- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ராகுலா – தவானா? 2023 உ.கோ’யில் ரோஹித் சர்மாவுடன் ஓப்பனராக களமிறங்க தகுதியானவர் யார் – டிகே கருத்து இதோ

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் சந்தித்த ஏமாற்ற தோல்விக்கு பின் நியூசிலாந்தில் விளையாடி வரும் இந்தியா முதலில் நடைபெற்ற டி20 தொடரை மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இருப்பினும் அடுத்ததாக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் 1 – 0 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டதுடன் கடைசி போட்டியில் வென்றால் தான் குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. வரும் 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்று வரும் இத்தொடரில் சீனியர் சிகர் தவான் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இருப்பினும் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. முன்னதாக கடந்த 2013இல் தோனி எடுத்த வரலாற்று முடிவால் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வாய்ப்பு பெற்ற ரோகித் சர்மாவுடன் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற ஷிகர் தவான் அந்த முதல் தொடரிலேயே அதிக ரன்களை குவித்து தங்க பேட் விருதை வென்று கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார். அப்போது முதல் ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் நிரந்தர தொடக்க வீரராக அசத்திய அவர் 2019 வரை முதன்மை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடி வந்தார்.

- Advertisement -

சான்ஸ் யாருக்கு:

அந்த காலகட்டத்தில் 2017 சாம்பியன்ஸ் டிராபில் அதிக ரன்கள் குவித்த வீரர், 2018 ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்ற வீரர் போன்ற சாதனைகளை படைத்த அவரை கிரிக்கெட் ரசிகர்கள் மிஸ்டர் ஐசிசி என்று அழைக்கிறார்கள். ஆனால் 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதமடித்து வெளியேறிய அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற கேஎல் ராகுல் நாளடைவில் அவரை விட சற்று சிறப்பாக செயல்பட்டு அந்த இடத்தை தனதாக்கி விட்டார். அதனால் 35 வயதை கடந்து விட்ட தவானை குப்பையாக பார்க்கும் பிசிசிஐ 2ஆம் தர தொடர்களில் கேப்டனாக வாய்ப்பு கொடுத்து அடுத்த தொடரிலேயே கழட்டி விட்டு வருகிறது.

ஆனால் 2022 டி20 உலக கோப்பை உட்பட சமீப காலங்களில் அழுத்தமான போட்டிகளில் சொதப்புவதும் கத்துக்குட்டிகளை அடித்து காலத்தை தள்ளுவதை வழக்கமாக வைத்துள்ள ராகுலுக்கு பதில் தவான் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அதையே தெரிவிக்கும் தினேஷ் கார்த்திக் 2023 உலகக்கோப்பையில் ரோகித் சர்மாவுடன் களமிறங்க தவான் சரியானவர் என்று ஆதரவு கொடுத்து இது பற்றி பேசியது பின்வருமாறு. “நானும் அவ்வாறே நினைக்கிறேன். அவர் தான் உலகக்கோப்பையில் தொடக்க வீரராக களமிறங்குவார் என்ற உணர்வு எனக்கு தோன்றுகிறது. இல்லையென்றால் இது போன்ற நியூசிலாந்து தொடர்களில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள்”

- Advertisement -

“ஏனெனில் 30 வயதை கடந்த அவரை எளிதாக அணி நிர்வாகம் கழற்றி விடலாம். ஆனால் அவரை ஒருநாள் அணியில் விளையாட வைக்க அணி நிர்வாகமும் ஆர்வம் காட்டி வருகிறது. அதை விட வரலாற்றில் ஷிகர் தவான் ஐசிசி தொடர்களில் துப்பாக்கியாக செயல்பட்டுள்ளார். அவரைப் போன்ற ஒருவர் பெரிய தொடர்களில் அபாரமாக விளையாடும் திறமை பெற்றவர். சொல்லப்போனால் 2019 உலகக்கோப்பையில் காயமடைவதற்கு முன்பாக கூட அவர் அசத்தலாகவே செயல்பட்டார். எனவே ஃபார்மை மொத்தமாக இழந்து பெரிய மாற்றம் ஏற்படாத வரை அவர் நிச்சயமாக உலக கோப்பை அணியில் இருப்பார்”

“மேலும் அவரை நீங்கள் தொடக்க வீரராக நம்பி வாய்ப்பு கொடுக்கலாம். அவர் வெள்ளை கோட்டை பயன்படுத்தி அனுபவத்தை வெளிப்படுத்தி விளையாடுகிறார். அது போக ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் கேப்டனாக செயல்படும் வாய்ப்பும் அவரை தேடி வந்துள்ளது. எனவே அதில் அசத்தலாக செயல்பட்டு நிச்சயம் தவான் உலக கோப்பையில் விளையாடுவார் என்று நம்புகிறேன்” என கூறினார். சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய தொடர்களில் பேட்டிங்கில் அசத்திய தவான் இத்தொடரின் முதல் போட்டியிலும் 77 ரன்கள் குவித்து ராகுலை விட நல்ல ஃபார்மில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by