கள் ஒரு ராகுல் வைத்துக் கொண்டே ஜெயிக்க முடியவில்லை நீங்கள் ஒன்றுக்கு 2 ராகுலை வைத்திருந்தால் எப்படி கோப்பையை வெல்ல முடியும்” என்று பாகிஸ்தானை கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement