தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 30ஆம் தேதி துவங்கியது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு அதிரடி காட்ட முயற்சித்த ஜெய்ஸ்வால் 18 (16) ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
மறுபுறம் நம்பிக்கை நட்சத்திரம் ரோஹித் சர்மா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். எதிர்ப்புறம் வந்த விராட் கோலி தமது பங்கிற்கு தென் ஆப்பிரிக்க பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டார். கடைசியாக ஆஸ்திரேலியாவின் சிட்னி ஒருநாள் போட்டியில் அவுட்டாகாமல் இந்தியாவை வெற்றி பெற வைத்த அந்த ஜோடி இப்போட்டியிலும் தங்களுடைய அனுபவத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தது.
ஹிட்மேன் உலக சாதனை:
அந்த ஜோடியில் அரை சதத்தை அடித்த ரோஹித் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 57 (51) ரன்கள் குவித்து மார்கோ யான்சென் வேகத்தில் விக்கெட்டை இழந்தார். இந்த 3 சிக்ஸரையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடி வாழ்நாள் சாதனையை உடைத்த ரோஹித் புதிய உலக சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா (இந்தியா): 352*
2. ஷாஹித் அப்ரிடி (பாகிஸ்தான்): 351
3. கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்): 331
4. சனாத் ஜெயசூர்யா (இலங்கை): 270
3. எம்எஸ் தோனி (இந்தியா): 229
சொல்லப்போனால் ஷாஹித் அப்ரிடி 369 இன்னிங்ஸில் 351 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்திருந்தார். ஆனால் இந்தியாவின் ரோகித் சர்மா வெறும் 269 இன்னிங்ஸிலேயே 352 சிக்ஸர்கள் அடித்து அவருடைய வாழ்நாள் சாதனையை உடைத்துள்ளார். அத்துடன் விராட் கோலியுடன் சேர்ந்து அவர் 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்.
இந்தியா அசத்தல்:
அதையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் 2வது அதிக முறை 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற இலங்கையின் குமார் சங்ககாரா – திலகரத்னே தில்ஷான் சாதனையை விராட் கோலி – ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்கள். அந்த 2 ஜோடிகளுமே 20 முறை 100க்கும் மேற்பட்ட ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனையை பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.
இதையும் படிங்க: 392 போட்டிகள்.. சச்சின் – டிராவிட்டை முந்திய விராட் – ரோஹித்.. இந்தியாவின் வரலாற்று ஜோடியாக சாதனை
இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் – சௌரவ் கங்குலி ஜோடி 26 முறை 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அந்த உலக சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. தொடர்ந்து நடைபெறும் போட்டியில் மறுபுறம் அசத்தும் விராட் கோலி அரை சதத்தைக் கடந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதனால் இப்போட்டியில் இந்தியா 180 ரன்கள் கடந்து அசத்தி வருகிறது.



