
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்சமயத்தில் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற தடுமாறி வருகிறது. சமீபத்திய ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் தோற்ற பாகிஸ்தான் சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விகளுக்கு அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன் பாபர் அசாம் சுமாராக விளையாடுவது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
2019 காலகட்டங்களில் ஓரளவு சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தார். அதனால் விராட் கோலியை விட பாபர் அசாம் தான் சிறந்தவர் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடினர். ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற பின் மிகவும் சுமாராக விளையாடிய அவர் பாகிஸ்தானின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்து வருகிறார்.
இந்நிலையில் உலகம் முழுவதிலும் அசத்தும் விராட் கோலியை சொந்த மண்ணிலேயே சுமாராக விளையாடும் பாபர் அசாம் நெருங்கக் கூட முடியாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார். எனவே விராட் கோலியுடன் அவரை ஒப்பிடுவதை பாகிஸ்தான் ரசிகர்கள் மறந்து விட வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி டேனிஷ் கனேரியா பேசியது பின்வருமாறு.
“யார் அவர்களை ஒப்பிடுகிறார்கள்? ரசிகர்கள் இப்படி ஒப்பிடுவதைக் கேட்டு நான் ஓய்ந்து போய் விட்டேன். ஒப்பிடுவதற்கு முன் முதலில் நீங்கள் விராட் கோலி எவ்வளவு ரன்கள் அடித்துள்ளார் என்பதை பார்க்க வேண்டும். உலகம் முழுவதிலும் ரன்கள் குவித்துள்ள அவர் மகத்தான பிளேயர். அவருடைய அந்தஸ்தை பாருங்கள். களத்திற்குள் வரும் போது விராட் கோலியிடம் வித்தியாசமான ஒளி இருக்கும்”
“ஆனால் பாபர் அசாம் அவரை நெருங்க கூட முடியாது. எனவே இந்த ஒப்பீடுகளை மறந்து விடுங்கள். அவர்களை ஒப்பிடுவதில் எனக்கு நிறைய கேள்வி இருக்கிறது. அதனாலேயே நான் எப்போதும் அவர்களை ஒப்பிட்டதில்லை. ஒப்பிடுவதற்கு முன் இருவருடைய புள்ளிவிவரங்களை பாருங்கள். வேண்டுமானால் இருவரும் ஓய்வு பெற்ற பின் அவர்களுடைய புள்ளிவிவரங்களை பார்க்கலாம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஆஸி தொடரில் அந்த 2 இளம் வீரர்கள் தான் புஜாரா, ரஹானே இடத்தை நிரப்ப சரியானவங்க.. டிகே கருத்து
அத்துடன் பாகிஸ்தானில் தற்போது பாதுகாப்பான சூழல் நிலவவில்லை என்றும் டேனிஷ் கனேரியா கூறினார். எனவே 2025 சாம்பியன்ஸ் டிராபில் விளையாடுவதற்கு இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரக்கூடாது என்றும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். இதற்கிடையே ஐசிசி தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்றுள்ளதால் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.