- Advertisement -
உலக கிரிக்கெட்

பலமுறை சொல்லியும் கேட்கல.. அதுவே போதும்ன்னு சொல்லிட்டாரு.. இந்தியாவின் அஜய் ஜடேஜாவுக்கு ஆப்கானிஸ்தான் பாராட்டு

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் 3 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றது. குறிப்பாக ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்கு காலங்காலமாக சவாலை கொடுத்து வரும் நியூசிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் முறையாக வெற்றி பெற்று சரித்திரம் படைத்தது. அதனால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ள அந்த அணி சமீப காலங்களாகவே மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது.

குறிப்பாக இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதை விட சென்னையில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக ஒரு வெற்றியை பெற்று ஆப்கானிஸ்தான் சாதனையும் படைத்தது.

- Advertisement -

ஜடேஜாவுக்கு பாராட்டு:
அதே வேகத்தில் வங்கதேசத்தையும் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் செமி ஃபைனலுக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் மேக்ஸ்வெல் இரட்டை சதத்தால் நூலிலையில் ஆப்கானிஸ்தான் அந்த வாய்ப்பை தவற விட்டது. இருப்பினும் 2023 உலகக் கோப்பை ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகவும் மறக்க முடியாத ஒன்றாகவே அமைந்தது.

அந்த வெற்றிக்கு இந்தியாவின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் இந்தியாவில் நிலவும் சூழ்நிலைகளையும் மைதானங்களையும் பற்றி தெரிந்து கொள்வதற்காக அவரை அந்த தொடருக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் வாரியம் ஆலோசகராக நியமித்தது. அவருடைய பயிற்சி மற்றும் வழிகாட்டுதலால் பேட்டிங் துறையில் சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் மறக்க முடியாத வெற்றிகளையும் பதிவு செய்தது.

- Advertisement -

இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் தங்களுடைய அணிக்கு ஆலோசகராக செயல்பட்டதற்காக அஜய் ஜடேஜா ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை என்று ஆப்கானிஸ்தான் வாரியம் பாராட்டியுள்ளது. அத்துடன் கீழே கிடக்கும் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடி மேலே வந்தால் அதுவே தமக்குப் போதும் என்று ஜடேஜா சொன்னதாகவும் தெரிய வந்துள்ளது.

இது பற்றி ஆப்கானிஸ்தான் வாரியத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் நசீப் கான் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நாங்கள் பலமுறை வலியுறுத்தினோம். ஆனால் 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் எங்களுடன் வேலை செய்ததற்காக ஆப்கானிஸ்தான் வாரியத்திடமிருந்து ஜடேஜா எந்த பணத்தையும் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்”

இதையும் படிங்க: இந்தியாவுக்காக இதை செஞ்சுட்டா.. வாசிம் அக்ரமுக்கு பின் பும்ராவை ஆசியாவின் மகத்தான பவுலரா கொண்டாடுவாங்க.. பாலாஜி

“நீங்கள் நன்றாக விளையாடினால் அதுவே என்னுடைய பணம். அந்த பரிசை தான் நான் உங்களிடமிருந்து பெற விரும்புகிறேன் என்று ஜடேஜா எங்களிடம் சொல்லி விட்டார்” எனக் கூறினார். அந்த வகையில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு ஜடேஜா பணம் வாங்காமல் உதவியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியை ஆப்கானிஸ்தான் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -