தனி ஒருவனாக போராடிய ஆண்ட்ரே ரசல் போராட்டம் வீண் ! கொல்கத்தாவை குஜராத் சாய்த்தது எப்படி தெரியுமா

Andrew Russell 2.jpeg
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 23-ஆம் தேதி 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 35-ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நவி மும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்ததை அடுத்து களமிறங்கிய அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தொடக்க வீரர் சுப்மன் கில் 7 (5) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றொரு தொடக்க வீரர் ரித்திமான் சாஹா உடன் இணைந்து தனது அணியை மீட்டெடுக்க அதிரடியாக பேட்டிங் செய்தார்.

பொறுப்புடனும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் குவித்து தங்களது அணியை மீட்டெடுத்த போது 25 (25) ரன்கள் எடுத்து சஹா ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேவிட் மில்லர் அதிரடியாக 1 பவுண்டரி 2 சிக்சருடன் 27 (20) ரன்கள் எடுத்து அவுட்டானார்.

- Advertisement -

அசத்திய பாண்டியா, மிரட்டிய ரசல்:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக பேட்டிங் செய்த ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி 2 சிக்சருடன் 67 (49) ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்த வீரர்கள் கடைசி ஓவரை வீசிய ரசலின் அதிரடி பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்த குஜராத் 156 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசல் 4 விக்கெட்டுகளையும் டிம் சவுதி 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 157 என்ற சுலபமான இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு சாம் பில்லிங்ஸ் 5 (5) சுனில் நரேன் 4 (4) நிதிஷ் ராணா 2 (7) என டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் 12 (15) அவுட்டாகி அதைவிட மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 34/4 என திண்டாடிய கொல்கத்தா ஆரம்பத்திலேயே தோல்வியின் பிடியில் சிக்கி தடுமாறியது.

- Advertisement -

தனி ஒருவன் ரசல்:
அந்த நிலையில் அதிரடி காட்டிய இளம் வீரர் ரிங்கு சிங் 4 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 35 (28) ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்து ஆட்டமிழந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் வெங்கடேஷ் ஐயரும் 17 (17) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இதனால் கொல்கதாவின் தோல்வி உறுதியான நேரத்தில் களமிறங்கிய அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரசல் நான் இருக்கும் வரை கைவிட மாட்டேன் என்பது போல் தனக்கே உரித்தான பாணியில் சரவெடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

யார் போட்டாலும் அடிப்பேன் என்பது போல் மிரட்டலாக பேட்டிங் செய்த அவர் வெறும் 25 பந்துகளில் 1 பவுண்டரி 6 சிக்சர் உட்பட 48 ரன்களை விளாசி கொல்கத்தாவை வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்தார். அவருக்கு உறுதுணையாக உமேஷ் யாதவ் 15* (15) ரன்கள் எடுக்க கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்திலேயே சிக்சரை அடித்த ரசல் 2-வது பந்தில் துரதிர்ஷ்டவசமாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதோடு கொல்கத்தாவின் வெற்றியும் பறிபோகும் வகையில் 20 ஓவர்களில் 148/8 ரன்களை மட்டுமே எடுத்த அந்த அணி போராடி தோல்வியடைந்தது. குஜராத் சார்பில் பந்துவீச்சில் முகமது சமி, யாஷ் தயால், ரஷீத் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.

குஜராத் முதலிடம்:
மொத்தத்தில் பந்து வீச்சில் அதுவும் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 6 சிக்ஸர்கள் உட்பட 48 ரன்கள் எடுத்து ஆல் ரவுண்டராக கொல்கதாவின் வெற்றிக்கு தனி ஒருவனை போல போராடிய ஆண்ட்ரே ரசலின் அதிரடி ஆட்டம் கடைசி வரை வீணாய் போனதால் கொல்கத்தா ரசிகர்களை சோகமடைந்தனர். இந்த தோல்வியால் இந்த வருடம் பங்கேற்ற 8 போட்டிகளில் 5-வது தோல்வியை பதிவு செய்த கொல்கத்தா புள்ளி பட்டியலில் 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

மறுபுறம் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே தேவையான நேரங்களில் கச்சிதமாக செயல்பட்ட குஜராத் வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. இதனால் இந்த வருடம் பங்கேற்ற 7 போட்டிகளில் 6 வெற்றிகள் ஒரே ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகளை பெற்றுள்ள அந்த அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு பந்துவீச்சில் 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ரஷித் கான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Advertisement