இப்படி ஒரு கேப்டன் கிடைக்க கொடுத்து வெச்சுருக்கணும் – வாழ்த்து சொன்ன சேவாக், யாரை பற்றி தெரியுமா?

Sehwag
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்குகிறது. வரும் 29-ஆம் தேதி வரை மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெற உள்ள இந்த தொடரில் பங்கேற்று கோப்பையை வெல்வதற்காக தீவிர வலை பயிற்சிக்குப் பின் அனைத்து அணிகளும் தயாராகி உள்ளன. புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.

விடைபெற்ற கேப்டன் தல தோனி:
இப்போட்டிக்காக அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் நடப்புச் சாம்பியன் சென்னை அணியின் கேப்டனாக இருந்த எம்எஸ் தோனியின் திடீரென அந்த பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் 2022 தொடரின் முதல் போட்டி துவங்குவதற்கு ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் அவரின் இந்த அதிரடி அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கியது.

- Advertisement -

ஏனெனில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட போது முதல் முறையாக சென்னை அணிக்காக விளையாட ஒப்பந்தமான அவர் அதன்பின் இன்றுவரை அந்த அணியின் முதுகெலும்பாகவும் இதயமாகவும் கருதப்படுகிறார். இந்தியாவிற்காக உலக கோப்பையை வென்று கொடுத்தது போலவே தனது மேஜிக் நிறைந்த அபார கேப்டன்ஷிப் வாயிலாக இதுவரை 4 கோப்பைகளை வென்று கொடுத்துள்ள அவர் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 2-வது வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

தற்போது 40 வயதை கடந்துவிட்ட அவர் சென்னை அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு காலம் காலமாக வகித்து வந்த கேப்டன்ஷிப் பொறுப்பை சென்னையின் மற்றொரு நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்து அவரின் தலைமையில் சாதாரண ஒரு வீரராக விளையாட முடிவெடுத்துள்ளார்.

- Advertisement -

கொடுத்து வெச்சுருக்கனும்:
ஐபிஎல் தொடரின் பெரும்பாலான வருடங்களில் சென்னை அணிக்கு கேப்டனாக செயல்பட்ட அவர் அந்த அணி தடைபெற்ற 2016, 2017 ஆகிய வருடங்களில் புனே அணிக்காக விளையாடினார். அந்த வகையில் மொத்தம் 204 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள அவர் அதில் 121 வெற்றிகளை 59.20% என்ற என்ற வெற்றி சராசரி விகிதத்தில் குவித்து ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளை வென்ற கேப்டன் என்ற மாபெரும் சாதனை படைத்துள்ளார். சொல்லப்போனால் ஐபிஎல் எனும் பிராண்ட் இந்த அளவுக்கு வளர்வதற்கு எம்எஸ் தோனியும் ஒரு முக்கியமான காரணம் என்றே கூறலாம்.

அதன் காரணமாக ஐபிஎல் நிர்வாகம் உட்பட பல முன்னாள் ஜாம்பவான் வீரர்களும் கிரிக்கெட் வல்லுநர்களும் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தோனியை கேப்டனாக பெற்றதற்கு சென்னை கொடுத்து வைத்திருக்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தமக்கே உரித்தான பாணியில் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியது பின்வருமாறு. “இந்தியன் பிரீமியர் லீக் எனும் பிராண்ட் வளர்வதற்கு வித்திட்ட பல கதைகளில் ஒரு முக்கிய அம்சம். ஒன்றுக்கொன்று ஆழ்ந்த தொடர்பு கொண்டுள்ள ஒருசில சிறப்பான விஷயங்களில் தல எம்எஸ் தோனியும் சென்னையும் முக்கியான ஒன்றாகும். தோனியை போன்ற ஒரு கேப்டன் கிடைக்க சென்னை அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அதற்கு ஈடாக சென்னை அணி உரிமையாளர்களிடமும் மக்களிடமும் ரசிகர்களிடம் இருந்து அவர் பெற்றுள்ள அன்பு அபாரமானது” என பதிவிட்டுள்ளார்.

தல கேப்டன் கூல் தோனி:
அவர் கூறுவது போல எம்எஸ் தோனி போன்ற ஒருவர் கேப்டனாக கிடைப்பதற்கு நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மையாகும். வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் தோனியால் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று இந்த அளவுக்கு உலகப்புகழ் பெற்றுள்ளது என்று கூறினாலும் மிகையாகாது. ஏனெனில் இந்தியாவிற்கு முதல் முறையாக டி20 உலக கோப்பையை வென்ற அவர் சென்னை அணிக்கும் 4 ஐபிஎல் கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்று கொடுத்து ஐபிஎல் தொடரில் சென்னையை ஒரு புகழ்மிக்க அணியாக மாற்றினார்.

- Advertisement -

அத்துடன் 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட போது மும்பை சச்சின், கொல்கத்தாவுக்கு கங்குலி, பெங்களூருவுக்கு டிராவிட், டெல்லிக்கு சேவாக் என அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த ஜாம்பவான்கள் கேப்டன்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால் அதுபோன்ற ஒரு நட்சத்திர அந்தஸ்து பெற்ற வீரர் தமிழகத்தில் இல்லாத காரணத்தால் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரை சேர்ந்த எம்எஸ் தோனி சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அந்த வேளையில் மேற்குறிப்பிட்ட சச்சின், கங்குலி, டிராவிட், சேவாக் போன்றவர்களால் கூட முடியாத பல வெற்றிகளை சென்னைக்கு பெற்றுக்கொடுத்த தோனி அடுத்தடுத்த கோப்பைகளை வென்று அசத்தினார். மேலும் கொல்கத்தா, பஞ்சாப் போன்ற அணிகளுக்கு அதன்பின் இன்றுவரை நிலையான ஒரு கேப்டன் கிடைக்கவே இல்லை. மறுபுறம் 2008 – 2021 வரை தொடர்ந்து ஒரே நிலையான கேப்டனாக தோனியயை பெற்ற சென்னை அவர் தலைமையில் எதிரணிகளை காட்டிலும் பங்கேற்ற 12 சீசன்களில் 11 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அதில் 9 முறை பைனலுக்கு முன்னேறி 4 முறை கோப்பைகளை முத்தமிட்டது.

தற்போது கேப்டன் பதவியில் விலகியுள்ள தோனி அடுத்த வருடம் மொத்தமாக ஓய்வு பெற்றாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இருப்பினும் ஓய்வு பெற்றால் கூட ஒரு பயிற்சியாளராக தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தம்மால் முடிந்தவரை எம்எஸ் தோனி நீடிப்பார் என உறுதியாக நம்பலாம். அந்த வகையில் வீரேந்திர சேவாக் கூறியது போல ஒரு கேப்டனாக எம்எஸ் தோனியை பெற்றதற்கு கொடுத்து வைத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வருங்காலத்தில் அவரை பயிற்சியாளராக பெறுவதற்கும் அதிர்ஷ்டம் செய்துள்ளது என்றே கூறலாம்.

Advertisement