- Advertisement -
உலக கிரிக்கெட்

124/5 டூ 138க்கு ஆல் அவுட்.. வங்கதேசத்தின் வெற்றியை பறித்த அமெரிக்கா.. உறுப்பு நாடுகளில் புதிய உலக சாதனை வெற்றி

அமெரிக்கா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. விரைவில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் இந்தத் தொடரின் முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய அமெரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இத்தொடரின் 2வது போட்டி மே 23ம் தேதி ஹவுஸ்டன் நகரில் நடைபெற்றது.

அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அமெரிக்கா 20 ஓவரில் போராடி 144/6 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஸ்டீபன் டைலர் 31, கேப்டன் மோனக் பட்டேல் 42, ஆரோன் ஜோன்ஸ் 35 ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ரிசாத் ஹுசைன் முஸ்தஃபீஸூர் ரஹ்மான், சோரிஃபுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

வரலாற்று வெற்றி:
அதைத்தொடர்ந்து 145 ரன்களை துரத்திய வங்கதேச அணிக்கு சௌமியா சர்க்கார் முதல் ஓவரிலேயே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அத்துடன் மற்றொரு துவக்க வீரர் தன்சித் ஹசன் 19 ரன்களில் அவுட்டாகி சென்றார். இருப்பினும் மிடில் ஆர்டரில் கேப்டன் நஜ்முல் சாந்தோ 36, தவ்ஹீத் ஹ்ரிடாய் 25, சாகிப் அல் ஹசன் 30 ரன்கள் எடுத்ததால் 16.5 ஓவரில் 124/5 என்ற நல்ல நிலையில் இருந்த வங்கதேசம் கண்டிப்பாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர்கள் அவுட்டானதும் மகமதுல்லா 3, ஜாகிர் அலி 4, ரிசத் ஹொசைன் 9 என அடுத்து வந்த வீரர்களை அமெரிக்க பவுலர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கினர். அதனால் 2.4 ஓவரில் எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேசம் வெறும் 14 ரன்கள் மட்டும் எடுத்து 138 ரன்களுக்கு சுருண்டது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய அமெரிக்கா சார்பில் அதிகபட்சமாக அலி கான் 3, சௌரப் நேத்ராவால்க்கர் 2, வேன் ஷால்விக் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

அதனால் வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அமெரிக்கா 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரை வென்று டெஸ்ட் அந்தஸ்து பெற்ற வங்கதேச அணியை தோற்கடித்துள்ளது. சொல்லப்போனால் இதன் வாயிலாக ஐசிசி’யின் முழு அந்தஸ்து பெற்ற நாட்டுக்கு எதிராக முதல் முறையாக ஒரு தொடரை வென்று அமெரிக்கா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: உண்மைய சொல்லனும்னா இந்திய அணியிடம் அந்த ஸ்ட்ரென்த் இல்ல – முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாயிடு கருத்து

அது போக வங்கதேச அணிக்கு எதிராக தங்களுடைய கேரியரிலேயே இப்போது தான் அமெரிக்கா முதல் முறையாக விளையாடுகிறது. ஆனால் அந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வங்கதேசத்தை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி கண்டுள்ளது. இதன் வாயிலாக ஐசிசி’யின் முழு அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக முதல் 2 போட்டிகளிலும் வெற்றி கண்ட முதல் உறுப்பு நாட்டு அணி என்ற உலக சாதனையை அமெரிக்கா படைத்துள்ளது. இதற்கு முன் ஸ்காட்லாந்து, நெதர்லாந்து போன்ற அணிகள் இந்த சாதனையை நிகழ்த்தியதில்லை.

- Advertisement -