சரிந்த பெங்களூருவுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த முன்னாள் சிஎஸ்கே வீரர்கள்! – தப்பு பண்ணிடீங்களே

Rajat Patidar 112
Advertisement

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்ற 31-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய அணிகள் சந்தித்தன. நவி மும்பையில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பெங்களூருவுக்கு துஷ்மந்தா சமீரா வீசிய முதல் ஓவரிலேயே இளம் தொடக்க வீரர் அனுஜ் ராவத் 4 (5) ரன்களில் அவுட்டாக அதே ஓவரின் கடைசி பந்தில் நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால் 7/2 என முதல் ஓவரிலேயே தடுமாறிய பெங்களூருவை அடுத்ததாக களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாட முயன்று 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 23 (11) ரன்கள் எடுத்து ஏமாற்றினார்.

போதாக்குறைக்கு லக்னோ பவுலர்கள் அபாரமாக பந்து வீசிய நிலையில் அடுத்த சில ஓவர்களிலேயே இளம் வீரர் பிரபுதேசாய் 10 (9) ரன்களில் அவுட்டானதால் 62/4 மீண்டும் தடுமாறிய பெங்களூருவை மறுபுறம் காப்பாற்ற மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் டு பிளேஸிஸ் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

காப்பாற்றிய டு பிளேஸிஸ்:
அவருக்கு உறுதுணையாக அடுத்து களமிறங்கிய இளம் வீரர் சபாஷ் அஹமட் கம்பெனி கொடுக்க ஆரம்பத்தில் நிதானமாக பேட்டிங் செய்த டுப்லஸ்ஸிஸ் நேரம் செல்ல செல்ல அதிரடியாக ரன்களை குவித்தார். 5-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் குவித்த இந்த ஜோடியில் 26 (22) ரன்கள் எடுத்திருந்தபோது பிரபு தேசாய் அவுட்டானாதும் அடுத்ததாக களமிறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் உடன் கைகோர்த்த டு பிளசிஸ் கடைசி நேரத்தில் பவுண்டரிகளை பறக்கவிட்டு ரன்களை சேர்த்தார்.

தொடர்ந்து அபாரமாக விளையாடிய அவர் 11 பவுண்டரிகள் 2 சிக்சர் உட்பட 64 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து 19.5-வது ஓவரில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டாலும் தனது அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தபின் ஆட்டமிழந்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்த பெங்களூரு 181 ரன்கள் எடுத்தது. லக்னோ சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் மற்றும் சமீரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

- Advertisement -

போராடிய லக்னோ:
அதை தொடர்ந்து 182 என்ற இலக்கை துரத்திய லக்னோவுக்கு நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் 3 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க அடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டே 6 (8) ரன்களில் அவுட்டாகி நடையைக்கட்டினார். மறுபுறம் பொறுப்புடன் பேட்டிங் செய்த கேப்டன் கேஎல் ராகுலும் 3 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 30 (24) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களில் க்ருனால் பாண்டியா அதிரடியாக 5 பவுண்டரி 2 சிக்சருடன் 42 (28) ரன்கள் எடுத்தாலும் தீபக் ஹூடா மற்றும் ஆயுஷ் படோனி ஆகியோர் தலா 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

இதனால் பின்னடைவை சந்தித்த லக்னோவுக்கு கடைசியில் மார்கஸ் ஸ்டாய்நிஸ் அதிரடியாக 2 பவுண்டரி 1 சிக்சர் அடித்து நம்பிக்கை கொடுத்தாலும் 24 (15) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற ஜேசன் ஹோல்டரும் 16 (9) ரன்களில் அவுட்டானார். இப்படி அனைத்து முக்கிய வீரர்களும் பெரிய ரன்கள் எடுக்காமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் 20 ஓவர்களில் 163/8 ரன்கள் மட்டுமே எடுத்த லக்னோ போராடி தோற்றது. இதன் காரணமாக 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்த பெங்களுரு இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் 5-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறி வெற்றி நடைபோடுகிறது.

கலக்கும் முன்னாள் சென்னை வீரர்கள்:
இந்த அபாரமான வெற்றியை பந்துவீச்சில் அற்புதமாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோஷ் ஹேசல்வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கிய பங்காற்றினார். அதைவிட பேட்டிங்கில் சரிந்த பெங்களூருவை தனி ஒருவனை போல நங்கூரமாக நின்று தூக்கி நிறுத்திய கேப்டன் டு பிளேஸிஸ் சதத்தை நழுவ விட்டாலும் 96 ரன்கள் விளாசி தனது அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த 2 வீரர்களுமே கடந்த வருடம் சென்னை அணியில் விளையாடினார்கள் என்பதை நினைக்கும் சென்னை ரசிகர்கள் இந்த தங்கங்களை போய் கோட்டை விட்டுவிட்டார்களே என்று சென்னை அணி நிர்வாகத்தை திட்டி தீர்க்கின்றனர்.

ஏனெனில் இந்த அளவுக்கு சிறப்பாக செயல்படும் இவர்கள் கடந்த வருடமும் சிறப்பாக செயல்பட்ட போதிலும் அந்த அணி நிர்வாகம் இவர்களை ஏலத்தில் வாங்க போட்டிபோடவில்லை. அதன் காரணமாக இவர்களை போன்ற தரமான வீரர்களை கோட்டை விட்ட அந்த அணி தற்போது பங்கேற்ற 6 போட்டிகளில் 5 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் திண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement