- Advertisement -
ஐ.பி.எல்

கோட்டையில் 4க்கு 4 வெற்றி.. காட்டடி ஹைதெராபாத்தை சுருட்டி வீசிய சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ரன்ரேட்டால் கம்பேக்

கோடைகாலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 28ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 46வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு ரகானே 9 (12) ரன்னில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் மறுபுறம் கேப்டன் ருதுராஜ் அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த டேரில் மிட்சேல் ஆரம்பத்தில் தடுமாற்றமாக விளையாடினாலும் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடினார். அந்த வகையில் 2வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து சென்னையை வலுப்படுத்திய அவர் இந்த சீசனில் முதல் முறையாக அரை சதமடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அபார வெற்றி:
அப்போது வந்த சிவம் துபே தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய ருதுராஜ் சதத்தை நெருங்கினார். அதனால் கடந்த போட்டியை போலவே சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் கடைசி ஓவரில் 10 பவுண்டரி 3 சிக்சருடன் சதத்தை நழுவ விட்டு 98 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் சிவம் துபே 39* (20) ரன்களும் தோனி 5* (2) ரன்களும் எடுத்ததால் 20 ஓவரில் சென்னை 212/3 ரன்கள் எடுத்தது.

ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக நடராஜன், உனட்கட், புவனேஸ்வர் குமார் தலா 1 விக்கெட் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 213 ரன்களை துரத்திய ஹைதராபாத்துக்கு முரட்டுத்தனமாக அடிக்கக்கூடிய டிராவிஸ் ஹெட்டை 13 (7) ரன்களில் அவுட்டாக்கிய துஷார் தேஷ்பாண்டே அடுத்து வந்த அன்மோல்ப்ரீத் சிங்கை கோல்டன் டக் அவுட்டாக்கினார். அத்தோடு நிற்காத அவர் தனது அடுத்த ஓவரில் மறுபுறம் முரட்டுத்தனமாக அடிக்கக்கூடிய அபிஷேக் ஷர்மாவை 15 ரன்னில் அவுட்டாக்கி போட்டியில் திருப்பு முனையை உண்டாக்கினார்.

- Advertisement -

அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாட முயற்சித்த நித்திஷ் ரெட்டி 15 ரன்களில் அவுட்டானார். அதே போல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்கம் 32 (26) ரன்களில் பதிரனா வேகத்தில் போல்டானார். அப்போது நங்கூரமாக விளையாட முயற்சித்த ஹென்றிச் கிளாசின் 20 (21), அப்துல் சமத் 19 (18) ரன்களில் அவுட்டாகி கை கொடுக்க தவறினார்கள்.

இறுதியில் அடுத்து வந்த வீரர்களும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 18.5 ஓவரிலேயே ஹைதராபாத்தை 134 ரன்களுக்கு சுருட்டிய சென்னை 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சிலும் அசத்திய சென்னை சார்பில் அதிகபட்சமாக துஷார் தேச்பாண்டே 3, முஸ்தபிசுர் ரகுமான் 2, பதிரனா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதையும் படிங்க: ஃபார்முக்கு வர ஹெல்ப் பண்ணாரு.. லெஜெண்ட் விராட் கோலியிடம் நிறைய கத்துக்கணும்.. ஆட்டநாயகன் ஜேக்ஸ் பேட்டி

இதனால் சேப்பாக்கத்தில் ஹைதராபாத்துக்கு எதிராக தோல்வியை சந்தித்ததில்லை என்ற சாதனையை சென்னை தக்க வைத்துக் கொண்டது. இதுவரை சேப்பாக்கத்தில் ஹைதராபாத்தை எதிர்கொண்ட 4 போட்டிகளிலும் சென்னை வென்றுள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் கூடுதல் ரன்ரேட் காரணமாக ஹைதராபாத் (0.07), லக்னோ (0.06), டெல்லி (-0.28) ஆகிய அணிகளை பின்னுக்குத் தள்ளிய சென்னை 3வது இடத்திற்கு (0.81) முன்னேறி கம்பேக் கொடுத்துள்ளது.

- Advertisement -