- Advertisement -
உலக கிரிக்கெட்

181 ரன்ஸ்.. நூலிலையில் வெளியேறிய ஸ்காட்லாந்து.. தன்மானத்துக்காக இங்கிலாந்தை பழிவாங்காமல் காப்பாற்றிய ஆஸி

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜூன் 16ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு செயின்ட் லூசியா நகரில் 35வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப்போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்துக்கு மைக்கேல் ஜோன்ஸ் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

இருப்பினும் அடுத்து வந்த பிரண்டன் மெக்முலன் அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மற்றொரு துவக்க வீரர் முன்சி 35 (23) ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் 2 பவுண்டரி 6 சிக்ஸரை பறக்க விட்ட மெக்முலன் 60 (34) ரன்களில் ஜாம்பா சுழலில் சிக்கினார்.

- Advertisement -

இங்கிலாந்தை காப்பாற்றிய ஆஸி:
அவரை தொடர்ந்து வந்த கேப்டன் பேரிங்டன் தம்முடைய பங்கிற்கு 42* (31) ரன்கள் குவித்தார். இறுதியில் மைக்கேல் லீஸ்க் 18, மேத்தியூ கிராஸ் 5, கிறிஸ் க்ரீவ்ஸ் 9* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் ஸ்காட்லாந்து 180/5 ரன்கள் குவித்தது. இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அசோசியேட் அணி என்ற சாதனையையும் ஸ்காட்லாந்து படைத்தது.

ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 181 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்ததாக வந்த கேப்டன் மார்ஷ் 8 ரன்னில் அவுட்டாகி சென்ற நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 11 ரன்னில் போல்ட்டானார்.

- Advertisement -

அதனால் 60/3 என தடுமாறிய ஆஸ்திரேலியாவுக்கு மற்றொரு துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடினார். அடுத்ததாக வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் உடன் சேர்ந்து 3வது விக்கெட் 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவைத் தூக்கிய அவர் 5 பவுண்டரி 4 சிக்ஸருடன் 68 (49) ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் எதிர்புறம் சேர்ந்து மிரட்டலாக விளையாடிய ஸ்டோய்னிஸ் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 59 (29) ரன்கள் விளாசி அவுட்டானார்.

இறுதியில் டிம் டேவிட் அதிரடியாக 28* (14) ரன்கள் விளாசி பினிஷிங் கொடுத்ததால் 19.4 ஓவரில் 186/5 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதன் காரணமாக ஸ்காட்லாந்து வெளியேறியதால் இங்கிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. குறிப்பாக அந்த 2 அணிகளுமே தலை 5 புள்ளிகளை பெற்றிருந்தும் ரன் ரேட் காரணமாக நூலிலையில் ஸ்காட்லாந்து சூப்பர் 8 வாய்ப்பை நழுவ விட்டது.

இதையும் படிங்க: 41 ரன்ஸ்.. 2 முறை சோதித்த மழையை தாண்டி நமீபியாவை இங்கிலாந்து வீழ்த்தியது எப்படி? சூப்பர் 8 கிடைத்ததா?

மறுபுறம் பரம எதிரியான இங்கிலாந்தை லீக் சுற்றுடன் அனுப்புவதற்கு தேவையான வேலையை இந்த போட்டியில் செய்வோம் என்று ஆஸ்திரேலியா சொன்னது. ஆனால் ஸ்காட்லாந்திடம் தோற்றால் அது அவமானம் என்பதுடன் நேர்மைக்கு புறம்பானது என்பதால் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா பரம எதிரி இங்கிலாந்துக்கு கை கொடுத்துள்ளது. அதனால் இங்கிலாந்து ரசிகர்கள் ஆஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

- Advertisement -