இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது டி20 போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சுக்கு எதிராக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்தது.
எவின் லீவிஸ் சாதனையை முறியடித்த அபிஷேக் சர்மா :
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக இந்த போட்டியில் அபிஷேக் சர்மா 59 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 68 ரன்களையும் குவித்தனர். பின்னர் முதல் பாதி முடிந்த பிறகு மழை பெய்ததன் காரணமாக போட்டியின் இரண்டாம் பாதி நடைபெறாமல் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய அபிஷேக் சர்மா 24 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 59 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவர் இந்த போட்டியில் நான்கு சிக்ஸர்களை அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அப்படி அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஏற்கனவே சர்வதேச டி20 போட்டிகளில் 98 சிக்ஸர்களை விளாசியிருந்த அபிஷேக் சர்மா நேற்றைய போட்டியின் மூன்றாவது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை விளாசியதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 100 சிக்சர்களை பூர்த்தி செய்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
இதையும் படிங்க : அயர்லாந்து கிட்ட தோத்துட்டோம்னு நம்ம பிளேயர்ஸ் பத்தி தப்பா பேசக்கூடாது – அஷ்வின் கருத்து
அதுமட்டும் இன்றி இந்த 100 சிக்ஸர்களை அடிக்க குறைவான பந்துகளை எடுத்துக் கொண்ட சர்வதேச வீரராகவும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லீவிஸ் 789 பந்துகளில் 100 சிக்சர்களை அடித்திருந்த வேளையில் அவரது சாதனையை தகர்த்த அபிஷேக் சர்மா 785 பந்துகளில் 100 சிக்ஸர்களை விளாசி அவரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.



