அவங்க 2 பேரும் சேர்ந்து பேட்டிங் செஞ்சா 6 ஓவரில் 120 ரன்கள் வரும் – கவாஸ்கரை கவர்ந்த 2 இந்திய சரவெடி வீரர்கள்

gavaskar
- Advertisement -

ரசிகர்களை கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மகிழ்வித்து வந்த ஐபிஎல் 2022 தொடர் பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த த்ரில்லர் போட்டிகளுடன் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றுள்ளது. இந்த வருடம் 10 அணிகள் பங்கேற்றதால் கோப்பையை வெல்ல கடும் போட்டி நிலவியது. அதில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அந்த நிலையில் மே 29இல் அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் முதல் வருடத்திலேயே சொந்த மண்ணில் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

Gujarat Titans GT Champ

- Advertisement -

இதை தொடர்ந்து வரும் ஜூன் 9-ஆம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா களமிறங்க உள்ளது. அதில் தற்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அசத்திய உம்ரான் மாலிக், அர்ஷிதீப் சிங் போன்ற இளம் வீரர்கள் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பினிஷர் யார்:
அதை தொடர்ந்து தென்ஆப்பிரிக்க தொடரில் விளையாடுவதற்காக ஜூன் 5-ஆம் தேதி டெல்லியில் ஒன்று சேரும் இந்திய வீரர்கள் அதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர். ஜூன் 9, 12, 14, 17, 19 ஆகிய தேதிகளில் டெல்லி, கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்கோட், பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெறும் இந்த தொடரில் ரோகித் சர்மா போன்ற மூத்த வீரர்களுக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் கேஎல் ராகுல் தலைமையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் கேப்டனாக தற்போது சாம்பியன் பட்டம் வென்ற ஹர்திக் பாண்டியா மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் தென் ஆப்ரிக்க தொடரில் இந்தியாவின் பினிஷர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக அட்டகாசமான பேட்டிங் செய்து 183 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை தெறிக்கவிட்ட தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 3 வருடங்கள் கழித்து இந்திய அணியில் தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் – பாண்டியா:
அப்படிப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்டியாவுடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக அவரின் திறமையை சோதிக்க இந்த தொடரில் 5 போட்டிகளில் முழு வாய்ப்பு அளிக்கவில்லை என்றாலும் தேவையான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் நம்பப்படுகிறது. இந்நிலையில் தென் ஆப்ரிக்க தொடரில் 5, 6 ஆகிய ஃபினிஷிங் இடங்களில் ரிஷப் பண்ட், ஹர்டிக் பாண்டியா ஆகியோர் விளையாடினால் கடைசி கட்ட ஓவர்களில் வெளுத்து வாங்கி 6 ஓவரில் 120 ரன்களைக் கூட எளிதாக அடிப்பார்கள் என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Gavaskar

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் 5 அல்லது 6-வது இடத்தில் களமிறங்குவார் என்று நினைக்கிறேன். ஒருவேளை ஹர்டிக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் 5, 6 ஆகிய இடங்களில் விளையாடுவதாக வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் லேசாக அதிரடியை காட்டினாலே 14 – 20 வரையிலான ஓவர்களில் மிரட்டல் ஜோடியாக எதிரணி திணறடிப்பார்கள். அவர்கள் களத்தில் இருந்தால் 6 ஓவர்களில் 100 – 120 ரன்களை நீங்கள் எந்தவித தயக்கமுமின்றி எதிர்பார்க்கலாம். அவர்கள் அதைச் செய்யக் கூடியவர்கள். எனவே இது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளதால் 5, 6 ஆகிய இடங்களில் ரிஷப் பண்ட் – ஹர்திக் பாண்டியா விளையாடுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

அவர் கூறுவது போல இந்த ஐபிஎல் தொடரில் டெல்லியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் 340 ரன்களை 151.79 என்ற சூப்பரான ஸ்டிரைக் ரேட்டில் அடித்தார். அதைப்போல் ஹர்திக் பாண்டியா பொறுப்பான கேப்டனாக விளையாடியதால் 130 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார்.

dinesh

இருப்பினும் இந்தியாவிற்காக அவர் சாதாரண வீரராக விளையாடுவார் என்பதால் இந்த 2 வீரர்களும் கடைசி நேரத்தில் களமிறங்கி தென் ஆப்பிரிக்காவை வெளுத்து வாங்குவதை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எது எப்படி இருந்தாலும் இந்த தொடரில் தினேஷ் கார்த்திக் உட்பட அனைவருக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பளிக்கப்படும் என்று உறுதியாக நம்பலாம். அதில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்கள் அடுத்த தொடர்களில் தேர்வாக அதிக வாய்ப்புள்ளது.

Advertisement