75க்கு ஆல் அவுட்.. வலுவான நியூஸிலாந்தை ஓடவிட்ட ஆப்கானிஸ்தான்.. புதிய சரித்திரத்தை எழுதி.. உலக சாதனை வெற்றி

- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் ஜூன் 8ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு கயானா நகரில் 14வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கும் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்கள் ரஹமனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜாட்ரன் ஆகியோர் நியூசிலாந்துக்கு சவாலை கொடுத்தனர். அந்த வகையில் 103 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி ஆப்கானிஸ்தானுக்கு அபார துவக்கத்தை கொடுத்தது. அதில் குர்பாஸ் 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 80 (56) ரன்கள் குவித்து போல்ட் வேகத்தில் அவுட்டானார்.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் சரித்திர வெற்றி:
அடுத்த சில ஓவரில் மறுபுறம் தடுமாறிய இப்ராஹிம் 44 (41) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்களில் அசமத்துல்லாஹ் 22 (13) ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததால் 20 ஓவரில் ஆப்கானிஸ்தான் 159/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்ட் ஹென்றி மற்றும் ட்ரெண்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 160 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு பின் ஆலனை கோல்டன் டக் அவுட்டாக்கிய பரூக்கி மற்றொரு துவக்க வீரர் டேவோன் கான்வேயை 8 ரன்களில் காலி செய்தார். அதோடு நிற்காத அவர் அடுத்ததாக வந்த டேரில் மிச்சேலை 5 ரன்களில் அவுட்டாக்கினார். அப்போது வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 9 (13) ரன்கள் ரசித் கான் சுழலில் ரசிக்கினார்.

- Advertisement -

அதனால் 33/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய நியூசிலாந்துக்கு மிடில் ஓவரில் கிளன் பிலிப்ஸ் 18, மார்க் சேப்மேன் 0 என அடுத்து வந்த வீரர்களும் வந்த வாக்கிலேயே சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். அதனால் 15.2 ஓவரில் நியூஸிலாந்தை 75 ரன்களுக்கு சுருட்டி ஆப்கானிஸ்தான் 84 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. இதன் வாயிலாக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது.

இதையும் படிங்க: வெறும் 137 ரன்ஸ்.. அயர்லாந்தை ஆட்டிப்பார்த்த கனடா.. டி20 உலகக் கோப்பையில் வரலாற்று வெற்றி

அத்துடன் டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து அணி என்ற உலக சாதனையும் ஆப்கானிஸ்தான் நிகழ்த்தியது. இதற்கு முன் 2014 உலகக் கோப்பையில் இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிராக 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனையாகும். அந்தளவுக்கு மிரட்டிய ஆப்கானிஸ்தான் சார்பில் கேப்டன் ரசித் கான் 4, பாரூக்கி 4, முகமது நபி 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Advertisement