அவர் பந்துவீசாமல் போனால் கவலையில்லை, கேப்டன்ஷிப் செய்தால் போதும் – புதிய கேப்டனுக்கு நெஹ்ரா ஆதரவு

Nehra-2
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மிகவும் விறுவிறுப்பாக பெங்களூருவில் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 2018க்கு பின் முதல் முறையாக அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா அளவில் நடந்த இந்த ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்ற நிலையில் அதிலிருந்து 204 வீரர்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளார்கள்.

- Advertisement -

இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக குஜராத் மாநிலத்தை மையமாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் தாங்கள் விரும்பிய ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான், சுப்மன் கில் ஆகிய 3 வீரர்களை தக்க வைத்தது. அத்துடன் இந்தியாவின் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா தலைமை பயிற்சியாளராகவும் தென்ஆப்பிரிக்காவின் ஜாம்பவான் கேரி க்ரிஸ்டன் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராகவும் அந்த அணி நிர்வாகம் நியமனம் செய்தது.

குஜராத் டைட்டன்ஸ்:
இதை அடுத்து நடந்த மெகா ஏலத்தில் முகமது சமி, ஜேசன் ராய், டேவிட் மில்லர், மேத்தியூ வேட் போன்ற நட்சத்திர வீரர்களை அந்த அணி நிர்வாகம் நல்ல விலைக்கு வாங்கியது. அத்துடன் தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர், சாய் சுதர்சன், சாய் கிஷோர் போன்ற வீரர்களை வாங்கிய அந்த அணி நிறைய இளம் வீரர்களையும் குறைந்த விலைக்கு வளைத்துப் போட்டுள்ளது.

hardik 2

ஆனால் இந்த ஏலத்தில் சில தவறான அணுகுமுறையை கையாண்ட அந்த அணி நிர்வாகம் தங்களுக்கு தேவையான 25 வீரர்களை முழுமையாக வாங்காமல் 21 வீரர்களை மட்டுமே வாங்கியுள்ளது. இதன் காரணமாக அந்த அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியா முக்கியமான நேரங்களில் பந்துவீசியே தீரவேண்டும் என்ற நிலைமை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பந்து வீசவே வேண்டாம்:
கடந்த வருடம் காயமடைந்த ஹர்திக் பாண்டியா அதன்பின் ஐபிஎல் தொடரில் விளையாடிய போதிலும் பந்து வீசாமல் பேட்டிங் மட்டுமே செய்தார். இருப்பினும் அவரை நம்பிய இந்திய தேர்வு குழு கடந்த வருடம் நடந்த டி20 உலக கோப்பையில் அவரைத் தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து நடந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி உட்பட பெரும்பாலான போட்டிகளில் அவர் பந்து வீசாத காரணத்தால் அது இந்தியாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தி இறுதியில் லீக் சுற்றுடன் வெளியேறும் நிலையை ஏற்படுத்தியது.

Nehra

அதன் காரணமாக கடுப்பான இந்திய அணி நிர்வாகம் உலக கோப்பையுடன் இந்திய அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா கழற்றி விட்டது. சொல்லப்போனால் இனி பந்து வீசினால் மட்டுமே அவருக்கு இந்திய அணியில் இடம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அப்படிப்பட்ட இந்த வேளையில் வரும் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா பந்து வீசுவாரா என்பது பற்றி குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளர் ஆசிஷ் நெக்ரா பேசியது பின்வருமாறு.”அவர் பந்து வீசினால் அது மிகவும் நல்லதாகும். ஆனால் எங்கள் அணியில் அவர் ஒரு தூய பேட்ஸ்மேனாக விளையாடினாலும் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியே. ஐபிஎல் உட்பட உலகின் எந்த ஒரு டி20 அணியிலும் ஹர்திக் பாண்டியா ஒரு பேட்ஸ்மேனாக பொருந்த மாட்டார் என எனக்குத் தோன்றவில்லை. 4, 5 அல்லது 6 என எந்த இடமாக இருந்தாலும் அவர் கச்சிதமாக பொருந்துவார்” என கூறினார்.

கவலை இல்லை:
ஐபிஎல் 2022 தொடரில் ஹர்திக் பாண்டியா பந்துவீச வில்லை என்றாலும் அது பற்றி கவலை இல்லை எனத் தெரிவித்துள்ள ஆஷிஸ் நெஹ்ரா அவர் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்டாலே போதுமானது என இப்போதே ஆதரவை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியது பின்வருமாறு. “அவர் பந்து வீசுவதை பற்றி நிறைய எதிர்பார்ப்புகளும் யூகங்களும் இருக்கின்றன. ஒருவேளை அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக பந்து வீசினால் அது மிகச் சிறப்பான ஒன்றாகும். ஆனால் ஒருவேளை அவர் பேட்டிங் மட்டும் செய்தாலும் அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும்” என பாண்டியாவுக்கு மிகப்பெரிய ஆதரவை கொடுத்துள்ளார்.

Pandya-1

குஜராத் அணியில் ஆல்ரவுண்டர் பிரிவில் தமிழகத்தின் விஜய் சங்கர் மற்றும் ஜெயந் யாதவ், ராகுல் தேவாடியா போன்ற வீரர்கள் இருப்பதால் ஹர்டிக் பாண்டியா பந்து வீசாமல் போனால் அது பற்றி கவலை இல்லை என ஆசிஷ் நெக்ரா கூறியுள்ளார். ஆனால் இந்திய அணியில் மீண்டும் கால் பதிக்க வேண்டும் என்றால் அதற்கு பந்துவீசியே தீரவேண்டும் என்பதை புரிந்து கொண்டு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா பந்து வீசுவரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Advertisement